போர் முடிவிற்கு வரலாம் என்ற நல்லெண்ணம் தோன்றியுள்ளது
மெரினா ராஜ் - வத்திக்கான்
அமெரிக்க அரசுத்தலைவர் ஜோ பைடனின் எதிர்பாராத உக்ரேன் பயணம் உலகிற்கு ஆச்சரியத்தையும் அடையாளத்தையும் கொடுத்துள்ளதாகவும், போர் முடிவுக்கு வரலாம் என்ற நேர்மறையான எண்ணத்தை அனைவருக்கும் தோற்றுவித்துள்ளதாகவும் உக்ரேனிய கத்தோலிக்க தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உக்ரேனின் கீவ் வந்தடைந்த அரசுத்தலைவர் பைடன், ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக உக்ரேன் அரசுத்தலைவர் செலன்ஸ்கியை, மரின்ஸ்கி அரண்மனையில் சந்தித்த நிலையில் அதைக்குறித்து உள்ளூர் செய்திகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளனர் உக்ரேனிய கத்தோலிக்க தலைவர்கள்.
"உடன்இருப்பை விட வலிமையானது எதுவும் இல்லை என்பதற்கேற்ப, அரசுத்தலைவரின் உடன்இருப்பானது, நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது என்றும், உக்ரேனிய மக்கள் மீது அமெரிக்கா காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் என்றும் நன்றியுள்ளவர்களாக உக்ரேனிய மக்கள் இருப்பார்கள் என்றும் பேராயர் Gudziak தெரிவித்துள்ளார்.
"ஒரு வருடம் கழித்து, கியேவ் மற்றும் உக்ரேன் துணிந்து நிற்கின்றது. ஜனநாயகம் நிற்கின்றது. அமெரிக்கர்கள் உங்களுடன் நிற்கிறார்கள், உலகம் உங்களுடன் நிற்கிறது," என்று கூறிய அரசுத்தலைவர் பைடனின் வருகை "மிகவும் துணிச்சலான நடவடிக்கை" என்று உக்ரைனிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான யூஜின் லூசிவ் கூறியுள்ளார்.
போரின் போது கிறிஸ்தவ ஆலயங்கள் மருத்துவமனைகளாக செயல்பட்டு வந்ததை எடுத்துரைத்த லூசிவ் அவர்கள், பல நூற்றாண்டுகளாக உக்ரேன் எத்தனை முறை தாக்கப்பட்டாலும் அது துணிந்து நிற்கின்றது என்றும், கூடிய விரைவில் நாட்டிற்கு அமைதி திரும்ப வேண்டும், அனைத்து வலிமையுடன் நாடு வெற்றிபெற வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
பைடனின் வருகை " உலகளாவிய மாற்றத்தின் மையமாக உள்ள உக்ரேனை இன்று பல அமெரிக்கர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்ல உதவும்" என்று நம்புவதாகவும் பேராயர் குட்சியாக் கூறியுள்ளார்.
உக்ரேன் வெற்றிபெறும் "கொடுங்கோன்மை மற்றும் சர்வாதிகாரிகள் தாழ்த்தப்படுவதை உறுதி செய்யும்" என்றும் "புடின் மட்டுமல்ல, மற்ற சர்வாதிகாரிகளின் ஏகாதிபத்தியமும் காலனித்துவமும் விரைவில் தகர்க்கப்படும் என்றும் பேராயர் குட்சியாக் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்