தேடுதல்

படிப்பினைகள் வழங்கும் இயேசு படிப்பினைகள் வழங்கும் இயேசு  

பொதுக் காலம் 7-ஆம் ஞாயிறு : ‘தூயோராய் வாழ்வோம்!’

இயேசுவின் வழியில் பகைமையை மறந்து பழிவாங்கும் குணத்தை விடுத்து அனைவரையும் மன்னித்து ஏற்று வாழ்வோம்
ஞாயிறு சிந்தனை 18022023

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.    லேவி 19: 1-2, 17-18    II.   1 கொரி  3: 16-23      III.  மத் 5: 38-48)    

இன்று நாம் பொதுக் காலத்தின் ஏழாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் ‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ அதாவது, ‘பழிக்குப் பழி’ என்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடாமல், அனைத்தையும் மறந்து மன்னித்து ஏற்று நம் ஆண்டவராம் கடவுளைப் போல தூயோராய் வாழ்வதற்கு அழைப்பு விடுகின்றன.

"கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்" என்று தண்டனைகள் இருந்தால்தான் குற்றங்கள் குறையும் என்று வாழ்ந்தார் ஒரு மன்னர். பேச்சில் மட்டுமல்ல. செயலிலும் அதை நடைமுறைப்படுத்தி இந்தப் பழமொழியைச் சொல்லும்போதெல்லாம் தன்னை திரும்பிப் பார்க்க வைத்த பெருமை மெசொப்பொத்தேமியா  மன்னர் ஹாமுராயிக்கு உண்டு. இவர் 1764-ஆண்டில் ஆட்சி அரியணையில் அமர்ந்ததும் முதன் முதலாகத் தண்டனைச் சட்டங்களைக் கடுமையாக்கி அரசாணை பிறப்பித்தார். அடித்தவருக்குப் பதிலுக்குத் திருப்பி அடி கொடுத்தே ஆக வேண்டும். இதுதான் இவருடைய நீதிமன்றத் தீர்ப்பு. பாலியல் குற்றம், திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, ஊழல் இப்படி எல்லா குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் இவருடைய ஆட்சியில் மரண தண்டனைதான் கொடுக்கப்பட்டது. கலப்படம் செய்தவர்களுக்கும் கூட மரண தண்டனைதானாம். கலப்படத்துக்குமா.?... என்று நாம் அதிர்ச்சியடைய வேண்டாம். அவரைப் பொறுத்தளவில் கலப்படம் என்பது ஒரு மாபெரும் குற்றமாகக் கருதப்பட்டது. அந்நாட்டு மக்கள் விரும்பி அருந்தும் மதுவான பீரில் கலப்படம் செய்தால் அம்மன்னர் பொறுத்துக் கொள்ளவே மாட்டாராம். கலப்படக்காரரிடம் எந்தவித மறுகேள்வியும் கேட்காமல் உடனே தூக்குத் தண்டனை நிறைவேற்றிவிடுவார். அப்பாவை மகன் அடித்துவிட்டால், அதே இடத்தில் திருப்பி அடிப்பதுதான் தண்டனை. எந்த இடத்தில் அடித்தாரோ அந்த இடத்தில் அடிக்க வேண்டும். இதுதான் மகனுக்குக் கொடுக்கப்படும் தண்டனை. மருத்துவமனையில் மருத்துவரின் கவனக் குறைவால் கத்தரிக்கோலை வைத்தேன்...பஞ்சை வைத்தேன்... ஊசியை வைத்தேன்... என்று சொல்லித் தப்பிக்க முடியாது. அதற்கும் தூக்குத் தண்டனைதான் என்று நாம் நினைக்கலாம். அதற்குத் தூக்குத் தண்டனை கிடையாதாம். இந்த விரல்களால்தானே நீ தவறு செய்தாய். நீ இனி மருத்துவம் பார்த்ததுபோதும் என்று அம்மருத்துவரின் விரல்களையே வெட்டச் சொல்லிவிடுவாராம். பாதிக்கப்பட்டவர் அதைவிட கொடுமையை அனுபவித்திருப்பாரே என்ற கண்ணோட்டத்தில்தான் இந்தத் தண்டனைகளை வழங்கியிருக்கின்றார் அம்மன்னர்.

குற்றம் செய்தவருக்கே இவ்வளவு பெரிய தண்டனை வழங்குகிறவர் குற்றமே நடைபெறாமல் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் காவலர்கள் குற்றம் செய்தால் விட்டுவிடுவாரா என்ன! ஒரு இடத்தில் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றவாளியைப் பிடித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அந்தக் காவலருக்குத் தண்டனை வழங்கப்படும். பணியிலிருந்து ஓய்வு கொடுத்து நீர் காவல் காத்தது போதும் என்று  நிரந்தர ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுவாராம். ஒருவரைத் தாடையில் குத்தி அவர் பல்லை உடைத்துவிட்டால் தண்டனை பதிலுக்குப் பல் உடைப்புதான். உடைத்தவர் பல்லை உடைத்தே தீரவேண்டும்.  குற்றங்கள் குறைந்து  குடிமக்கள் அச்சமின்றி, மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அதற்காகத்தானே சட்டங்கள். நல்ல சட்டங்கள் நல்ல சமூகத்தை உருவாக்கும் என்பது அம்மன்னரின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும். நாம் கேட்ட இவையாவும் 1900-ஆம் ஆண்டு அகழ்வாராய்சியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் உள்ளன. அந்தக் கல்வெட்டு பிரான்சின் லூவர் பொருட்காட்சி சாலையில் இன்றும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.  

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில் கைதியாகப் பிடிக்கப்பட்ட போர்கைதிகள் எவ்வளவு கொடூரமாக வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்பதை காணொளிக் காட்சிகளில் கண்டோம். குறிப்பாக, பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், இசைப்பிரியா ஆகியோரின் படுகொலைகள் நம் நெஞ்சைப் பதறவைத்தன. இவையாவும் உச்சக்கட்ட மனித உரிமை மீறல் ஆகும். கடந்த ஓராண்டாக உக்ரைன்மீது இரஷ்ய நிகழ்த்திவரும் போரில் எத்தனை அப்பாவி பொது மக்களும் போர்வீர்களும் மனிதத்தன்மையற்ற முறையில் கொல்லப்பட்டனர் என்பதையும் நாம் அறிவோம். இன்று உலக நாடுகளின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்துவரும் வன்முறைச் சம்பவங்கள், தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் யாவும் கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ நடவடிக்கைகள்தாம். இவற்றை மனதில் கொண்டவர்களாய் இன்றைய வாசகங்கள் கூறும் வாழ்வியல் நெறிமுறைகளைக் குறித்துச் சிந்திப்போம். இப்போது முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம். ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; தூயோராய் இருங்கள். ஏனெனில், உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்து கொள். பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!

‘நான் தூயவராய் இருப்பதுபோல நீங்களும் தூயோராய் இருங்கள்’ என்பதுதான் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த அழைப்பு. பகைமை, வெறுப்பு, பழிக்குப்பழி இவற்றிற்குத் தான் எதிரானவர் என்பதையும், இதுவே தூய வாழ்வு வாழ்வதற்கான வழி என்பதையும் எடுத்துக்காட்டுகின்றார் கடவுள். இன்றைய இரண்டாம் வாசகத்தில், “நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஓருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில், கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்” என்ற வார்த்தைகள் சிந்திக்கத்தக்கவை. நாம் ஒவ்வொருவரும் கடவுளின் கோவிலாகச் சிறந்து விளங்குகின்றோம், அப்படியென்றால் தூயவராம் கடவுளைத் தாங்கியுள்ள நாம் அனைவரும் தூய மக்களாக வாழவேண்டும் என்று அழைப்பு விடுகின்றார் புனித பவுலடியார். மேலும், “மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா, ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே” என்ற பவுலடியாரின் வார்தைகள் கொரிந்து நகர் மக்களிடையே விளங்கிய பகைமை உணர்வையும் சண்டை சச்சரவுகளையும், பிரிவினைகளையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இதன் காரணமாகத்தான், “நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்? ஏனெனில், ஒருவர் “நான் பவுலைச் சார்ந்துள்ளேன்” என்றும் வேறொருவர் “நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்” என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப்போக்கில்தானே நடக்கிறீர்கள்? அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே! (காண்க 1கொரி 3:3-5). என்றுரைக்கின்றார். ஊனியல்பின் செயல்கள் அதாவது, தீய ஆவியின் செயல்கள் பகைமை உணர்வு மற்றும் வன்முறைகளைத் தூண்டக்கூடிய தீய நோக்கம் கொண்டவை. அலகையின் அடிப்படை நோக்கமே தூய வாழ்வுக்கு எதிராகப் பிளவுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்துவதுதான். 'கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்' என்பதுதான் தீய ஆவியின் (அலகையின்) வழி, ஆனால், தூய ஆவியின் வழியோ அகிம்சை வழி. அதாவது, நல்லிணக்கம் மற்றும், ஒப்புரவின் வழி, இதனைக் கருத்தில்கொண்டுதான் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் ஊனியல்பின் (தீய ஆவி) செயல்களையும், தூய ஆவியின் செயல்களையும் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறார் புனித பவுலடியார். ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். ஆனால், தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும் (கலா 3: 19-23)

இன்றைய நற்செய்தியில் இயேசு பகைமையுணர்வை விடுத்து அன்புகூர அழைக்கின்றார். மத்தேயு நற்செய்தி ஐந்தாம் அதிகாரத்தில் 21 முதல் 48 வரை உள்ள இறைவசனங்களில் இயேசுவின் புதிய அணுகுமுறையைக் காண்கின்றோம். சினங்கொள்ளுதல், விபசாரம், ஆணையிடுதல், பழி வாங்குதல், பகைவரிடம் அன்பாயிருத்தல் ஆகிய ஐந்து தலைப்புகளின் கீழ் வரும் அறிவுரைப் பகுதிகளில், 'முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்ற ஐந்து முறை கூறுவதைப் பார்க்கின்றோம். இந்தப் படிப்பினைகள் வழியாகப் பழையவற்றிலிருந்து புதியவற்றிற்கு மாறவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகின்றார் இயேசு.

ஒரு பெரிய 5 நட்சத்திர விடுதியில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு சிறப்பித்த பிறகு உணவு விருந்தில் கலந்து கொண்டார் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவர் நெல்சன் மண்டேலா. அவர் உணவு அருந்திகொண்டிருந்தபோது, அங்கே அவருக்கு எதிரே சற்று தூரத்தில் தனியாக ஒருவர் பயத்துடன் சாப்பிட்டு கொண்டிருந்தார். அதனை கவனித்த காவலர் மண்டேலாவிடம், "ஐயா உங்களுக்கு எதிரே உள்ள மேசையில் தனியாக அமர்ந்து உண்ணும் அம்மனிதர் உங்களைப் பார்த்து சற்று பயத்துடன் உணவு அருந்துகிறார்" என்று தெரிவித்தார். “அப்படியா, அவரை உடனே என்னருகில் அழைத்து வாருங்கள்” என்று காவலரிடம் உத்தரவிட்டார் மண்டேலா. அவரும் அவ்வாறே செய்தார். அந்த நபர் சற்று தயக்கத்துடன் வந்து மண்டேலாவிற்கு அருகில் அமர்ந்து உணவு அருந்தத் தொடங்கினார். ஆனால், அவர் மண்டேலாவின் முகத்தை பார்க்கத் துணியாமல், தயக்கத்துடன் கீழே குனிந்தபடியும், மிகுந்த படபடப்புடனும் உணவு உண்பதை கவனித்த காவலர் மீண்டும் மண்டேலாவிடம் "ஐயா அரசுத் தலைவராகிய உங்களின் அருகில் அமர்ந்து சாப்பிடுவதில் அவருக்கு ஒருவித தயக்கமும், பயமும் இருக்கிறது போல் தெரிகிறது. நீங்கள் விரும்பினால் அவரை வேறு ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிடச் செய்யட்டுமா" என்று மீண்டும் கேட்டார்.

அதற்கு மண்டேலா, "வேண்டாம் அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர்தான் என்றார். பின் தன் அருகில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தவரிடம், "பயப்படாமல் பொறுமையாக சாப்பிடுங்கள் ஐயா" என்றார். அப்போது மீண்டும் அந்தக் காவலர், "அவர் உங்களுக்கு நன்கு தெரிந்தவர் என்றால், பிறகு ஏன் அவர் உங்களுடன் அமர்ந்து சாப்பிடுவதில் பயமும், பதட்டமும் கொள்ளவேண்டும்" என்று வினவினார். அதற்கு மண்டேலா  புன்முறுவலுடன் "நான் 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கையை அனுபவித்த தருணத்தில் சிறை அதிகாரிகள் பலரிடம் பல முறை அடிவாங்கி இருக்கிறேன். அவர்களில் என்னருகே அமர்ந்து உண்ணும் இவரும் ஒருவர். சிறையில் என்னை மிகவும் கொடுமையாகத் தாக்கக்கூடியவர். இவர், தொடர்ந்து 4 மணி நேரம் என்னை சிறையில் அடித்து உதைத்திருக்கிறார். மேலும், அடிதாங்க முடியாமல் ஒரு முறை தண்ணீர் கேட்டதற்கு இவர் தன் சிறுநீரை என் மீது பாய்ச்சினார். தற்போது நான் அரசுத் தலைவர் என்பதால் எதாவது அவருக்குத் தண்டனை விதித்து பழிதீர்த்து விடுவேனோ என்ற அச்சத்தில்தான் பயப்படுகிறார்" என்றார். அப்போது அந்தக் காவலர் கோபத்துடன் "பிறகு ஏன் சார் அவருக்கு தண்டனை ஏதும் அளிக்காமல் உங்களுக்கு நிகராக அமர வைத்து உபசரிக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு மண்டேலா, “காழ்ப்புணர்ச்சியும், பழி வாங்கும் குணமும் தனி மனிதர் ஒருவரிடமோ அல்லது தேசத்திடமோ இருந்தால் அங்கே வளர்ச்சி இருக்க முடியாது, அதேநேரத்தில் அனைவரையும் அரவணைக்கும் நற்குணம் ஒருவரிடம் இருக்குமேயானால் ஒரு மாபெரும் அரசையே உருவாக்கலாம். அந்த வகையில் என்னுடைய சமாதானத்தைதான் அவரிடம் வெளிப்படுத்தினேன்" என்று கூறி அந்தச் சிறை அதிகாரியைப் பார்த்து புன்னகைத்தபடி அங்கிருந்து எழுந்து சென்றார் மண்டேலா. அப்போது, அந்தச் சிறை அதிகாரியின் கண்கள் கண்ணீரால் நிரம்பின.

இவ்வுலகின் வரலாற்றில் எத்தனையோ மாபெரும் தலைவர்கள் எல்லாம் மன்னிப்பின் மகத்துவத்தை உணர்ந்து செயல்பட்டபோது, நாமும் அவர்களின் அடியொற்றி நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இயேசுவின் வழியில் பகைமையை மறந்து பழிவாங்கும் குணத்தை விடுத்து அனைவரையும் மன்னித்து ஏற்போம். அதற்கான அருள்வரங்களுக்காக இறைவனிடம் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2023, 12:59