மக்களுக்குப் படிப்பினைகள் வழங்கும் இயேசு மக்களுக்குப் படிப்பினைகள் வழங்கும் இயேசு  

பொதுக் காலம் 6-ஆம் ஞாயிறு : ‘ஆண்டவரின் அகிம்சை வழி ஏற்போம்!’

பகைமைக்கு எதிரான அன்பு, மன்னிப்பு, பணிவு, துணிவு, சகோதரத்துவம் ஆகிய வாழ்வு தரும் வழிகளைத் தேர்ந்துகொண்டு வாழ்வோம்.
ஞாயிறு சிந்தனை 11022023

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.     சீஞா  15: 15-20      II.   1 கொரி  2: 6-10      III.  மத் 5: 17-37)   

இன்று நாம் பொதுக் காலத்தின் ஆறாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நாம் கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து அவருக்கு உகந்த வழியைத் தேர்ந்து கொள்ளவேண்டுமென அழைப்பு விடுகின்றன. இப்போது முதல் வாசகத்தை வாசித்து நமது சிந்தனைகளை விரிவுபடுத்துவோம். நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல் மிக்கவர்; அனைத்தையும் அவர் காண்கிறார். ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்; மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார். இறைப்பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டதில்லை;  பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை.

இன்றைய உலகம் தேர்ந்துகொள்ளும் வழி எது என்று கேட்டால், அது போர்களையும், பகைமையையும், பிரிவுகளையும் உண்டாகும் ஆயுத வழி என்று நாம் உறுதியாகக் கூற முடியும். உலகத்தில் நிகழ்ந்து வரும் சம்பவங்களைக் காணும்போது நாம் இதனை அறிந்தகொள்ள முடிகிறது. இம்மாதம் ஐந்தாம் தேதி, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ அவர்கள், காங்கோ மற்றும் தென்சூடானில் தனது திருத்தூதுப் பயணத்தை முடித்துக்கொண்டு உரோமைக்குத் திரும்பும் வழியில் விமானத்தில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “முழு உலகமும் போரால் தன்னை அழித்துக்கொண்டு வருகிறது” என்றும், “இதனை நாம் சரியான நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்றும் கூறினார். மேலும் ஆப்ரிக்க நாடுகளில் நிகழ்ந்து வரும் வன்முறை குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது, “வன்முறை என்பது ஒரு அன்றாட செய்தியாகிவிட்டது. வன்முறையை தூண்டும் விதத்தைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது” என்றும், “ஆயுத வர்த்தகம்தான் உலகிலேயே மிகப்பெரிய கொள்ளை நோய்” என்று தான் நினைப்பதாகவும், அதனை ஓராண்டிற்கு நிறுத்தினாலே போதும், உலகத்தின் வறுமையைப் போக்கிவிட முடியும்” என்று தன்னிடம் ஒருவர் கூறியதாகவும் கவலையுடன் தெரிவித்தார்.

இன்றைய முதல் வாசகத்தில், ‘உனக்கு முன் வாழ்வும் சாவும்’ அதாவது, நன்மையையும் தீமையும் வைக்கப்பட்டுள்ளன என்று கூறப்படும் அதேவேளையில், எதைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும் என்ற உள்மனச் சுதந்திரமும் நமக்குக் கொடுக்கப்படுகின்றது. இதனைத்தான் 'வாழ்வு உன் கையில்' என்கின்றோம். இணைச்சட்ட நூலில் இஸ்ரயேல் மக்களுக்கு அறிவுரை வழங்கும் கடவுள், இரண்டு வழிகளையும் எடுத்துக்காட்டுவதுடன், ‘வாழ்வு தரும் வழியை தேர்த்துகொள்’ என்று அவரே அம்மக்களை அறிவுறுத்தவும் செய்கின்றார். அப்பகுதியை இப்போது வாசிப்போம். “உன் மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக் கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்” (இச 30:19-20).

இன்றைய நம் இந்தியாவில் எதற்கெடுத்தாலும் தேசவிரோதச் சட்டம் பாய்வதைப் பார்க்கின்றோம். அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அவர் anti Inidan என்று அதாவது, ‘இந்தியாவுக்கு எதிரானவர்’ என்று முத்திரை குத்தப்பட்டு பழிவாங்கப்படுகின்றார். இதன் வழியாகப் பகைமையும் அரசின்மீதான வெறுப்புணர்வுகளும் அதிகரித்துக்கொண்டே போவதாக சமூக நலன் விரும்பிகள் கூறி வருகின்றனர். ஆனால், பகைமையுணர்வை களைவதற்கு உரையாடல் வழியை தேர்ந்துகொள்பவர்கள் வாழ்க்கையில் போற்றப்படுகிறார்கள். சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கு உரையாடலே சிறந்த வழி என்று திருத்தந்தையும் தற்போது அடிக்கடி வலியுறுத்தி வருகின்றார்.

மாவீரர் அலெக்சாண்டரின் தந்தை பிலிப் சிறந்த அறிவாற்றல் மிக்கவராக, வலிமை வாய்ந்த மன்னராக ஆட்சி செய்து வந்தார். அப்போது, அவரது பகுதிக்கு உட்பட்ட ஜமீன்தார் ஒருவர் மன்னர் பிலிப்பை பற்றி எப்போதும் குறை கூறிக் கொண்டே இருந்தார். இது மன்னரின் காதிற்கு எட்டியது. அந்த நாட்டு வழக்கப்படி அது தேசவிரோதம். அந்த ஜமீன்தார் இருக்கும் பகுதிக்குச் சென்ற மன்னர் பிலிப் தன் அமைச்சரிடம், “அந்த ஜமீன்தாரை என்னிடம் கொண்டு வாருங்கள், அவர் என்மேல் கொண்டுள்ள பகைமைக்கு இன்றே ஒரு முடிவு கட்டுகின்றேன்” என்றார். இதை அறிந்த அந்த ஜமீன்தார் மிகவும் பதற்றம் அடைந்தார். தனது இராஜ துரோகச் செயலுக்கு நிச்சயம் மரண தண்டனைதான் கிடைக்கும் என்ற அச்சத்தில் மன்னரைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார்.

ஜமீன்தார் வந்ததும் மன்னர் பிலிப், எல்லா அமைச்சர்களையும் வெளியில் அனுப்பிவிட்டு தனிமையில் அவரைச் சந்தித்தார். அதேவேளையில், மன்னர் ஆணையிட்டதும் மரண தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் வெளியில் தயாராக காத்திருந்தனர். சிறுது நேரம் கழித்ததும் மன்னரும் அந்த ஜமீன்தாரரும் கைகோர்த்துக் கொண்டு புன்முறுவலுடன் வெளியில் வந்தனர். அதைக் கண்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அமைச்சர் ஒருவர், “மன்னா பகைவனை ஒழித்துக் கட்டுவேன் என்றீர்கள். இப்போது அந்தப் பகைவருடன் ஒன்றாகக் கரம்கோர்த்துக்கொண்டு வருகிறீர்களே” என வியப்புடன் கேட்டார். அதற்கு மன்னர், “ஆம், பகைவனை ஒழித்துக் கட்டிவிட்டு அவரிடத்தில் ஒரு புதிய நண்பனை உருவாக்கி விட்டேன். அவர் நல்ல மனிதர், என்னைப் பற்றி தவறான புரிதல் கொண்டிருந்தார். இப்போது நேரில் பேசியதும் எங்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிவிட்டன. என்னைச் சரியாகப் புரிந்து கொண்டதால் அவர் என்மீது கொண்டிருந்த பகை உணர்வுகள் எல்லாம் நீங்கி புதிய நட்பு மலர்ந்துள்ளது” என்றார்.

இயேசுவின்  அகிம்சை வழி

இயேசு அகிம்சை வழியை தேர்ந்துகொண்டார், இவ்வழியாகவே அவர் உலகிற்கு மீட்பைக் கொணர்ந்தார். அவரைப் பின்பற்றும் நாம் அனைவரும் இந்த வழியைத்தான் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகின்றார். இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் அத்தனை படிப்பினைகளும் அகிம்சையின் வழிகளாகவே அமைகின்றன. நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள் என்ற படிப்பினை வழியாக பகைமைக்கு எதிராக அன்புறவை ஏற்படுத்த அழைப்புவிடுக்கின்றார். மேலும், பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் (காண்க மத் 9:13) என்ற கடவுளின் விருப்பத்தை எடுத்துக்காட்டி அதன்படி வாழவும் பணிக்கின்றார். அகிம்சை வழியைக் கடைபிடியுங்கள் என்று இயேசு தனது படிப்பினைகளை வழங்கியது மட்டுமன்றி, அதனை வாழ்வாக்கியும் காட்டினார். இயேசு கெத்சமனித் தோட்டத்தில் கைது செய்யப்பட்டபோது என்ன நிகழ்ந்தது என்பதை இப்போது நம் நினைவுக்குக் கொண்டுவருவோம். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர். உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், “உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்” (காண்க மத் 26:50-52).

இயேசுவிடம் விளங்கிய இந்த அகிம்சை குணமே காந்தியடிகளையும் கவர்ந்திழுத்தது. அதனால்தான், ஆயுதங்கள் வழியாக அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அகிம்சை வழியில் போராடினார் காந்தியடிகள். இதன் காரணமாகவே, வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராக அவரால் இறுதிவரை உறுதியாகப் போராடி வெற்றிபெற முடிந்தது. மேலும், தீண்டாமை, மனித உரிமை மீறல் எனப் பலவற்றிற்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்தார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தியடிகள் இந்தியாவிற்கு வந்தபோது பிகாரில் ஆங்கிலேயத் தோட்ட உரிமையாளர் ஒருவரால் அங்குள்ள விவசாயிகள் மிகவும் வதைத்தொழிக்கப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டார். உடனே அங்குச் சென்று விவசாயிகளையெல்லாம் ஒருங்கிணைத்துத் தங்களின் அடிமைத்தளைக்கு எதிராகப் போராடத் தூண்டினார். இதைப் கேள்விப்பட்ட ஆங்கிலேயத் தோட்ட உரிமையாளர் காந்தியடிகளைத் தேடிக்கொண்டிருந்தார். காந்தியின்மீது தான் கொண்டிருந்த பகைமை உணர்வால் அவரைக் கொன்றுவிட வேண்டுமென்று கூடத் தீர்மானித்திருந்தார். இதை அறிந்த காந்தியடிகள் ஒருநாள் இரவுநேரம் அந்த ஆங்கிலேயர் வீட்டிற்குச் சென்று, கதவைத் தட்டினார். கதவைத் திறந்த அந்த ஆங்கிலேயர், “நீங்கள் யார், உங்களுக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார். காரணம், காந்தியடிகள் யார் என்பதே அவருக்குத் தெரியாது, அதுவரையிலும் அவர் அவரைப் பார்த்ததுகூடக் கிடையாது. அப்போது காந்தியடிகள், “என்னைக் கொல்லவேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களாமே! நான்தான் காந்தியடிகள், என்னைத் தேடும் சிரமம் உங்களுக்கு இருக்கக் கூடாது என்பதற்காக, நானே உங்களைத் தேடிவந்து விட்டேன். இப்போது நீங்கள் விரும்புவதை செய்துகொள்ளுங்கள்” என்றார். இதனைச் சற்றும் எதிர்பாராத அந்த ஆங்கிலேயர் மிகவும் வியந்து, 'இவ்வளவு நல்லவராக இருக்கும் இவரிடம் போய் பகையுணர்வு கொண்டிருக்கிறோமே' என்று எண்ணியவராய் அவரை உள்ளே அழைத்துச்சென்று நன்கு உபசரித்தார். மேலும், தனது செயலுக்காக மிகவும் மனம் வருந்தி அவரிடம் மன்னிப்பும் கேட்டார்.

அகிம்சையைக் கடைபிடிப்பதில் நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டி விடயம் ஒன்று இருக்கின்றது. அதாவது, அகிம்சை வழி என்பது, ‘சிலுவை வழி’ (இடுக்கண் வழி). இயேசு அகிம்சை வழியில் வெற்றிபெறுவதற்கு அளவிட முடியாதத் துயரங்களையும், அவமானங்களையும், பாடுகளையும் அனுபவிக்கவேண்டி இருந்தது. உலகின் பார்வைக்கு இது நகைப்புக்குரியதாகவும், கேலிக்குரியதாகவும் இருக்கலாம். இது உலகியல் பார்வை. அதாவது, இது உலக ஞானம். ஆனால், அகிம்சை வழி (சிலுவை வழி) என்பது இறை ஞானம். இதைத்தான், "சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை" (காண்க 1 கொரி 1:18) என்கின்றார் புனித பவுலடியார். சிலுவை வழி பகைமைக்கும் போருக்கும், வன்முறைக்கும், கலகத்திற்கும், பிரிவினைக்கும் எதிரானது. ஆனால், அன்பிற்கும், மன்னிப்பிற்கும், ஒன்றிப்பிற்கும் ஆதரவானது, இதுதான் இறைஞானம். உலக ஞானம் கொண்டோருக்கு, அதாவது அகிசமையை எதிர்ப்பவர்களுக்கு சிலுவை என்பது மடமை. ஆனால், அதனை ஆதரிப்பவர்களுக்கு சிலுவை என்பது இறைஞானம். அதனால்தான், சிலுவை வழியை தேர்ந்த கடவுள், இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டாரல்லவா என்றும் கூறுகின்றார் புனித பவுலடியார். மேலும், "சகோதர சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால், அது தூயஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே. என்றும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் தெளிவுபடுத்துகின்றார் புனித பவுலடியார்.

ஆகவே, பகைமைக்கு எதிரான அன்பு, மன்னிப்பு, பணிவு, துணிவு, சகோதரத்துவம் ஆகிய வாழ்வுதரும் வழிகளைத் தேர்ந்துகொண்டு வாழ்வோம். ஞானத்தின் ஊற்றாகி தூய ஆவியாரிடம் இத்தகைய அருள்வரங்களுக்காக இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2023, 13:24