திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை எட்டாம் உர்பான்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருத்தந்தை 15ம் கிரகரிக்குப்பின் பதவிக்கு வந்தார் Maffeo Barberini என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை எட்டாம் உர்பான். 1568ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இத்தாலியின் Florence நகரில் பிறந்த இவர், தன் மூன்று வயதிலேயே தந்தையை இழந்தார். இவரும் உரோம் நகர் வந்து இயேசுசபை கல்விக்கூடத்தில் பயின்றார். 1589ல் இத்தாலியின் Pisa நகரில் சமுகவியல் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1592ல் திருத்தந்தை எட்டாம் கிளமென்ட் இவரை Fano நகரின் ஆளுராக நியமித்ததுடன், பிரான்ஸ் மன்னர் 4ஆம் ஹென்றிக்கு 13ஆம் லூயி என்ற மகன் பிறந்தபோது அதற்கு வாழ்த்து தெரிவிக்க, தன் பிரதிநிதியாக இவரைத்தான் அனுப்பினார். பிரான்சுக்கு திருப்பீடப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டு, மன்னர் நான்காம் ஹென்றியுடன் மிகவும் நட்புணர்வுடன் செயல்பட்ட இவர், 1604ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். திருத்தந்தை 15ம் கிரகரி உயிரிழந்தபோது, 1623ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி இவரோடு சேர்த்து 55 கர்தினால்னள் கூடி ஓட்டெடுப்பு அறைக்குள் நுழைந்தனர். இதில் 50 கர்தினால்கள் கர்தினால் Maffeo Barberiniயையே அடுத்த திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். 1623ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதியே இவர் தேர்வு செய்யப்பட்டாலும், உரோமில் பரவியிருந்த விஷக்காய்ச்சல் இவரையும் தாக்கியிருந்ததால் ஏறத்தாழ 50 நாட்களுக்குப்பின் செப்டம்பர் 29ந்தேதிதான் பாப்பிறையாக முடிசூட்டப்பட்டார். இவரும் வெளிநாட்டு மறைபோதக பணிகளுக்கு மிகுந்த ஆதரவளித்தார். மறைபோதகப் பணியாளர்களின் பயிற்சிக்கென உரோம் நகரில் உர்பான் கல்லூரியை நிறுவியவர் இவரே.
சைனா மற்றும் ஜப்பானில் மறைப்பணி ஆற்றுவதற்கு இயேசுசபையினருக்கு மட்டுமே திருத்தந்தை 15ம் கிரகரி 1585ல் உரிமை கொடுத்திருக்க, இத்திருத்தந்தை எட்டாம் உர்பானோ, அனைத்து துறவு சபையினரும் இந்நாடுகளுக்குச் சென்று மறைபணியாற்ற 1633ல் அனுமதி வழங்கினார். மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்கர்களுக்கென லெபனானில் கல்லூரி ஒன்றை கட்டியெழுப்பியதுடன், பரகுவாய், பிரசில், மற்றும் மேற்கு இந்திய தீவுகள் முழுவதும் பூர்வீகக் குடிமக்களை அடிமைகளாக நடத்துவதை திருஅவை விதி மூலம் தடைச் செய்தார். பல துறவு சபைகளுக்கு அங்கீகாரமளித்து, ஊக்கமளித்தார். இவர் காலத்தில்தான் கலிலேயோ மீதான திருஅவையின் இரண்டாவது விசாரணை இடம்பெற்றது.
இவரும், தான் பாப்பிறை பதவியேற்ற மூன்றுநாட்களில் தன் நெருங்கிய உறவினர் Francesco Barberiniயை கர்தினாலாக்கி,1627ல் வத்திக்கான் நூலகத் தலைவராக்கினார். இன்னொரு நெருங்கிய உறவினர் Antonio Barberiniயை 1627ல் கர்தினாலாக்கியதோடு, பின்னர் பாப்பிறைப்படைகளின் தலைவராக்கினார். இவர் தன் சகோதரனும் கப்பூச்சியன் துறவியுமான அந்தோனியோவுக்கு 1625ஆம் ஆண்டு Senigaglia மறைமாவட்டத்தை வழங்கியதோடு, 1628ல் அவரை கர்தினாலாக உயர்த்தினார். இன்னொரு நெருங்கிய உறவினர் Taddeo Barberiniயை உரோமுக்கு அருகேயுள்ள பலஸ்திரீனா என்ற இடத்தின் இளவரசராகவும், உரோம் நகர் நிர்வாக அதிகாரியாகவும் அறிவித்தார். உறவினர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கியதால், அவர்கள் அனைவரும் திருஅவைச் சொத்துக்களை தங்களது உடமைகளாக்கிக் கொண்டனர். கர்தினால்களை “Eminence" என்று அழைக்கும் முறையை உருவாக்கியவர் இவரே. தன் உறவினர்களுக்காக இத்தாலியின் Parma நகர் கோமகன் Odoardo Farneseயுடன் அநியாய போரை மேற்கொண்டு தோல்வியையும் கண்டார். பெரிய கட்டிடங்களைக் கட்டுவதிலும், படைக்கென ஆயதங்களைப் பெருக்குவதிலும் அதிக பணம் செலவழித்தார். இதற்கிடையே இவரின் உறவினர்களும் திருச்சபைச் சொத்துக்கள் அனைத்தையும் சுரண்டி வாழ்ந்தனர். தனிப்பட்ட வாழ்வில் பக்திநிறைந்த ஆன்மீக மனிதனாக இருந்தபோதிலும், தன் உறவினர்களுக்காக தவறான முடிவுகளை எடுத்து, பெயரைக் கெடுத்துக்கொண்ட திருத்தந்தை எட்டாம் உர்பான், 21 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்தியபின் 1644ஆம் ஆண்டு ஜூலைமாதம் 29ஆம் தேதி உரோம் நகரில் காலமானார்.
நேயர்களே! இவருக்குப்பின் வந்தவர் திருத்தந்தை பத்தாம் இன்னசென்ட். இவர், திருத்தந்தை எட்டாம் உர்பானின் உறவினர்களின் சொத்துக்களை பறித்தெடுத்தார். ஆனால் இவரும் உறவினர்களுக்கு உதவினார் என்பதுதான் வேதனை. இது குறித்து வரும் வாரம் நோக்குவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்