தேடுதல்

உக்ரேனிய எல்லையில் இராணுவ வாகனங்கள்  உக்ரேனிய எல்லையில் இராணுவ வாகனங்கள்   (AFP or licensors)

இனி ஒருபோதும் போர் வேண்டாம் : இத்தாலிய ஆயர் பேரவை

அணுசக்தி அச்சுறுத்தலால் மோசமடைந்துள்ள பன்னாட்டு நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க தூதரக உறவுகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன: இத்தாலிய ஆயர்பேரவை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உண்ணாநோன்பு மற்றும், பிறரன்பு பணிகள் மட்டுமே மக்களின் இதயங்களை மாற்றும் திறன் கொண்ட உண்மையான ஆயுதங்கள் என்பதை தவக்காலம் நமக்கு நினைவூட்டுகிறது என்று கூறியுள்ளனர் இத்தாலிய ஆயர்கள்

உக்ரைன் மீதான இரஷ்யாவின் போர் தொடங்கி பிப்ரவரி 24, இவ்வெள்ளியுடன் ஓராண்டு நிறைவடையும் வேளை, அந்நாட்டிற்காக இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுத்துள்ள CCEE எனப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவையுடன் இணைந்து இவ்வழைப்பை விடுத்துள்ளது இத்தாலிய ஆயர்பேரவை.

மேலும், மார்ச் 10, வெள்ளிக்கிழமையன்று, உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் பொருட்டு, சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி அந்நாட்டிற்காக இறைவேண்டல் செய்ய நம்பிக்கையாளர்களை விண்ணப்பித்துள்ளதுடன், இந்தச் சிறப்பு வழிபாடானது, உக்ரேனிய மக்களுடனான நமது நெருக்கத்தை புதுப்பிக்கவும், அமைதிக்கான நமது ஏக்கத்தை இறைவனிடம் ஒப்படைக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்றும் கூறியுள்ளது  இத்தாலிய ஆயர் பேரவையின் அறிக்கை.

அணுசக்தி அச்சுறுத்தலால் மோசமடைந்துள்ள பன்னாட்டு நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க தூதரக உறவுகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன என்பதை அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள இத்தாலிய ஆயர்பேரவை, உக்ரைன் மீதான இரஷ்ய போரின் ஓராண்டு நிறைவிற்குப் பிறகு, வன்முறைக்கும் அடக்குமுறைகளுக்கும் இடமில்லை என உறுதியாக மீண்டும் மீண்டும் குரல் எழுப்பவும்,  இனி ஒருபோதும் போர் வேண்டாம் என்று  கூறிவும் விரும்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், உக்ரைன் மீதான இரஷ்யாவின் போர் தொடங்கி பிப்ரவரி 24, இவ்வெள்ளியுடன் ஓராண்டு நிறைவடையும் வேளை, உக்ரேனிய தலத்திருஅவைகளும், பல்மத மத அமைப்புகளும் (UCCRO) அந்நாட்டின் அமைதிக்காக தேசிய அளவில் ஒருநாள் உண்ணா நோன்பும் இறைவேண்டலும் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2023, 14:52