நேர்காணல் - அருள்தரும் காலம் தவக்காலம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இறைவனின் அருளை இரக்கத்தை, மன்னிப்பை, ஆசீரை, மீட்பை பெற்றுக்கொள்ள நமக்கு கொடுக்கப்பட்ட காலம் தவக்காலம். இத்தவக்காலத்தில் நாம் நம்மோடும் பிறரோடும் இறைவனோடும் நல்லுறவு கொண்டு உடல், உள்ள,,ஆன்ம நலம் பெற நம்மையே அர்ப்பணிக்க அழைக்கும் காலம். இத்தவக்காலத்தில் அருள்தரும் காலம் தவக்காலம் என்ற தலைப்பில் இன்றைய நேர்காணல் வழியாக தன்னுடைய கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணியாளர் மரிய அந்தோணி ராஜ். பாளையம்கோட்டை மறைமாவட்ட அருள்பணியாளரான தந்தை மரிய அந்தோணி ராஜ் அவர்கள், தற்போது பாளை மறைமாவட்டத்தில் உள்ள பேட்டை புனித அந்தோணியார் ஆலயத்தின் பங்குப்பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நம்வாழ்வு வார இதழின் இணை ஆசிரியராகவும், வேலாயுத புரம் பங்கில் பங்குப் பணியாளராகவும் பணியாற்றியுள்ளார். எண்ணம் போல் வாழ்க்கை, மகத்தானவர்கள், பேரன்பின் ஊற்று ஆகிய மூன்று நூல்களை எழுதியுள்ளார். மேலும் ஒவ்வொரு நாளும் அன்றன்றைக்குரிய இறைவார்த்தைக்கு மறையுரை எழுதி, அதைப் பலருக்கும் பயன்படும் வகையில் சமூக ஊடகங்கள் வழியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
தவக்காலம் ஒடுக்கும் காலமல்ல ஒடுக்கப்பட்டவர்களை நினைக்கும் காலம். உணவை துறக்கும் காலமல்ல உணவற்றவர்களுக்கு அளிக்கும் காலம். பிறரது குறையைச் சுட்டிக் காட்டும் காலமல்ல நமது குறைகளைக் கண்டறிந்து களையும் காலம். வெளிப்புற அமைதியாயிருக்கும் காலமல்ல ஆண்டவனோடு உரையாட அழைக்கும் காலம். வீட்டின் அறைகளுக்குள் முடங்கிக் கிடக்கும் காலமல்ல, இறைப்பணியை முடிக்கிவிடும் காலம். தீமைகளைக் கண்டறிந்து நீக்கிவிடும் காலமல்ல திறமைகளைக் கண்டறிந்து வளர்க்கும் காலம். மக்களோடும் இறைவனோடும் நம்மோடும் ஒப்புரவாகும் இத்தவக்காலம் வெறும் 40 நாள் பயணம் மட்டுமல்ல. நம் வாழ் நாள் முழுதும் கடைபிடிக்கப்பட. வேண்டிய அருளின் காலம் அருளின் பயணம் என்பதை உணர்ந்து வாழ்வோம். மனம் மாறுவோம் மனிதர்களாய் வாழ்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்