ஹடாய் பகுதியில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
துருக்கியின் ஹடாய் பகுதியில் மீண்டும் ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஏறக்குறைய 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சிரியா, அலெப்போ இட்லிப் ஆகிய இடங்களிலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஆயர் பேரருள்திரு Paolo Bizzeti.
பிப்ரவரி 20 திங்கள் கிழமையன்று துருக்கியின் ஹடாய் பகுதியில் உள்ளூர் நேரம் இரவு 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, 6.4 ரிக்டர் அளவில் முதல் அதிர்வும் அதனைத் தொடர்ந்து 5.8 ரிக்டர் அளவில் இரண்டாவது அதிர்வும் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ள நிலையில் அச்சூழ்நிலை குறித்து ஆசிய செய்திகளுக்கு இவ்வாறு கூறியுள்ளார் d'Anatolia மறைமாவட்டத்தின் ஆயர் பேரருள்திரு Paolo Bizzeti.
"நிலநடுக்கத்தின் சோகம் குறித்து நாம் அமைதி காக்கக் கூடாது" என்று கூறிய ஆயர் Bizzeti அவர்கள், துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கிய சோகம் "விரைவில்" மறக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவுவதாகவும், வரலாறு கற்பிப்பது போல், உணர்ச்சி அலை கடந்துவிட்டால், கவனமும் ஆர்வமும் குறையக்கூடும்" என்றும் எடுத்துரைத்துள்ளார்.
பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட நில நடுக்கத்தினால் 46,000க்கும் மேற்பட்ட இறப்புகளைக் கொண்ட சூழலில், ஏற்கனவே இயற்கைப் பேரழிவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஹடாய் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் இதன் தாக்கம் சைப்ரஸ், லெபனான், ஈராக், பாலஸ்தீனம், இஸ்ரேல், எகிப்து வரை உணரப்பட்டது என்றும் தெரிய வருகின்றது.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த புதிய நடுக்கங்கள் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கிய டெலூரிக் நிகழ்வின் ஒரு பகுதியாகும் என்றும், நில நடுக்கத்தின் அதிர்வு, மிகவும் வலுவானதாக இருந்தாலும் கூட, இடைவிடாத மீட்புப் பணியை ஆற்றுவதிலும், உயிர் பிழைத்தவர்களுக்கு ஆறுதல் அளிப்பதிலும் தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் அறியவருகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்