நிகரகுவா தலத்திருஅவையுடன் தனது ஒன்றிப்பை வெளிப்படுத்தும் COMECE
மெரினா ராஜ் – வத்திக்கான்
கத்தோலிக்கத் திருஅவை மற்றும் அதன் மக்கள் நிகரகுவாவில் துன்புறுத்தப்படுவதை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றோம் என்றும், எங்களது ஒன்றிப்பை வெளிப்படுத்தும் விதமாக நிகரகுவாவுடனான தொடர் உரையாடல் வழியாக, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நீதியை மேம்படுத்த உறுதிகொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Hollerich
பிப்ரவரி 9 வியாழனன்று, நிகரகுவா அரசுத்தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், கைதுசெய்யப்பட்ட ஆயர் Rolando Álvarez மற்றும் பிற அருள்பணியாளர்களை விடுதலை செய்யக்கோரி இவ்வாறுக் குறிப்பிட்டுள்ளார் COMECE எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரும் இயேசுசபை அருள்பணியாளருமான கர்தினால் Jean-Claude Hollerich.
கடந்த 2022 ஆகஸ்ட் முதல், ஆயர் Rolando Álvarez மற்றும் பிற அருள்பணியாளர்கள் நிகரகுவாவில், போலி செய்திகளைப் பரப்பியதாகப் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி EU அவை நாடுகளின் பிரதிநிதிகளோடு இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளார் கர்தினால் Hollerich
கிறிஸ்தவ மக்களும் தலத்திரு அவையும் தொடர்ந்து நிகரகுவாவில் துன்பத்தை அனுபவித்து வருவது வருத்தமளிக்கின்றது என்றும், தொடர்ச்சியான உரையாடல் வழியாக நாட்டின் சுதந்திரம், நீதி போன்றவற்றை EU அவை நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து மேம்படுத்த உறுதி கொண்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார் கர்தினால் Hollerich
2020 ஆம் ஆண்டில் திருப்பீடத்தூதர் கர்தினால் Waldemar Stanislaw Sommertag மற்றும் பிறரன்பு சபை அருள்சகோதரிகள் 18 பேரை நாட்டைவிட்டு வெளியேற்றியும், Matagalpa மறைமாவட்டத்தில் 7 அருள்பணியாளர்கள் சிறையிலடைத்தும் 9 கத்தோலிக்க வானொலி நிலையங்கள் 3 தொலைக்காட்சி நிலையங்களை மூடியும், வழிபாட்டுப் பவனிகள் மற்றும் திருப்பயணங்களைத் தடை செய்தும் கிறிஸ்தவ மக்களை நிகரகுவா அரசு துன்புறுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
COMECE எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு EU அவை நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து நிகரகுவாவில் உள்ள கத்தோலிக்க திருஅவைக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆயர்களின் ஆதரவை ஒன்றிப்பைத் தனது கடிதத்தின் வழியாக வெளிப்படுத்தினார் கர்தினால் Hollerich.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்