பிரிவினைகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து உதவுவோம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிரிவினைகளுக்கு அப்பால் சிரியாவின் ஏழை மக்களுக்கு உதவ வேண்டிய நேரம் இது என்று அலைபேசி வழியாக வத்திக்கான் செய்திக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் சிரியாவுக்கான திருபீடத்தூதர் கர்தினால் Mario Zenari
பிப்ரவரி 7, இச்செவ்வாயன்று சிரியாவில் நிலநடுக்கத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றான Aleppo-வுக்குச் சென்று அங்கு நிலவும் சூழல் குறித்து அறிந்துகொள்ள சென்றவேளை இவ்வாறு கூறியுள்ளார் கர்தினால் Mario Zenari
Aleppo நகருக்குச் சென்றபோது நீங்கள் அங்குக் கண்ட காட்சி என்ன என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் துறவு இல்லங்களில் தங்கியுள்ளனர் என்றும், பல இல்லங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் இருப்பதால், மக்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்ல அஞ்சுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் கர்தினால் Zenari.
இந்த நிலநடுக்கம் சிரியா மக்களுக்கு எம்மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற கேள்விக்கு, தற்போது சிரியா வறுமை என்னும் இன்னொரு ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றது. ஐ.நா-வின் புள்ளிவிபரங்கள்படி 90 விழுக்காடு மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர் என்றும், ஆயுதமோதல்கள், வறுமை, இப்போது இந்த நிலநடுக்கம் யாவும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரங்களை மேலும் அதிகப்படுத்தியுள்ளன என்றும் கவலை தெரிவித்துள்ளார் கர்தினால் Zenari.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருஅவை என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, சிரியாவின் தலத்திருஅவை ஏற்கனவே மனிதாபிமான பணிகளைத் தொடங்கிவிட்டது என்றும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளுக்குத் தகுந்தவாறு பெறப்படும் நிவாரண உதவிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Zenari.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்