இது அநீதியானத் தீர்ப்பு : சிலி நாட்டு ஆயர்கள்
செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது என்ற நம்பிக்கை தரும் இறைவார்த்தைகளால் நாம் ஆறுதலடைகின்றோம் என்று கூறியுள்ளார் பேராயர் Miguel Cabrejos
நிக்கராகுவாவில் ஆயர் Álvarez-க்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டும் 222 சிறைக்கைதிகள் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ள வேளை, இவ்வாறு தெரிவித்துள்ள இலத்தீன் அமெரிக்கா ஆயர் பேரவையின் (CELAM), தலைவர் பேராயர் Miguel Cabrejos, கத்தோலிக்க நம்பிக்கையாளர்களின் உரிமைகளைப் பலவீனப்படுத்துவதை எச்சரித்துள்ளதுடன் அம்மக்களுக்கும் அவர்தம் ஆயர்களுக்கும் தனது நெருக்கத்தையும் இறைவேண்டலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சிலி ஆயர்களின் கண்டனக் குரல்
சிலி நாட்டு ஆயர்களும் இந்த அநீதியானச் செயலுக்கு எதிராகத் தங்களின் கண்டன குரலை உயர்த்தியுள்ளதுடன், ஆயர் Álvarez-க்கு எதிரான நிக்கராகுவாவின் நீதிமன்ற தீர்ப்பையும் கடுமையாகக் கண்டித்துள்ள வேளை, இந்தச் செயல் அநீதியானது, தன்னிச்சையானது மற்றும் சமத்துவமற்றது என்றும், இதனைக் கடுமையாக நிராகரிக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டு ஆயர்கள் கண்டனம்
நிக்கராகுவாவில் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகத் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் அந்நாட்டு ஆயர்பேரவைக் குறித்து தாங்கள் பெரும் கவலையடைந்துள்ளதாகக் கூறியுள்ள ஸ்பெயின் நாடு ஆயர்கள், மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும், அரசியல் காரணங்களுக்காக இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டு கத்தோலிக்கப் பாரம்பரிய அமைப்பு அனைத்துக் கத்தோலிக்கரும், நல்லெண்ணம் கொண்டுள்ள மக்கள் அனைவரும் இந்த மோதலுக்கு அமைதியான தீர்வு காணவும், நீதியை அடித்தளமாகக் கொண்ட அமைதியைத் தேடுவதில் தங்களைத் தீவிரமாக அர்பணித்துக்கொள்ளவும் இறைவேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்