தேடுதல்

ஈக்கள் ஈக்கள் 

தடம் தந்த தகைமை : ஈக்களால் நிரம்பிய எகிப்து

மனிதர் விரும்பும் வழியில் அல்ல, மாறாக, கடவுள் தான் விரும்பும் வழியில் மனிதரை அவர்தம் அடிமைத்தளையினின்று மீட்கின்றார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆண்டவர் மோசேயை நோக்கி, “அதிகாலையில் நீ எழுந்து பார்வோனுக்காகக் காத்திரு. அவன் நீராடத் தண்ணீரை நோக்கி வருவான். அப்போது அவனிடம், ஆண்டவர் கூறுவது இதுவே: “எனக்கு வழிபாடு செலுத்தும் பொருட்டு என் மக்களைப் போகவிடு; என் மக்களை நீ போகவிடவில்லையென்றால், இதோ உன்மேலும், உன் அலுவலர், குடிமக்கள் மற்றும் வீட்டின் மேலும், ஈக்கள் வரச்செய்வேன். எகிப்தியருடைய வீடுகளும் அவர்கள் இருக்கும் நிலமும் ஈக்களால் நிரம்பும். நாளைய தினம் இந்த அருஞ்செயல் செய்யப்படும்” என்று சொல் என்றார். அவ்வாறே ஆண்டவரும் பார்வோன் வீட்டிலும், அவனுடைய அலுவலர் வீட்டிலும், எகிப்து நாடெங்கும் ஈக்களைத் திரளாய்ப் பெருகச் செய்தார். ஈக்களால் நாடே பாழாகிவிட்டது. மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர்.

இதனை அறிந்த பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து, “செல்லுங்கள், ஆனால், இந்நாட்டிலேயே உங்கள் கடவுளுக்குப் பலியிடுங்கள்” என்றான். அதற்கு மோசே, “அது முறையல்ல. பாலை நிலத்தில் நாங்கள் மூன்று நாள்கள் வழிநடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு, அவர் எங்களுக்குச் சொல்வதுபோல் பலியிடுவோம்” என்றார். அப்பொழுது பார்வோன், “சரி செல்லுங்கள். ஆனால், வெகுதூரம் சென்று விடாதீர்கள்” என்றான். மோசே மறுமொழியாக, “ நாளைய தினமே ஈக்கள் அகன்றுவிட வேண்டும் என நான் ஆண்டவரை நோக்கி மன்றாடுவேன். ஆனால், இம்முறையும் நீ எங்களை ஏமாற்றக் கூடாது” என்றார். பின்னர் மோசே ஆண்டவரை நோக்கி மன்றாடினார். மோசேயின் மன்றாட்டைக் கேட்ட ஆண்டவரும் பார்வோனிடமிருந்தும் அவனுடைய அலுவலரிடமிருந்தும், குடிமக்களிடமிருந்தும் ஈக்கள் அகன்று போகச் செய்தார், ஆனால், இம்முறையும் பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். மக்களை அவன் போகவிடவில்லை.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2023, 14:41