தடம் தந்த தகைமை : ‘கல் மழையால் தாக்கப்பட்ட எகிப்து!’
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மீண்டும் ஆண்டவர் மோசேயிடம், "நீ அதிகாலையில் எழுந்து பார்வோன் முன்னிலையில் வந்துநின்று அவனை நோக்கி, “எபிரேயரின் கடவுளான ஆண்டவர் சொல்வது இதுவே. எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடாத அளவுக்கு இன்னும் கடின மனம் கொண்டிருக்கிறாய். ஆகவே எகிப்து நிறுவப்பட்டது தொடங்கி இன்றுவரை அங்கே இருந்திராத அளவுக்கு மிகக் கொடிய கல்மழையை நாளைய தினம் இந்நேரத்தில் பெய்யச் செய்வேன் என்று சொல்" என்றார். ஆண்டவர் கூறியவாறு மோசே செய்தார். பின்னர் ஆண்டவர் மோசேயை நோக்கி, உன் கையிலுள்ள கோலை வானோக்கி நீட்டு" என்றார். அவரும் அவ்வாறு செய்யவே, ஆண்டவர் இடி முழக்கங்களையும், கல்மழையையும் அனுப்பினார். எகிப்து நாடு முழுவதிலும் மனிதர் முதல் விலங்கு வரை வயல்வெளியில் இருந்த அனைத்தையும் கல்மழை தாக்கியது. ஆனால், இஸ்ரயேல் மக்கள் தங்கியிருந்த கோசேன் நிலப்பகுதியில் மட்டும் கல்மழை பெய்யவில்லை.
உடனே பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து, “நான் இம்முறை பாவம் செய்துவிட்டேன். ஆண்டவரே நீதியுள்ளவர். நானும் என் மக்களுமே தீயவர். எனவே, ஆண்டவரிடம் மன்றாடுங்கள். இடிமுழக்கங்களையும் கல்மழையையும் கடவுள் அனுப்பியது போதும்; நான் உங்களைப் போக விடுவேன். இனிமேல் நீங்கள் தங்கவே வேண்டாம்” என்றான். மோசே அவனை நோக்கி, “நாளைக்கு வெளியே போனபின், நான் என் கைகளை ஆண்டவரை நோக்கி எழுப்புவேன். இடிமுழக்கங்கள் ஓய்ந்து போகும். கல்மழையும் நின்றுவிடும்" என்றார். பின்னர் மோசே தம் கைகளை ஆண்டவரை நோக்கி நீட்டினார். மழையும் கல்மழையும் இடிமுழக்கங்களும் ஓய்ந்து போயின. இதைக் கண்ட பார்வோன். தன் மனத்தை மீண்டும் கடினப்படுத்திக் கொண்டான். அவன் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்