தேடுதல்

பாரீஸ் நமதன்னை ஆலயத்தின் கண்ணாடியில் வரையப்பட்டுள்ள பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை சித்தரிக்கும் ஓவியங்கள் பாரீஸ் நமதன்னை ஆலயத்தின் கண்ணாடியில் வரையப்பட்டுள்ள பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை சித்தரிக்கும் ஓவியங்கள்  (Massimo Santi Photographer)

தடம் தந்த தகைமை – சகோதரர்களைக் கொணர்ந்த பஞ்சம்

யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டார். ஆயினும், அவர்களை அறியாதவர்போல் கடுமையாக அவர்களிடம் பேசினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கொடும் பஞ்சம் எங்கும் நிலவிய காலத்தில் எகிப்தில் தானியம் கிடைப்பதைப் பற்றி யாக்கோபு கேள்விப்பட்டு, தம் புதல்வர்களை நோக்கி, “நாம் பஞ்சத்தால் சாகாமல் உயிரோடிருக்குமாறு, நீங்கள் எகிப்துச் சென்று நமக்கெனத் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்றார். எனவே, யோசேப்பின் சகோதரர் பதின்மரும் தானியம் வாங்கும் பொருட்டு எகிப்திற்குப் புறப்பட்டுப் போனார்கள். ஆனால், யோசேப்பின் சகோதரனான பென்யமினை அவனுடைய சகோதரர்களோடு யாக்கோபு அனுப்பவில்லை. ஏனெனில், அவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிடக்கூடும் என்று எண்ணினார். கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியதால், அங்கிருந்து தானியம் வாங்கச்சென்ற மற்றவர்களோடு இஸ்ரயேலின் புதல்வர்களும் சேர்ந்து சென்றனர்.

அப்பொழுது, யோசேப்பு நாட்டுக்கு ஆளுநராய் இருந்து மக்கள் அனைவருக்கும் தானியம் விற்கும் அதிகாரம் பெற்றிருந்தார். எனவே, அவருடைய சகோதரர்கள் வந்து, தரைமட்டும் தாழ்ந்து யோசேப்பை வணங்கினார்கள். யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டார். ஆயினும், அவர்களை அறியாதவர்போல் கடுமையாக அவர்களிடம் பேசி, “நீங்கள் ஒற்றர்கள்; பாதுகாப்பாற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்திருக்கிறீர்கள்” என்றார். அதற்கு அவர்கள், “எம் தலைவரே! அப்படி அல்ல. உம் ஊழியர்களாகிய நாங்கள் உணவுப் பொருள்கள் வாங்கவே வந்துள்ளோம். நாங்களெல்லாரும் ஒரே தந்தையின் புதல்வர்கள். இப்பொழுது எங்களுள் இளையவன் எங்கள் தந்தையோடு இருக்கின்றான். இன்னொருவன் இறந்துவிட்டான்” என்றனர். யோசேப்பு மீண்டும் அவர்களிடம், “இதோ நான் உங்களை சோதித்தறியப் போகிறேன். உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய, நீங்கள் இங்கிருந்து புறப்படப்போவதில்லை. எனவே, உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். உங்கள் சொற்களைச் சோதித்து உண்மை உங்களிடம் உள்ளதா என்று அறிய விரும்புகிறேன். என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2023, 14:02