தேடுதல்

2023.02.21 il povero 2023.02.21 il povero 

விவிலியத் தேடல்:திருப்பாடல் 37-5 நல்லாரின் செல்வம் போற்றப்பெறும்

நல்லாரிடம் சிறிதளவே பொருள் இருந்தாலும் கடவுளின் பார்வையில் அதுவே சிறந்ததாகப் போற்றப்பெறும் என்பதை உணர்வோம்.
திருப்பாடல் 37-5

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘கெடுவான் கேடு நினைப்பான்!’ என்ற தலைப்பில் 37-வது திருப்பாடலில் 10 முதல் 15 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 16 முதல் 19 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை வாசித்து நமது சிந்தனைகளை விரிவுபடுத்துவோம். பொல்லாரின் திரளான செல்வத்தைவிட நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது. பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்; ஆனால் நேர்மையாளரை ஆண்டவர் தாங்கிடுவார். சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும். கேடுகாலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை; பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள் (வசனம் 16-19)

தாவீது கூறும் மேற்காணும் நான்கு இறைவசனங்களில் இரண்டு கருத்துக்களை முன்வைக்கின்றார். முதலாவதாக, பொல்லாரின் செல்வத்தைவிட நல்லராகிய ஏழைகளின் செல்வமே உயர்ந்தது என்றும், இரண்டாவதாக, அவர்கள் கேடுகாலத்தில் இகழ்ச்சி அடைவதில்லை; பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றார். பொல்லாரின் தோள்வலிமையாகக் கருதப்படும் அகம்பாவம், அகங்காரம், ஆணவம், செருக்கு, தன்னலம், பேராசை, அநியாயம், அட்டூழியச்செயல், பழிதீர்க்கும் உணர்வு, ஏழையரின் செல்வத்தை சுரண்டுவது ஆகியவை முறிக்கப்படும் என்று நாம் இதற்குப் பொருள் கொள்ளலாம். இதன் காரணமாகவே, ‟ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்? எளியோரை வலியோரின் கையினின்றும் எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப்போர் கையினின்றும் விடுவிப்பவர் நீரே” என்று என் எலும்புகள் எல்லாம் சொல்லும் (திபா 35:10) என்றும், நேர்மையுள்ளோர் எந்நாளும் அசைவுறார்; அவர்கள் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.  அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி (திபா 112:6-8) என்கின்றார் தாவீது அரசர். மேலும், உலகை அதன் தீச்செயலுக்காகவும் தீயோரை அவர்தம் கொடுஞ் செயலுக்காகவும் நான் தண்டிப்பேன்; ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்; அச்சுறுத்துவோரின் இறுமாப்பை அடக்குவேன் (எசா 13:11) என்ற கடவுளின் வார்த்தைகளை இறைவாக்கினாரான எசாயாவும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றார்.

ஓர் ஊரில்  பெரிய பணக்காரர் ஒருவரின் இருந்தார். ஆனால் அவர் ஒரு சுயநலக்காரர் மற்றும் பொல்லாதவர். இவரது முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்திலிருந்து கணிசமான வருமானம் வந்தும், அவற்றிலிருந்து செலவு  செய்து தனது சொந்தத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ளமாட்டார்.  தேவையில் இருப்போருக்கு எள்ளளவும் உதவ மாட்டார். தன்னிடம் இருக்கும் செல்வத்துக்கு ஈடாக இந்த ஊரிலும், சுற்றுவட்டாரத்திலும் யாருமே சொத்து வைத்திருக்கவில்லை என்று அகம்பாவத்துடன் பேசுவார். இவர் தனது செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற பேராசையால் அதனை ஒரு வெண்கலப் பானையில் வைத்து பூமியில் புதைத்து வைப்பார். ஒவ்வொரு நாளும் இரவு உறங்குவதற்கு முன்பு, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான் தூங்கப்போவார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த மற்றொருவர் அந்தப் பணக்காரருக்குத் தெரியாமல், அவர் புதைத்து வைத்திருந்த பணத்தைத் தோண்டி எடுத்துக் கொண்டுபோய் செலவு செய்துவிட்டார். அடுத்த நாள், தான் புதைத்து வைத்திருந்த பணத்தைத் அந்தப் பணக்காரர் தேடியபோது பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மன்னரிடம் சென்று முறையிட்டார். மன்னர் அப்பணக்காரரிடம் விசாரணை செய்தார். “பணத்தை எங்கே வைத்து இருந்தாய்? “பெரிய வெண்கலப் பானையில் வைத்து மண்ணில் புதைத்து வைத்திருந்தேன்” “அந்தப் பணம் இப்போது உனக்குத் தேவைப்படுகிறதா?  “இல்லை தேவை இல்லை! ஆனால், அது என் பணம்”, “யாருக்கும் கொடுக்கப் போகிறாயா? எதுவும் வாங்கப் போகிறாயா? “இல்லை.” “உனக்கு திருமணமாகிவிட்டதா?” “இல்லை” “இத்தனை வயதாகியும் ஏன் இன்னும் மணமாகவில்லை” “அவளுக்கு வேறு சோறு போடவேண்டுமே” “உன் உடைகள் ஏன் அழுக்காக இருக்கின்றன?” “அவைகளைத் துவைக்க செலவாகும்” "தலையில் கூட எண்ணெய் தேய்க்காமல் பரட்டையாக இருக்கிறாய். முகமெல்லாம் தாடி மீசை மழிக்காமல் இருக்கிறாய். அது சரி காலையில் சாப்பிட்டாயா?” “அதற்கெல்லாம் செலவாகும். இந்தப் பணத்தை இழந்த கவலையில் நான் சாப்பிடவில்லை.“ “உன்  அம்மா அப்பா எங்கே?” “அவர்கள் வேறொரு ஊரில் பிச்சை எடுத்து வாழ்கிறார்கள். காரணம், அவர்களுக்கும் செலவு செய்ய வேண்டுமே என்று நினைத்து அவர்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டேன்” “ஏன் பேசும்போது இப்படி இருமுகிறாய்? மூச்சுத் திணறுகிறது? “வெட்டவெளியில் படுத்து இருப்பதால் உடல்நலமின்றி இருக்கின்றேன்” “மருத்துவரிடம் போனாயா?” “அவர் பணம் கேட்கிறார்.“ “இப்போது நீ இழந்த பணம் எவ்வளவு இருக்கும் ?” “நேற்றுத்தான் எண்ணி வைத்தேன். மொத்தம் 50 இலட்சம்” “அப்படியா? அடப்பாவமே! இருந்தாலும் பரவாயில்லை. நீ புதைத்து வைத்த பணம் மண்ணிலேயே புதைக்கப்பட்டு விட்டதாக நினைத்து மனதை அமைதிப்படுத்திக்கொள். ஏனென்றால், அந்தப் பணம் இந்த நாட்டின் பூமியில்தான் புதைக்கப்பட்டு இருக்கிறது. உனது எந்தத் தேவைக்கும் நீ அந்தப் பணத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை. எந்தச் செலவும் செய்யவில்லை. உண்டு, உடுத்தி, உதவி அதனை அனுபவிக்கவில்லை. உனக்கு இப்போது எந்தத் தேவையுமில்லை. இனியும் உனக்கு அது தேவைப்படாது. யாரோ தேவைப்பட்டு செலவு செய்பவர் எடுத்துக் கொண்டு போய்விட்டார். ஆகவே, அது உன் கையில் இருந்தாலும் ஒன்றுதான் மண்ணின் கீழே இருந்தாலும் ஒன்றுதான். மண்ணில் புதைக்கப்பட்ட அந்தப் பணம் பத்திரமாக இருப்பதாகவே நினைத்து மனதை திருப்திபடுத்திக் கொள். இந்த ஊரிலுள்ள ஏழைகளைப் பார்த்தாயா? அவர்கள் சிறிதளவே செல்வம் கொண்டிருந்தாலும், தங்களிடம் இருப்பதை பிறருடன் பகிர்ந்து வாழ்கிறார்கள். யாருக்கும் பயன்படாத உனது பெரும் செல்வதைவிட, எல்லாருக்கும் பயன்படும் நல்லாராகிய அந்த ஏழை மக்களின் செல்வமே மிகவும் உயர்ந்தது. இத்துடன் சபை கலையலாம்” என்று மன்னர்  தீர்ப்பளித்தார்.

‘உலக சமத்துவமின்மை அறிக்கை 2022’, என்னும் தலைப்பில் வெளியான அறிக்கை ஒன்றில் இந்திய நாட்டின் மொத்த வருவாயில் 22 விழுக்காடு, அதாவது, நாட்டின் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு பெரும் பணக்காரர்களிடம் உள்ளது என்றும், இதனால் நாட்டின் வருமானம் மற்றும் சமத்துவமற்ற நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணக்கார மேல்தட்டு மக்கள் ஒரு பிரிவாகவும், ஏழைகள் இன்னொரு பிரிவாகவும் நிற்கின்றனர் என்றும், இதனால், மிகப் பெரிய செல்வந்தர்களுக்கும் மற்ற நிலைகளில் இருக்கும் மக்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன என்றும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.

அண்மையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் 45,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துபோனார்கள். இதில் தங்களை மிகப்பெரும் பணக்காரர்களாகக் கருதிக்கொண்டு வாழ்ந்த செல்வந்தர்களும் அடங்குவர். 13 பெரும் இல்லங்களைத் தன்னிடம் வைத்திருந்த ஒரு மனிதர் அவை அத்தனையையும் இந்த நிலநடுக்கத்தில் இழந்த நிலையில் கையில் வெறும் மூன்று ரொட்டியுடன் அழுத முகத்துடன் நின்றுகொண்டிருந்தார். அதுமட்டுமன்றி, இந்த நிலநடுக்கங்களில் தங்கள் இல்லங்களையும் உடமைகளையும் இழந்த எல்லாரும் ஏற்கனவே அங்கு முகாம்களில் வாழ்ந்துகொண்டிருந்த புலம்பெயர்ந்தோருடன் ஒன்றாகத் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதுதான் பெரும் சோகம். இயற்கை ஏற்படுத்தும் சமத்துவ வாழ்வு என்பது இதுதான். இவ்வுலகிற்கு வரும்போது நாம் எதைக் கொண்டுவந்தோம், இவ்வுலகவிட்டுச் செல்லும்போது எதை நம்முடன் எடுத்துக்கொண்டுபோகப் போகிறோம்? இவ்வுலகிற்கு வெறும்கையாராய் வந்தோம் வெறும்கையாராய்த்தான் போகப்போகின்றோம். இங்கே எதுவும் நமக்கு நிரந்தரமில்லை. இதை உணராதவர்கள்தாம் இறைப்பற்று அற்றவர்களாய் பொல்லார் நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியில் மாபெரும் கேட்டினைச் சந்தித்து ஒன்றுமில்லாமல் அழிந்துபோகின்றனர். இதை உணர்ந்தவர்களே இறைநம்பிக்கையோடும் உள்ளன்போடும் உவகையோடும் வாழ்கிறார்கள்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார்" (குறள் 06) என்ற குறளில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார் என்கின்றார் திருவள்ளுவர். அதாவது, ஒரு மனிதரை நல்லார் ஆக்குவதும் பொல்லார் ஆக்குவதும் வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகள் தாம். ஆக இவைகளைச் சரியான வழியில் செலுத்தினாலே போதும், நாம் எந்த நிலையில் வாழ்ந்தாலும் நேர்மையாளராய், நல்லோராய் வாழ முடியும்.

ஆகவே, நம்மிடம் சிறிதளவே பொருள் இருந்தாலும் கடவுளின் பார்வையில் அதுவே சிறந்ததாகப் போற்றப்பெறும் என்பதை உணர்ந்து நல்லார் நிலையில் வாழ்வோம். மேலும் கேடு வரும் காலத்திலும், பஞ்சகாலத்திலும் கடவுள் நம்மை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் நம்மை நிறைவுள்ளவராக்குவார் என்பதை உணர்ந்து வாழ்ந்திடுவோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2023, 13:47