தேடுதல்

FABC  துவக்க கூட்டத் திருப்பலியில் ஆயர்கள். (கோப்புப்படம் 2022.10.12) FABC துவக்க கூட்டத் திருப்பலியில் ஆயர்கள். (கோப்புப்படம் 2022.10.12) 

கண்டங்களளவில் நடைபெற உள்ள ஆயர் பேரவை

பிப்ரவரி 24 வெள்ளி முதல் 27 திங்கள் வரை ஆசிய ஆயர் பேரவையானது ஆசியா கண்டத்தின் சார்பாக தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள Baan Phu Waan மேய்ப்புப்பணி பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒருங்கிணைந்த பயணம் குறித்த ஆயர் பேரவையானது  கண்டங்களளவில் ஏழு இடங்களில் நடக்க உள்ளதாகவும், ஆசியாவிற்கான செயல்திட்டங்கள் FABC என்னும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பால் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அருள்பணி George Plathottam

சனவரி 27  வெள்ளிக்கிழமை FABC என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் கூடுதல் செயலரும் சலேசிய சபை அருள்பணியாளருமான George Plathottam அவர்கள், உங்கள் கூடாரத்தின் எல்லைகளைப் பெரிதாக்குதல், என்ற தலைப்பில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசிய ஆயர் பேரவைக் கூட்டத்தின் முயற்சி இது என்றும் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 24 வெள்ளி முதல் 27 திங்கள் வரை ஆசிய ஆயர் பேரவையானது ஆசியா கண்டத்தின் சார்பாக தாய்லாந்தின் பாங்காங்கில் உள்ள Baan Phu Waan மேய்ப்புப்பணி பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது என்று தெரிவித்த அருள்பணி George அவர்கள், ஐரோப்பாவிற்கு ப்ராக்கிலும் (Prague), இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பொகொட்டாவிலும் (Bogota), ஆஸ்திரேலியா, ஓசியானியாவிற்கு     சுவாவிலும்(Suva), வட அமெரிக்காவிற்கு ஒர்லாந்தாவிலும் (Orlando), மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெய்ரூட்டிலும்(Beirut) நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். 

"உங்கள் கூடாரத்தின் எல்லைகளைப் பெரிதாக்குதல்' என்ற தலைப்பில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசிய ஆயர் பேரவையின் தாக்கத்தால் அதன் செயலகத்தால் வெளியிடப்பட்ட 50 பக்க ஆவணத்தை ஒட்டியதாக, கண்டங்கள் அளவிலான இச்செயல்முறை அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட அருள்பணி George, ஏழு இடங்களில் நடைபெற இருக்கின்ற கூட்டங்கள் மார்ச் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இக்கூட்டங்களால் வரைவு செய்யப்படும் ஆவணங்கள் 2023 அக்டோபர் மாதத்தில் உரோமையில் நடைபெற இருக்கும் அனைத்துலக ஆயர் பேரவைக்கான செயல்பாட்டின் அடிப்படையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள அருள்பணி George, இளையோர், பொதுமக்கள், ஆண்கள், பெண்கள், மதம், அருள்பணியாளர்கள், ஆயர் நிலையின் அனைத்து பிரிவினர் ஆகியோருக்கு போதுமான முன்னுரிமை அங்கீகாரம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான விரிவான திட்டங்களை உருவாக்க உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சில கூட்டங்களுக்கு ஆசியாவின் மற்ற கிறிஸ்தவ சபைகளில் இருந்து உடன் சகோதரர்களை அழைக்கும் திட்டம் உள்ளது என்றும், அதிக பங்கேற்பாளர்களை ஈடுபடுத்த இணைய வழி அமர்வுகளும் இருக்கும் என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்பணி George

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2023, 14:04