தேடுதல்

கற்பிக்கும் இயேசு கற்பிக்கும் இயேசு  

பொதுக் காலம் 4-ஆம் ஞாயிறு : நற்செயல்வழி பேறுபெற்றோராவோம்!

இடுக்கண் வழியாகிய சிலுவை வழியே நற்பேறுபெறும் வழி என்பதை உணர்வோம். தீய வழிகள் அகற்றி தூய வழிகளில் இயேசு கூறும் பேறுபெற்றோராக வாழ்வோம்.
ஞாயிறு சிந்தனை 28012023

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.     செப்  2: 3; 3: 12-13      II.   1 கொரி  1: 26-31    III.  மத்  5: 1-12a)  

போலந்து நாட்டின் Markowa-வின் இறைஊழியர்கள் Giuseppe, Vittoria Ulma தம்பதியரும், அவர்களின் ஏழு பிள்ளைகளும், எட்டு யூதர்களுக்கு உதவியதற்காக 1944-ஆம் ஆண்டு மார்ச் 24ம் தேதி நாத்சிகளால் கொல்லப்பட்டனர். இந்தத் தாய் படுகொலை செய்யப்பட்ட போது அவரது ஏழாவது குழந்தையைக் கருவில் தாங்கியிருந்தார். Ulmaவின் பெற்றோரும் அவர்களோடு சேர்ந்து கொல்லப்பட்டனர். அதுமட்டுமன்றி, இவர்கள் உதவிய யூதக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் முதலில் கொன்றான் ஹிட்லர். பின்னர், இனி யாரும் யூதர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்பதற்காக Vittoria Ulma-வையும் அவரது குடும்பத்தாரையும் கொடுரமாகக் கொன்றான் ஹிட்லர். இவர்கள் எழுவரும் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி சனிக்கிழமையன்று பரிந்துரைக்கப்பட்டனர். கிறிஸ்துவின் வழியில் கிறிஸ்துவுக்காகக் கொல்லப்பட்ட இவர்கள் எழுவரும் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள்தாம்.  

இன்று பொதுக் காலத்தின் நான்காம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் கடவுளுக்குரிய காரியங்களைச் செய்து பேறுபெற்றோராய் வாழ்வதற்கு நம்மை அழைக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில், “நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை  நாடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்; ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்” என்கின்றார் இறைவாக்கினரான செப்பனியா. அதாவது, ஆண்டவரைத் தேடுவோரும், நேர்மையை நாடுவோரும், மனத்தாழ்மையைத் தேடுவோரும் பேறுபெற்றோர் நிலைக்கு மாறமுடியும் என்கின்றார். இன்றைய இரண்டாம் வாசகம் தன்னைக் குறித்துப் பெருமை பாராட்டாமல் கடவுளைக் குறித்து பெருமை பாராட்டி வாழ்வதே உண்மையான ஞானம் என்றும் இதுவே நம்மைப் பேறுபெற்றோர் நிலைக்கு உயர்த்தும் என்றும் கூறுகின்றார் புனித பவுலடியார்.

இன்றைய நற்செய்தி வாசகம் யாரெல்லாம் பேறுபெற்றோர் என்று பட்டியலிட்டுக் காட்டுகின்றது இப்போது அப்பகுதியை தியானச் சிந்தனையுடன் வாசிக்கக் கேட்போம். “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

உலகம் முழுவதும் 36 கோடிக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கைக்காகத் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும், பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுக்கும், குறிப்பாகப் பெண்கள் பாலியல் வன்மங்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர் என்றும் Open Doors அமைப்பின் World Watch List 2023 அறிக்கை தெரிவித்துள்ளது. ஜனவரி 18-ஆம் தேதி, புதன்கிழமையன்று, உரோமையிலுள்ள இத்தாலியப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கையில், கிறிஸ்தவர்கள் மிக மோசமான துன்புறுத்தலை எதிர்கொள்ளும் ஐம்பது நாடுகளையும் அதில் வரிசைப்படுத்தியுள்ளது அவ்வமைப்பு. உலகில் ஏழு கிறிஸ்தவர்களில் ஒருவர் தனது கிறிஸ்தவ நம்பிக்கைக்காக அதிகமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றார் என்றும், 2022-ஆம் ஆண்டு உலகளவில் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாக இருந்துள்ளது என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதில் வடகொரியாதான் முதலிடம் வகிக்கிறது என்று கூறும் அவ்வறிக்கை அதற்கான காரணத்தையும் எடுத்துரைத்துள்ளது. அதாவது, 2021-ஆம் ஆண்டு அந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய “பிற்போக்கு சிந்தனைக்கு எதிரான சட்டம்” காரணமாக, கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக வட கொரியா மீண்டும் தோன்றுகிறது என்றும், இதனால் கைது செய்யப்படும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறுகிறது. மேலும் இங்குக் கிறிஸ்தவர்களுக்கு முற்றிலும் சுதந்திரம் இல்லை, அவர்களின் மத நம்பிக்கையை கடைப்பிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மரணம், அல்லது, தொழிலாளர் முகாம்களைச் சந்திக்க நேரிடும் என்றும், திருவிவிலியத்தைக் கையில் வைத்திருப்பதுக் கூடக் குற்றம் மற்றும் அதற்குக் கடுமையான தண்டனை உண்டு என்றும் கூறுகிறது அவ்வறிக்கை.

இவ்வாண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று, நைஜீரியாவின் Angwan கிராமத்தில் தீவிரவாதிகளால் 50க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டதுடன், ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜனவரி 15ஆம் தேதி, ஞாயிறன்று, காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு நகரிலுள்ள Kasindi என்னுமிடத்தில் ISIS அமைப்புடன் தொடர்புடைய AFP அமைப்பின் தீவிரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி உயிர்ப்புப் பெருவிழாவன்று, இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மூன்று கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள், மூன்று தங்கும் விடுதிகள் சேதமடைந்ததுடன் 250 பேர் உயிரிழந்தனர். மேலும்  500 பேர் படுகாயமுற்றனர்.

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் பேறுபெற்றவர்கள் வரிசையில், ‘நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது’ என்பது கவனிக்ககத்து. மேலும், "திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்" (மத் 11:12) என்று இயேசுவே மிகவும் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார். அப்படியென்றால் இயேசுவின் காலம்தொட்டு இந்நாள்வரையிலும் இறை அரசு கொடூரமாகத் தாக்கப்பட்டு வருகிறது என்று நாம் கூறலாமன்றோ!

ஆக, பிரச்சனைகள், வேதனைகள், துன்புறுத்தல்கள் நிறைந்ததுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. இவைகள் இல்லாமல் நாம் கிறிஸ்தவ வாழ்வைக் வாழ்ந்திட முடியாது. இத்தகைய தருணங்கள் நேரும்போதெல்லாம், நம் இறைவன்மீது நாம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே நாம் பேறுபெற்றவர்களாக ஒளிரமுடியும் என்பதை மேற்கண்ட சம்வங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இதன் காரணமாகவே, நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். (2 கொரி 4:9-11) என்கின்றார் புனித பவுலடியார்.

ஒரு மலையின் அடிவாரத்தில் இரண்டு பெரிய பாறைகள் இருந்தன. அவைகள் இரண்டும் பல ஆண்டுகளாக நகராமல் அதே இடத்தில் இருந்தன. அதனால் மழையும் வெயிலும் அவைகளின் நிறத்தை மாற்றியிருந்தன. ‘எத்தனை காலத்திற்கு மாற்றமே இல்லாமல் இப்படியே இருப்பது’ என்று முதல் பாறைக்கு மிகவும் சலிப்பாக இருந்தது. மேலும், என்றைக்காவது ஒருநாள் இந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்குப் போய்விட மாட்டோமா என்று ஏக்கத்தோடு கேட்டது முதல் பாறை. அதற்கு இரண்டாவது பாறை, “எங்கே போனாலும் இதே வாழ்க்கைதானே. அப்படியிருக்க, எதற்காக இன்னொரு இடத்திற்குப் போகவிரும்புகின்றாய்? இருக்கும் இடத்திலேயே மகிழ்ச்சியாக இருந்துவிட வேண்டியதுதானே” என்று கூறியது. அந்நேரத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டுவதற்காக நல்ல பாறைகளைத் தேடிக்கொண்டு அங்கே இரண்டு சிற்பிகள் வந்தனர். அப்போது அந்த இரண்டு பெரிய பாறைகளையும் பார்த்து, "இந்தப் பாறைகளைக் கொண்டுபோய் அந்தக் கோவிலுக்குச் சிற்பங்கள் செய்யலாமே” என்று கூறினர். உடனே சிற்பி அந்த இரண்டு பாறைகளையும் பரிசோதனை செய்துவிட்டு, “இதைக்கொண்டு அழகான கடவுளின் உருவ சிலைகளை செய்துவிடலாம். ஆகவே, "நாளைக்கே வந்து இவைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றுவிடலாம்" என்றார்.

சிற்பிகள்  சென்ற பிறகு, "ஆஹா, நாம் நினைத்ததுபோன்று மாற்றம் வரப்போகின்றது, நாம் நகரத்திற்குப் போகப் போகிறோம்" என்று கூறி உற்சாகத்தில் துள்ளிக்குதித்தது முதல் பாறை. அதற்கு இரண்டாவது பாறை, "அட அடி முட்டாளே, அவர்கள் நம்மைக் கொண்டுபோய் அடித்து மிதித்து, உதைத்து சிற்பங்களாக்கப் பார்க்கிறார்கள்" என்றது. "அதனாலென்ன, நாம் கடவுளின் சிலைகளாக வடிக்கப்பட்ட பிறகு, மக்கள் எல்லோரும் நம்மை வணங்கி மரியாதை செலுத்துவார்கள். அது நமக்குத் பெருமைதானே. இங்கு இருந்தவரை யாருமே நம்மை கண்டுகொள்ளவில்லையே. மேலும் ஒன்றை இழந்தால்தானே இன்னொன்றைப் பெறமுடியும்" என்றது முதல் பாறை. "நீ வேண்டுமானால் போ.. நன் வரமாட்டேன். நான் இங்கேயே சுகமாக வாழ்ந்துவிடுகிறேன். நாளை அவர்கள் வரும்போது, என்னைத் தூக்கிச்செல்ல முடியாதபடி அப்படியே நான் இறுகிப்போய்விடுவேன்" என்று கூறியது இரண்டாம் பாறை. "அதற்குமேல் உன் விருப்பம். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால், நற்பேறு பெறும் வாய்ப்பு இனி கிடைக்காது" என்றது முதல் பாறை. அடுத்தநாள் அங்கு வந்த சிற்பிகள் முதல் பாறையைத் தூக்கினார்கள். இரண்டாவது பாறையை அசைத்துப் பார்த்தார்கள். ஆனால், அதனை அசைக்க முடியவில்லை. எனவே, கிடைத்த இந்த ஒரு பாறையே போதும் என்று கூறி அதனை எடுத்துச் சென்றனர். பின்னர் ஆறுமாதங்கள் அப்பாறையை உடைத்து செதுக்கி கடவுளின் உருவமாக மாற்றினார்கள். அந்தப் பாறை எல்லாவகையான கொடிய வலிகளையும் பொறுத்துக்கொண்டது. அப்போது தன்னுள் இப்படியொரு அழகான கடவுளின் உருவம் இருப்பதை எண்ணி எண்ணி வியந்தது அந்தப் பாறை. அடுத்த ஒருசில மாதங்களில் அந்தப் பாறையிலிருந்து செதுக்கிய கடவுளின் உருவ சிலைக்கு வழிபாடுகளை நடத்தி, அதனை எடுத்துச்சென்று ஆலயத்தின் கருவறையில் வைத்தனர். அதுமுதல், அனுதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அதனை வழிபட்டுச் சென்றனர். வலிகளைத் தாங்கிக்கொள்பவர்கள் பிறருக்கு வாழ்வாகிப் போகிறார்கள், கடவுளின் பேறுபெற்ற மக்களாகிறார்கள் என்பதை இக்கதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது

நற்பேறு பெற்றவர் யார்?  அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;  அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்; அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார் (திபா 1:1-3) என்று நற்பேறுபெற்றவர்களின் பட்டியலை தாவீது அரசரும் எடுத்துக்காட்டுகின்றார். ஆகவே, இடுக்கண் வழியாகிய சிலுவை வழியே நற்பேறுபெறும் வழி என்பதை உணர்வோம். தீய வழிகள் அகற்றி தூய வழிகளில் இயேசு கூறும் பேறுபெற்றோராக வாழ்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2023, 13:14