திருத்தந்தையின் வருகைக்காகக் காத்திருக்கிறோம்– ஆயர் Carlassare
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தந்தையின் தென்சூடான் வருகைக்காக மக்கள் ஆர்வமுடன் காத்திருப்பதாகவும், மோதல்களின் விளைவு நாட்டு மக்களை எந்த அளவிற்குப் பாதிக்கின்றது என்பதை இச்சந்திப்பின்போது நேரடியாக அவர் பார்க்கமுடியும் என்றும் கூறியுள்ளார் ஆயர் Christian Carlassare,
சனவரி 19 வியாழன், இத்தாலியின் காரித்தாஸ் அமைப்பு நடத்திய இணையதள கூட்டத்தில் பங்கேற்று, ஆப்ரிக்காவின் உணவுத்தட்டுப்பாட்டு நிலை மற்றும் திருத்தந்தையின் தென்சூடான் வருகை பற்றிப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் தென்சூடான் நாட்டின் Rumbek மறைமாவட்ட ஆயர் Christian Carlassare.
கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் மக்களையும், மோதலின் விளைவாக பெரிதும் பாதிக்கப்பட்டு, உலகளாவிய கவனத்தை அவ்வப்போது ஈர்க்கும் ஒரு நாட்டையும் திருத்தந்தை தனது வருகையின் போது கண்டறிவார் என்றும் தெரிவித்துள்ள ஆயர் Carlassare, தென்சூடான் மக்களின் நலவாழ்வு சந்தேகத்திற்குரியதாகவும், பள்ளிகள் வீழ்ச்சியடையும் சூழலிலும், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ஒழுங்கற்ற மழைப்பொழிவினால் பயிர்கள் அழிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தென்சூடான் நாட்டின் வளங்கள், மோசமாகப் பிரிக்கப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன எனவும், சில குழுக்களால் மட்டுமே நாட்டின் வளங்களை அணுக முடிகிறது என்றும் கூறியுள்ள ஆயர் Carlassare அவர்கள், அரசுமருத்துவர்கள், மற்றும் ஆசிரியர்கள், குறைவான ஊதியத்துடன் பணிபுரிவதால் தனியார்துறைக்கு மாறும் சூழல் உள்ளதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
நாட்டில் ஓடும் நதியின் அளவு அதிகமாக உயர்ந்து வெள்ளத்தை ஏற்படுத்துவதால், மக்களுக்கு உணவளிக்கும் தானியங்களை அறுவடை செய்து உற்பத்தி செய்ய முடியவில்லை என எடுத்துரைத்துள்ள ஆயர் Carlassare அவர்கள், இந்நிலை தொடர்ந்தால் மலக்கால் மறைமாவட்டத்தில் இரண்டு பங்குதளங்களுக்கு மார்ச் முதல் மே வரை உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்து, 16 பங்குதளங்களில் உள்ள மிகவும் பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு உணவு மற்றும் அவசர உதவியினை காரித்தாஸ் அமைப்பின் வழியாகத் தொடர்ந்து செய்து வருவதாகவும் எடுத்துரைத்தார் ஆயர் Carlassare.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்