திருத்தந்தையர் வரலாறு - 7ஆம் உர்பான், 14ஆம் கிரகரி, 9ஆம் இன்னசென்ட்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
1590ஆம் ஆண்டு செப்டம்பர் 15ந்தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை 7ஆம் உர்பன். இவரின் இயற்பெயர் Giambattista Castagna. உரோம் நகரில் 1521ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி பிறந்த இத்திருத்தந்தையின் இரு உறவினர்கள் கர்தினால்களாக இருந்தனர். திருஅவைச் சட்டத்திலும் சமூக பொதுநிலைச் சட்டத்திலும் முனைவர் பட்டம் பெற்ற இவர், 1553ஆம் ஆண்டு Rossanoவின் பேராயராக நியமிக்கப்பட்டார். திருத்தந்தையர்கள் 3ஆம் ஜூலியஸ் மற்றும் 4ஆம் பவுல் ஆகியோர்களால் Fano மற்றும் Perugiaவின் ஆளுனராக வெவ்வேறு காலத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். திரிதெந்து பொதுஅவையிலும் பங்கேற்றார். ஸ்பெயின் நாட்டில் மன்னர் 2ஆம் பிலிப்பின் அரசவையில் 7 ஆண்டுகள் திருப்பீடப் பிரதிநிதியாகச் செயலாற்றினார். பின்னர் 1573ஆம் ஆண்டில் வெனிஸ் அரசுக்கான திருப்பீடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 1577ஆம் ஆண்டில் Bologna நகரின் ஆளுநரானார். 1583ஆம் ஆண்டில் திருத்தந்தை 13ஆம் கிரகரியால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 1590ஆம் ஆண்டில் திருத்தந்தை 5ஆம் சிக்ஸ்துஸ் உயிரிழந்தவுடன் கூடிய 54 கர்தினால்களும் ஒரே வாரத்தில் கர்தினால் Castagnaவை, அதாவது 7ஆம் உர்பானை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். இவரின் தேர்வு அகில உலக திருஅவைக்கும் ஒரு பெரும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. ஏனெனில், இவர் கல்விமான், பக்திமான் என்பதையும் தாண்டி, மிகச்சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார்.
இத்திருத்தந்தை “உர்பான்” என்ற பெயரை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. அதாவது, இலத்தீன் மொழியில் ‘உர்பன்’ என்றால் இரக்கம் என்று அர்த்தம். அனைத்து குடிமக்களுக்கும் கருணை காட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் இவர். இந்த திருத்தந்தை 7ஆம் உர்பான் தேர்வு செய்யப்பட்டவுடன் செய்த முதல் காரியமே, உரோம் நகரில் ரொட்டிக்கடை வைத்திருப்பவர்கள் அனைவரும் பெரிய ரொட்டிகளைச் செய்து, குறைந்த விலைக்கு விற்கவேண்டும் என கட்டளையிட்டதாகும். இதனால் ரொட்டிக்கடைக்காரர்களுக்கு ஏற்படும் இழப்பை தன் சொந்த பணத்திலிருந்து வழங்கி ஈடுசெய்தார். வீண் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில், தன் கீழ் பணிபுரிபவர்கள் எவரும் விலையுயர்ந்த பட்டுத்துணிகளை அணியக்கூடாது என கட்டளையிட்டார். ஏழைகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, பல பொதுப்பணிகளை எடுத்து நடத்தினார். தன் உறவினர்கள் எவரையும் திருப்பீடப் பணிகளில் அமர்த்த மாட்டேன் என உறுதியிட்டுக் கூறினார். திருத்தந்தையர்களின் நெருங்கிய உறவினர்களை “மேதகு” என மதிப்புடன் அழைக்கும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது. அப்படி எவரும் தன் உறவினர்களை அழைக்கக்கூடாது என கட்டளையிட்டார். இத்தாலியின் ஜெனோவாவின் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனக்கு மரபு வழியில் கிடைத்த சொத்தை ஏழைப் பெண்களின் திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுக்கும்படி வழங்கினார். இவர் காலத்தில் வரதட்சனை(சீதனம்) வழங்கும் பழக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்திருத்தந்தை 7ஆம் உர்பான், தான் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே உடல் சுகவீனமுற்றார். இவர் சுகமடைய வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு செபவழிபாடுகளை நடத்தினர். தான் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நாட்களிலேயே எண்ணற்ற கருணை நடவடிக்கைகளை துவக்கிவைத்த இத்திருத்தந்தை, பாப்பிறையாக முடிசூட்டப்படுவதற்கு முன்னரே, 1590ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி காலமானார். இதற்குப்பின் பொறுப்பேற்றார் திருத்தந்தை 14ஆம் கிரகரி.
இத்தாலியின் மிலான் அருகே Somma என்னும் இடத்தில் 1535ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி பிறந்த Niccolo Sfondrati, 1560ஆம் ஆண்டில் Cremonaவின் ஆயராக நியமிக்கப்பட்டார். இவரின் தாய் இறந்தபின், மிலான் செனட் அவை அங்கத்தினராக இருந்த இவரின் தந்தை Francesco திருத்தந்தை 3ஆம் பவுலால் கர்தினாலாக உயர்த்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1583ஆம் ஆண்டில் பின்னாள் திருத்தந்தை 14ஆம் கிரகரியை, அதாவது Sfondratiயை, கர்தினாலாக உயர்த்தினார் திருத்தந்தை 13ஆம் கிரகரி. 1590ஆம் ஆண்டில் திருத்தந்தை 7ஆம் உர்பான் இறந்தபோது கூடிய கர்தினால்கள் அவை, இரண்டு மாதங்களுக்குப்பின் 14ஆம் கிரகரியை திருத்தந்தையாக தேர்வு செய்தது. ஆனால் இத்திருத்தந்தை, பாப்பிறை பதவியை விரும்பவேயில்லை. இவரை கர்தினால்கள் தேர்ந்தெடுத்தபோது, இவர் கூறிய முதல் வார்த்தைகள் என்ன தெரியுமா? ‘கடவுள் உங்களை மன்னிக்கட்டும். என்ன காரியம் செய்துவிட்டீர்கள்’, என்பதுதான்.
அவர் காலத்தில் வாழ்ந்த புனிதர்கள் Charles Borromeo, Philip Neri ஆகியோரின் நண்பராக இருந்த இத்திருத்தந்தை, செபத்திலும், ஒறுத்தலிலுமே அதிக நேரத்தைச் செலவிட்டார். கத்தோலிக்க மறையில் மூழ்கியிருந்த பிரான்ஸ் நாட்டில் Protestant கிறிஸ்தவ சபையினர் மன்னராக முடியாது என்ற சட்டம் இருந்தும், மூன்றாம் ஹென்றியின் மரணத்திற்குப்பின் (1589), அதையும் மீறி, கத்தோலிக்க மறையைத் தழுவுவேன் என்ற பொய்யான வாக்குறுதியை வழங்கி மன்னரான Navarreயின் ஹென்றியை திருத்தந்தை எதிர்த்தார். அதற்கென ஒரு படையையும் பிரான்ஸ்க்கு அனுப்பினார். இதற்கு இஸ்பெயின் மன்னர் இரண்டாம் பிலிப்புவின் ஆதரவும் இருந்தது. ஆனால் இந்த சிக்கல்கள் தீர்க்கப்படும் முன்னரே திருத்தந்தை 14ம் கிரகரி உரோம் நகரில் 1591ஆம் ஆண்டு அக்டோபர் 15ல் காலமானார். 10 மாதங்கள் 10 நாட்களே இவர் திருத்தந்தையாக பொறுப்பிலிருந்தார்.
இவருக்குப்பின் பொறுப்பேற்றவர், இத்தாலியின் Bologna நகரில் 1519ஆம் ஆண்டு ஜூலை 22ஆ, தேதி பிறந்த திருத்தந்தை 9ஆம் இன்னசென்ட்(Giovanni Antonio Facchinetti). சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், கர்தினால் Nicolò Ardinghelliயின் செயலராக பணியாற்றினார். 1560ஆம் ஆண்டில் இத்தாலியின் Nicastro ஆயரானார். 1566ஆம் ஆண்டில் வெனிஸ் அரசுக்கான திருப்பீடத் தூதுவராக நியமிக்கப்பட்டார். 1575ஆம் ஆண்டில் எருசலேமின் முதுபெரும்தந்தையாகவும், 1583ஆம் ஆண்டில் கர்தினாலாகவும் அறிவிக்கப்பட்டார். திருத்தந்தை 14ஆம் கிரகரி நோய்வாய்ப்பட்டிருந்த கடைசி நாட்களில் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்தவர் இவர்தான். திருத்தந்தை 14ஆம் கிரகரி இறந்தபோது, திருத்தந்தை 9ஆம் இன்னசென்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாட்களில், அதாவது 1591ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி காலமானார்.
நேயர்களே! இன்று மூன்று திருத்தந்தையர்களின் வரலாற்றை நோக்கியுள்ளோம். வரும் வாரம் 1592ஆம் ஆண்டிலிருந்து நம் பயணத்தைத் தொடர்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்