தேடுதல்

கர்தினால் Blase Cupich கர்தினால் Blase Cupich 

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கிறிஸ்துவின் அன்பில் நிறைவு பெற்றவர்

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் இயேசுவுடனான தனது ஆழமான உறவில் பணிவுடன் வாழ்ந்ததற்கான சான்றைப் பதிவுசெய்துள்ளார் : கர்தினால் Cupich

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இறைபதம் சேர்ந்த முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் நற்செய்தியின் அழைப்பிற்குச் சான்று பகர்வதையும், தாழ்மையான மனதுடன் பணியாற்றுவதையும் தனது வாழ்வின் நோக்கமாக்கிக் கொண்ட ஓர் அறிவார்ந்த மனிதர் என்று கூறியுள்ளார் Chicagoவின் கர்தினால் Blase Cupich.

ஜனவரி 02, இத்திங்களன்று, Chicago-வில் முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் நிறையமைதி அடைய நிறைவேற்றிய சிறப்புத் திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறியுள்ள கர்தினால் Cupich அவர்கள், மறைந்த திருத்தந்தை தனது தனித்துவமான ஆளுமையையும், இயேசுவின்மீதான தனது ஆழ்ந்த அன்பையும் இறுதிவரை கொண்டிருந்தவர் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

அறிவார்ந்த செயல்களைக் கற்றுக்கொள்வதில் அவரிடம் விளங்கிய அர்ப்பணம், நாம் சார்ந்துள்ள சமூகத்தால்தான் நமது வாழ்க்கை வரையறை செய்யப்படுகிறது என்ற அசைக்க முடியாத அவரது நம்பிக்கை, இயேசு கிறிஸ்துவின்மீதான தீவிரமான ஈர்ப்பு ஆகிய மூன்றும்தான் முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனெடிக்ட்டின் மனத்தாழ்மைக்கு மிகப்பெரும் சான்றாக அமைகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் Cupich.

உயர்ந்த சிந்தனைகள், நெறிமுறைகள் வழியாக மட்டுமல்ல, மாறாக, எளிய மனிதராக, இயேசுவுடன் எப்போதும் நெருக்கமாக இருக்கும்பொருட்டு, ஒரு நம்பிக்கையான உறவில் நுழைவதற்கு அவர் தன்னை முழுவதுமாகத் தாழ்த்திக்கொண்டார் என்றும், ‘தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்’ என்ற ஆண்டவரின் வார்த்தைகள் இவரில் நிறைவு பெறுகின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் கர்தினால் Cupich

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2023, 14:26