தேடுதல்

வத்திக்கான் பெருங்கோவிலில் முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் உடலை தரிசிக்க கூடியிருந்த மக்கள்..  வத்திக்கான் பெருங்கோவிலில் முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் உடலை தரிசிக்க கூடியிருந்த மக்கள்..   (ANSA)

மிகச்சிறந்த இறையியலாளர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

திருத்தந்தை பெனடிக்ட் கடவுளின் நற்செய்தியை உலகம் முழுவதும் எடுத்துரைப்பதில் பேரார்வம் கொண்ட சிறந்த போதகர் - கர்தினால் ஃபெராவோ.

மெரினா ராஜ் – வத்திக்கான்

20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இறையியலாளராக, கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றும் பேரார்வம் கொண்டவராகத் திகழ்ந்தவர் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் என்று குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பிலிப்பு நேரி ஃபெராவோ.

சனவரி 02, திங்கள் உரோம் நேரம் காலை  09.00 மணியளவில் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலிற்கு, முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் உடல் கொண்டுவரப்பட்ட நிலையில் ஆசியத் தலத்திரு அவையின் தலைவர்கள் பலர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயரும் CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ அவர்கள், திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் மறைவிற்கு தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள், சிறந்த அறிவாற்றல், தூய்மை, தாழ்ச்சி போன்றவற்றைக் கொண்ட உயர்ந்த மனிதர், 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இறையியலாளர்களுள் ஒருவர், கடவுளின் நற்செய்தியை உலகம் முழுவதும் எடுத்துரைப்பதில் பேரார்வம் கொண்ட சிறந்த போதகர் என்றும் அவரைக் குறித்துக் கூறியுள்ளார் கர்தினால் ஃபெராவோ.  

மேலும் திருத்தந்தையின் இறுதிச்சடங்கு நாள் நடைபெற இருக்கும் சனவரி 5 வியாழனன்று இந்திய நேரம் மாலை 4.30 மணியளவில் பழைய கோவா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்படும் எனவும், அந்நாளில் கத்தோலிக்க மறைமாவட்ட அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் திறக்கப்படாது எனவும் வத்திக்கான் கொடியானது அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டு திருத்தந்தையின் மறைவிற்கு இவ்வாறாக அஞ்சலி செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளார் கர்தினால் ஃபெராவோ.

கல்வி மற்றும் செபத்தில் தாழ்ச்சியான மனிதர், மனித உரிமைகளின் பாதுகாவலர், ஆன்மீக வழிகாட்டி,  திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் என்பதாகவும், அவரது இழப்பு மிகுந்த துயரத்தைத் தருவதாகவும் கூறியுள்ளார் அந்தோணியோ கூட்டரேஸ்.

ஒவ்வொரு மனிதரும் தங்களால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை உணர அனுமதிப்பதன் வழியாகப் பன்னாட்டு உறவுகளை வளர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர் என்றும், விளிம்புநிலை மக்களின் ஒற்றுமைக்கான அவரது ஆற்றல்மிக்க  அழைப்புகள் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளியை மூடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார் கூட்டரேஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2023, 15:43