தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் கர்தினால்Louis Raphael Sako திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் கர்தினால்Louis Raphael Sako  

ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிப்பதை சுவாசமாகக் கொள்ளுங்கள்

வன்முறையை எதிர்த்தல், ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை மத்திய கிழக்கில் உள்ள கிறிஸ்தவர்களுக்குப் புத்துணர்ச்சியுள்ள உயிர்சுவாசத்திற்கு உறுதி அளிக்கும் - கர்தினால் Sako

மெரினா ராஜ் – வத்திக்கான்

வன்முறையை எதிர்த்தல், ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவைகளை உங்கள் வாழ்வின் உயிர் சுவாசமாகக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் கர்தினால் Louis Raphael Sako,

சனவரி 18 புதன் முதல் 25 புதன் வரை திருஅவை சிறப்பிக்க உள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைக் குறித்துப் பேசுகையில் இவ்வாறு கூறியுள்ள கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Sako அவர்கள், மத்திய கிழக்கில் உள்ள கிறிஸ்தவர்களுக்குப் புத்துணர்ச்சியுள்ள உயிர்சுவாசமாக இவை உறுதி அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் பெரும்பான்மையினராக இருந்த கிறிஸ்தவர்கள், மோதல், பாகுபாடு, வன்முறை மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றால் சிறுபான்மையினராக மாறிவிட்டனர் என்றும், பல்வேறு மதப் பிரிவுகளின் தலைவர்கள் தேவையற்ற வேறுபாடுகளைக் கடந்து, வன்முறை, பயம் போன்றவற்றை எதிர்த்து, இருக்கும் இடங்களில் தங்கள் இருப்பை பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் சாக்கோ

நன்மை செய்ய கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித்தேடுங்கள் என்ற இறைவாக்கிற்கேற்ப 2023ஆம் ஆண்டு கொண்டாடப்பட இருக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் கருப்பொருள் ஒற்றுமை மற்றும் அமைதிக்கான செபமாக அமையும் என்றும் கர்தினால் சாக்கோ கூறியுள்ளார்.

உரோம் புனித பவுல் பெருங்கோவில்
உரோம் புனித பவுல் பெருங்கோவில்

உண்மையான குடியுரிமை, சமூகநீதி, சமத்துவம், அரசியல் போன்றவற்றை தனிப்பட்ட, மற்றும் சமூக நிலையில் அடைய கல்வி கற்பது மிக அவசியம் என்றும், ஒன்றுபடுத்தும் வார்த்தைகள் வழியாக இளையோரை ஒருங்கிணைத்து நம்பிக்கையை வலுப்படுத்தி எதிர்காலத்தை வளமாக்குவோம் என்றும் கூறியுள்ளார் கர்தினால் சாக்கோ.

நம்பிக்கைக்கும் பகுத்தறிவிற்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ வேண்டும் எனவும், கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் வழியாக கலாச்சார, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு தலத்திருஅவை பதிலளிக்க முடியும் எனவும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் சாக்கோ.

வன்முறையை எதிர்த்தல், ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை மத்திய கிழக்கில் உள்ள கிறிஸ்தவர்களுக்குப் புத்துணர்ச்சியுள்ள உயிர்சுவாசத்திற்கு உறுதி அளிக்கும் என்றும், ஒற்றுமை என்பது ஆன்மீக, கலாச்சார, இறையியல், வழிபாட்டு மற்றும் இசை பாரம்பரியத்தின் உள்ளார்ந்த தனித்தன்மைகளை இரத்து செய்வதைக் குறிக்காது எனவும் கூறிய கர்தினால் சாக்கோ அவர்கள், பிளவுகளில் எதிர்காலம் இல்லை, ஒற்றுமையும் ஒன்றிணைந்த பயணமுமே உயிர்வாழ்வதற்கான உறுதி என்றும், நம்பிக்கை, நமது நாடு, நமது எதிர்காலம் ஆகியவையே நம்மை ஒன்றிணைக்கின்றன என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2023, 14:39