தேடுதல்

தந்தை ஈசாக்கிடமிருந்து தலைமகன் ஆசீரைப் பெறும் யாக்கோபு தந்தை ஈசாக்கிடமிருந்து தலைமகன் ஆசீரைப் பெறும் யாக்கோபு   (Л)

தடம் தந்த தகைமை – மூத்த மகனின் ஆசீரை தட்டிப்பறித்தல்

தன் மூத்த சகோதரனின் உடையை அணிந்து, அவன் போல் உடலில் உரோமங்களை வைத்து ஏமாற்றி தந்தையின் ஆசீரைப்பெற்றான் யாக்கோபு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று. அவர் தம் மூத்த மகன் ஏசாவை நோக்கி, “இதோ பார்; எனக்கு வயதாகிவிட்டது. காட்டுக்குப் போ. வேட்டையாடி, எனக்கு வேட்டைக்கறி கொண்டு வா. நான் விரும்பும் முறையில் சுவையான உணவு வகைகளைச் சமைத்து என்னிடம் கொண்டு வா. நான் அவற்றை உண்பேன். நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்” என்றார்.

ஈசாக்கு தம் மகன் ஏசாவிடம் பேசியதை ஈசாக்கின் மனைவி ரெபேக்கா கேட்டுக்கொண்டிருந்தார். வேட்டையாடி வேட்டைக்கறி கொண்டு வருமாறு ஏசா காட்டிற்குப் புறப்பட்டவுடன், அவர் தம் மகன் யாக்கோபை நோக்கி, “உன் தந்தை உன் சகோதரன் ஏசாவுக்குச் சொன்னது என் காதில் விழுந்தது. உடனே மந்தைக்குப் போ, அங்கிருந்து இரு நல்ல வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டு வா. நான் அவற்றை உன் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சுவையான உணவு வகைகளாகச் சமைத்துத் தருவேன். நீ அவற்றை உன் தந்தைக்கு உண்ணக் கொடுத்து அவர் சாவதற்கு முன் அவர் ஆசியைப் பெற்றுக்கொள்” என்றார். தாய் ரெபேக்கா, ஈசாக்குக்கு விருப்பமான சுவையுள்ள உணவு வகைகளைத் தயாரித்தார். மேலும், ரெபேக்கா தம்முடன் வீட்டில் வைத்திருந்த தம் மூத்த மகன் ஏசாவின் உடைகளில் சிறந்தவற்றைத் தம் இளைய மகன் யாக்கோபுக்கு உடுத்துவித்தார். அவன் கைகளையும் மிருதுவான கழுத்தையும் வெள்ளாட்டுக் குட்டிகளின் தோலால் மூடினார். அவர் சுவையான உணவு வகைகளையும், தாம் சுட்ட அப்பங்களையும் தம் மகன் யாக்கோபின் கையில் கொடுத்தார்.

யாக்கோபு தன் தந்தை அருகில் வந்தான். அவன் கைகள் அவன் சகோதரன் ஏசாவின் கைகளைப்போல் உரோமம் அடர்ந்தவையாய் இருந்ததால், அவனை அவர் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. யாக்கோபு அணிந்திருந்த ஏசாவின் ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து அவனை ஏசா என நினைத்து ஈசாக்கு ஆசி வழங்கினார். தந்தையை ஏமாற்றி ஆசீரைப் பெற்றுக்கொண்டார் யாக்கோபு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2023, 14:43