தண்ணீர்  தரும் ரெபேக்கா தண்ணீர் தரும் ரெபேக்கா 

தடம் தந்த தகைமை – ஈசாக்குக்கு ஒரு துணை தேடியது

இரக்கக் குணமும், தாராளச் சிந்தனையும், பிறர்க்குதவும் மன நிலையும் கொண்ட ஒரு பெண்ணை ஆபிரகாமின் மகனுக்குத் தேடினார் அவரின் பணியாளர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆபிரகாம் வயது மிகுந்தவராய் முதுமை அடைந்தார். ஒருநாள் அவர் தம் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை நோக்கி, “என் சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண்கொள்வாய்’’ என்று அனுப்பிவைத்தார். அவர் தம் தலைவரின் ஒட்டகங்களிலிருந்து பத்து ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, அவருக்குரிய எல்லாவற்றிலும் சிறந்தவற்றைத் தம் கையோடு எடுத்துக்கொண்டு மெசபொத்தாமியாவிலிருந்த நாகோர் நகர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். பெண்கள் தண்ணீர் எடுக்கவரும் மாலை நேரத்தில், நகர்ப்புறமிருந்த கிணற்றின் அருகில் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் காட்டுமாறு அவர் அவற்றை மண்டியிடச் செய்தார். அப்போது அவர் சொன்னது, “இதோ நான் நீரூற்றின் அருகில் நிற்கிறேன். நகர் மக்களின் புதல்வியர் தண்ணீர் எடுக்க இங்கே வருவார்கள். அப்பொழுது நான் ‘தண்ணீர் பருகும்படி உன் குடத்தைச் சாய்த்துக் கொடு’ என்று கேட்க, ‘குடியுங்கள்; மேலும் உங்கள் ஒட்டகங்களுக்கும் குடிக்கத் தண்ணீர் இறைத்து ஊற்றுவேன்’என்று எந்த இளம்பெண் மறுமொழி சொல்வாளோ, அவளே ஈசாக்கிற்கு இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவள் ஆவாளாக!” என்றார்.

அவர் இவ்வார்த்தைகளைத் தமக்குள் சொல்லி முடிக்குமுன்பே, இதோ ரெபேக்கா தம் தோள்மீது குடத்தை வைத்துக்கொண்டு வந்தார். அவர் ஆபிரகாமின் சகோதரர் நாகோருக்கும் அவர் மனைவி மில்க்காவுக்கும் பிறந்த பெத்துவேலின் மகள். ஆபிரகாமின் வேலைக்காரர் அவரைச் சந்திக்க ஓடிச்சென்று, “உன் குடத்தினின்று எனக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கத் தருவாயா?” என்று கேட்டார். உடனே அவரும் “குடியுங்கள் ஐயா” என்று விரைந்து தம் குடத்தை தோளினின்று இறக்கி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். அவர் குடித்து முடித்ததும், மீண்டும் அவரை நோக்கி, “உங்கள் ஒட்டகங்களும் குடித்து முடியுமட்டும் நான் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றார். ஒட்டகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் இறைத்து ஊற்றினார். அப்போதே தன் தலைவரின் மகனுக்குரிய பெண்ணைக் கண்டுகொண்டார் ஆபிரகாமின் பணியாளர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2023, 10:27