தடம் தந்த தகைமை – கோலியாத்தின் ஆணவப் பேச்சு
மெரினா ராஜ் – வத்திக்கான்
பெலிஸ்தியர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகப் போரிட இஸ்ரயேல் நாட்டின் அருகில் முகாமிட்டுத் தங்கினர். இஸ்ரயேல் மக்களும் ஒன்றுதிரண்டு ஒரு முகாம் அமைத்து பெலிஸ்தியருக்கு எதிராகப் போரிட அணிவகுத்தனர். பெலிஸ்தியர் மலையின் ஒர் பக்கமும் இஸ்ரயேலர் மற்றோர் மலையின் மறுபக்கமும் நின்றிருக்க அவர்களுக்கு நடுவேப் பள்ளத்தாக்கு ஒன்று இருந்தது. பெலிஸ்தியர் படையிலிருந்து கோலியாத்து என்ற வீரன், இஸ்ரயேலரைத் தாக்க பெரும்படை தேவையில்லை நான் ஒர் ஆள் போதும் என்று ஆணவத்துடன் கூறி வந்தான். அவன் ஆறரை முழம் உயரத்துடனும், தலை, மார்பு, மற்றும் கால்களில் அதிக எடையுடன் கூடிய வெண்கலத்தாலான கவசங்களையும் தோள்களுக்கிடையில் வெண்கல எறிவேலையும் அணிந்திருந்தான். அவனது ஈட்டியின் கோல் தறிக்கட்டைப் போல் பெரியதாகவும், ஈட்டியின் முனை ஏழு கிலோ இரும்பாலும் ஆனது. அவனுடைய கேடயம் தாங்குவோன் அவனுக்கு முன்பாக நடக்க, அவன் இஸ்ரயேல் படைகளைப் பார்த்து உரத்த குரலில் “நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன்! உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும். அவன் என்னுடன் போரிட்டு என்னைக் கொன்றால் பெலிஸ்தியர்களாகிய நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம். நான் அவனை வென்றுக் கொன்று விட்டால் இஸ்ரயேலர்களாகிய நீங்கள் எல்லாரும் எங்களுக்கு அடிமைகளாகிப் பணி செய்ய வேண்டும் என்றான். இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு பயந்து நடுங்கினர். அந்தப் பெலிஸ்தியன் காலையிலும், மாலையிலும் நாற்பது நாள்கள் இவ்வாறு சவால் விட்டான். இஸ்ரயேல் படையினர் அனைவரையும் பயமுறுத்தி ஆணவப் பேச்சுக்களால் அகந்தை கொண்டு வாழ்ந்து வந்தான். அதனால் தாவீது என்னும் சிறுவன் கையால் உயிரிழந்தான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்