தேடுதல்

ஆபிரகாம் வேடமணிந்த Misteri Campobasso கத்தோலிக்கர்கள் ஆபிரகாம் வேடமணிந்த Misteri Campobasso கத்தோலிக்கர்கள் 

தடம் தந்த தகைமை : உயிருக்குப் பயந்து மனைவியை சகோதரி என்றவர்

கடவுள் மன்னரைத் தண்டிப்பது என முடிவெடுத்து, மன்னருக்கும் அவர் உறவினர்கள் பலருக்கும் கொள்ளை நோய் வரச் செய்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஆபிரகாம் என்ற மனிதர், கடவுள் தனக்குத் தரவிருக்கும் வளமான ஒரு வாழ்வு தேடி தன் அழகான இளம் மனைவியுடன் எகிப்து நோக்கிப் பயணமானார். எகிப்திற்குள் நுழைந்ததும் அவருக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. தன் இளம் மனைவியைk கவர்ந்து செல்வதற்காக இந்த முரட்டு மனிதர்கள் தன்னைக் கொன்று விடலாம் என அஞ்சினார். எனவே தன் மனைவியிடம், நீ என்னை உன் சகோதரன் என்று மற்றவர்களிடம் கூறு, என்று ஆலோசனை வழங்கினார். ஓர் அழகான இளம்பெண் அவர் சகோதரனுடன் நாட்டிற்குள் வந்துள்ளதை அறிந்த மன்னர், அப்பெண்னையும் அவர் சகோதரனையும் அழைத்துவர ஆணைப் பிறப்பித்தார். சாரா என்ற அந்த இளம்பெண்ணை மணம்புரிய விரும்பிய மன்னர், ஆபிரகாமுக்கு ஏராளமான செல்வங்களையும், கால்நடைகளையும், பணியாட்களையும் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு, சாராவை தன் அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆணையிட்டார். ஆபிரகாம் ஒன்றும் பேசாமல் அரண்மனையை விட்டு வெளியேறி, நேரடியாக கடவுளின் சந்நிதிக்குச் சென்று, தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிக் கடவுளிடம் முறையிட்டுப் புலம்பினார். கடவுள் மன்னரைத் தண்டிப்பது என முடிவெடுத்து, மன்னருக்கும் அவர் உறவினர்கள் பலருக்கும் கொள்ளை நோய் வரச் செய்தார். திடீரென தன் குடும்பமே நோயில் விழுந்ததைக் கண்ட மன்னர் அதிர்ந்தார. எந்த வைத்தியராலும் நோயைக் குணமாக்க முடியவேயில்லை.

அரச குடும்பத்துக்கு நேர்ந்துள்ள இந்த நோய், கடவுளின் சாபமாக இருக்கக் கூடுமோ என்னும் சந்தேகம் வரவே, தன்னுடைய  ஆட்சியில் ஏதேனும் தவறு நடந்திருக்கிறதா என்பதை ஆராய மன்னர் ஆணையிட்டார். அரச ஆணைகளையும், திட்டங்களையும், செயல்பாடுகளையும் குடைய ஆரம்பித்த அலுவலர்கள், சாரா ஆபிராமின் சகோதரி அல்ல மனைவி என்ற உண்மையை வெளிச்சத்துக்குக் கொணர்ந்தனர்.

செய்தி அறிந்த மன்னர் கடும் கோபமடைந்தார். ‘உன் உயிருக்குப் பயந்து, உன் மனைவியை சகோதரி என்று பொய் கூறியதால், இன்று அரச குடும்பமே நோயில் வாடுகிறது. இனிமேல் நீ எகிப்தில் தங்கக்கூடாது, இப்போதே இங்கிருந்து உன் மனைவியை அழைத்துக்கொண்டு வெளியேறிவிடு’, என்று கடுங்கோபத்துடன் கட்டளையிட்டார்.  

ஆபிரகாம் தன் மனைவி தன்னிடம் மீண்டு வந்த மகிழ்ச்சியில் எகிப்தை விட்டு வெளியேறினார். அந்நேரமே மன்னரின் குடும்பத்தைப் பிடித்திருந்த நோயும் அகன்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஜனவரி 2023, 14:06