தடம் தந்த தகைமை : இஸ்ரயேல் மக்களின் மீட்பராகப் பிறந்த மோசே!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அக்காலத்தில் லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப்பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொண்டார். அப்பெண் கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தை மிகவும் அழகாக இருந்ததால் மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள். ஆனால், அதற்கு மேலும் அதனை மறைத்து வைக்க முடியாததால், கோரைப்புல்லால் பேழை ஒன்றை செய்து அக்குழந்தையை அதனுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவிட்டாள். மேலும், அக்குழந்தைக்கு என்ன நிகழும் என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டு கவனித்துக்கொண்டிருந்தாள்.
அந்நேரத்தில், பார்வோனின் மகள் வந்து நைல்நதியில் நீராடிக்கொண்டிருந்தாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அப்போது, அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதைக் கொண்டு வந்து திறந்து பார்த்தபோது அதில் ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள். அது அழுதுகொண்டிருந்தது. அக்குழந்தையின்மீது அவள் இரக்கம் கொண்டவளாய், “இது எபிரேயக் குழந்தை” என்றாள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி, “உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் போய் அழைத்து வரட்டுமா?” என்று கேட்டாள். அதற்குப் பார்வோனின் மகள், “சரி, அப்படியே செய்” என்றாள். அந்தப் பெண் விரைவாக ஓடிச்சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். பார்வோனின் மகள் அவளை நோக்கி, “இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்” என்றாள். அவளும் குழந்தையை எடுத்துச் சென்று அதற்குப் பாலூட்டி வளர்த்தாள். குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கூட்டி வந்தாள். அவள் அவனைத் தன் மகனாக ஏற்றுக்கொண்டாள். ‘நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்’ என்று கூறி அவள் அவனுக்கு ‘மோசே’ என்று பெயரிட்டாள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்