தேடுதல்

பேரரசர் தாவீது பேரரசர் தாவீது  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 37-1 ‘நம்பத்தக்கவராய் வாழ்வோம்’

பொல்லாரைக் குறித்து கவலைகொள்ளாது, ஆண்டவரை நம்புவோம், நம்மைச் சுற்றியுள்ளோருக்கு நம்பத்தக்கவராக வாழ்வோம்.
திருப்பாடல் 37-1

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘இறைவனே என்றுமுள்ள ஒளி!' என்ற தலைப்பில் 36-வது திருப்பாடலில் 09 முதல் 12 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வந்தோம். இவ்வாரம் திருப்பாடல் 37 குறித்துத் தியானிப்போம். ‘பொல்லார், நல்லார் முடிவுகள்' (தாவீதுக்கு உரியது) என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 40 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இத்திருப்பாடல் பார்ப்பதற்கு ஒரு மறையுரைப்போன்று காட்சியளிக்கின்றது. காரணம், பொல்லாரின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் அழிவு குறித்து அறிவுரை வழங்கும் தாவீது அரசர், நல்லாரின் செயல்பாடுகள், அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் என்றுமுள்ள கடவுளின் உதவி ஆகியவற்றைக் குறித்தும் படிப்பினைகளை வழங்குகின்றார். மேலும், இத்திருப்பாடல் நீதிமொழிகள் நூலை நமக்கு நினைவுபடுத்துகின்றது. ஏனென்றால், அதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள், நெறிமுறைகள், வழிகாட்டல்கள் யாவும் இத்திருப்பாடலிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இறுதியாக, தன்மீது நம்பிக்கைகொண்டுள்ள நல்லார் அனைவரையும் பொல்லாரிடமிருந்து கடவுள் காப்பாற்றுகின்றார் என்றும், நல்லார் கடவுளை மட்டுமே தங்களின் அடைக்கலமாகக் கொண்டுள்ளதால் ஆண்டவராம் கடவுள் அவர்களை எப்போதும் மீட்கின்றார் என்றும் கூறி, இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது அரசர்.

இன்று இந்திருப்பாடலின் முதல் மூன்று வசனங்களை நாம் தியானிப்பதற்கு எடுத்துக்கொள்வோம். இப்போது அவ்வார்த்தைகளை பக்தியுணர்வுடன் வாசிக்கக் கேட்போம். தீமை செய்வோரைக் கண்டு  மனம் புழுங்காதே; பொல்லாங்கு செய்வாரைக் கண்டு பொறாமைப்படாதே; ஏனெனில், அவர்கள் புல்லைப் போல் விரைவில் உலர்ந்து போவர்; பசும் பூண்டைப்போல் வாடிப்போவர். ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ் (வசனம் 01-03).

நல்ல மனம் கொண்ட மன்னர் ஒருவர் இருந்தார். அவர் எப்போதும் நாட்டு மக்களுக்கு நன்மையே செய்யவேண்டும் என்று  எண்ணியவர். அவர் ஒரு நாள் அமைச்சர்கள் மூவரை அழைத்து நாட்டு நலப்பணிகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் அதனை செயல்படுத்துவதற்கான அதிகாரங்களையும் கொடுத்தார். சில ஆண்டுகள் கழித்து மக்கள் நலப்பணிகளில் ஊழல் நடப்பதாக மக்களிடமிருந்து அதிகமான புகார்கள் எழத் தொடங்கின. “நமது வயிற்றில் அடித்துவிட்டு இம்மூன்று அமைச்சர்களும் நன்றாகத் தின்று கொழுக்கிறார்களே, மன்னர் நமது நலன்களுக்காக ஒதுக்கும் பணத்தையெல்லாம் இவர்கள் கொள்ளையடிக்கிறார்களே, இவர்களுக்குத் தண்டனையே இல்லையா” என்று நாட்டு மக்கள் அனைவரும் புலம்பத் தொடங்கினர். இதனை அறிந்த மன்னர் அந்த மூன்று அமைச்சர்களையும் அழைத்து விசாரித்தார். “நான் அப்படிச் செய்யவே இல்லை, நீங்கள் கொடுத்த பொறுப்பை மிகவும் கண்ணும் கருத்துமாக செய்கிறேன்” என்று ஒவ்வொருவரும் கூறத் தொடங்கினர். இதைக் கேட்டதும், ‘தவறு நடந்திருக்கின்றது ஆனாலும், இம்மூவரில் கெட்டவர் யார் நல்லவர் யார்’ என்பதை அறிய விரும்பினார் மன்னர்.

மறுநாள் அம்மூவரையும் அழைத்த மன்னர், “உங்களுக்குக் களப்பணிகள் தர விரும்புகின்றேன். இப்போது உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சாக்குக் கொடுக்கப்படும். அதை எடுத்துக்கொண்டு நமது நாட்டின் எல்லைப்புறத்திலுள்ள காடுகளுக்குச் சென்று பழங்கள், காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றால் நிரப்பிக்கொண்டு வாருங்கள்” என்றார். உடனே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சாக்குகளை வாங்கிக்கொண்டு காடுகளுக்குப் போய் மன்னர் கூறியவாறே செய்யத் தொடங்கினர். அப்போது  முதலாமவர் நேரிய மனதுடன் அவருடைய சாக்கில் முழுமையாக பழங்கள், காய்கறிகள், கிழங்குகள் கொண்டு நிரப்பினார். இவருக்கு தனது வேலையை செய்து முடிக்க ஒருநாள் ஆயிற்று. மற்ற இருவரும் மிகப்பெரும் ஊழல் செய்து மக்களுக்குத் தீமையை விளைவித்தவர்கள். அதுமட்டுமன்றி அரண்மனைகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள். ஆகவே, அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது. ‘மன்னர் இந்தச் சாக்கைத் திறந்தா பார்க்கபோகின்றார்’ என்று அவர்கள் நினைத்தனர். அதனால், இரண்டாமவர் தன்னுடை சாக்கில் முக்கால் பகுதிக்கு அழுகிய பழங்கள், காய்கறிகள், கிழங்குகளையும் மேல்பகுதியில் சில நல்ல பழங்களையும் கொண்டு நிரப்பி அரை நாளில் தனது வேலையை முடித்துவிட்டார். மூன்றாமவரோ தனது சாக்கில் காய்ந்த சருகுகளைக் கொண்டு நிரப்பி சில மணித்துளிகளிலேயே மன்னரிடம் கொண்டுவந்துவிட்டார். அப்போது அமைச்சர்கள் மூவரையும் அவர்கள் கொண்டு வந்த சாக்குகளுடன் பாதாளச்சிறையில் அடைந்துவிட்டார் மன்னர். மூன்றாமவர் உணவின்றி ஒரு சில நாள்களிலேயே மரணமடைந்துவிட்டார். இரண்டாமவர் சில நாள்களே தாக்குப்பிடித்த நிலையில் இறந்துவிட்டார். தன் செயல்களில் உண்மையாக நடந்துகொண்டதால், தான் சேகரித்த உணவுப்பொருள்களை உண்டு பலநாள் உயிர்வாழ்ந்தார் முதலாமவர். அவரை அழைத்த மன்னர், “நீர்தான் ஊழல் செய்யாத உத்தமர், நல்லவர் என்று புகழ்ந்து அவருக்கு உயர்பதவி வழங்கி அவரைத் தனது அருகில் வைத்துக்கொண்டார். இதையறிந்த நாட்டு மக்கள் அனைவரும் பொல்லாரை அழித்து நல்லாரைக் காப்பாற்றிய மன்னரைப் போற்றிப் புகழ்ந்தனர்.

இன்றைய நம் சமுதாயத்திலும் நடப்பதும் இதுதானே. “பொல்லாதப் பயலுக இவ்வளவு அநியாயம் பண்ணுறாங்களே, இவனுங்களுக்கெல்லாம் ஒரு கேடும் வரமாட்டேங்குதே... பாவிப்பயலுக அப்படியே குத்துக் கல்லாட்டம் இருக்கானுங்களே... கடவுள் இப்படிப்பட்டவர்களை ஒன்னும் கேட்கமாட்டேங்கிறாரே...” என்றெல்லாம் பொல்லாரைக் குறித்து அழுதுப் புலம்பி அங்கலாய்க்கின்றோம். அதேவேளையில், பொல்லாரைக் குறித்து வீணாகக் கவலைப்பட்டு நமது விசுவாச வாழ்வை நாம் இழந்துவிடக் கூடாது என்பதை வீட்டிலுள்ள முதியோரும், அருள்தந்தையர்களும், ஆன்மிக வழிகாட்டிகளும் நமக்கு அறிவுறுத்தியுள்ளதையும் இக்கணம் நினைவுகூர்வோம். இதைத்தான் இன்று நாம் சிந்திக்கும் இந்தத் திருப்பாடலின் இறைவார்த்தையிலும் எடுத்துக்காட்டுகின்றார் தாவீது அரசர். மேலும், அவர்கள் இழைத்த தீங்கை அவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்; அவர்கள் செய்த தீமையின் பொருட்டு அவர்களை அழிப்பார்; நம் கடவுளாம் ஆண்டவர் அவர்களை அழித்தே தீர்வார் (திபா 94:23), என்றும், பொல்லார் புல்லைப்போன்று செழித்து வளரலாம்; தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்! ஆனால், அவர்கள் என்றும் அழிவுக்கு உரியவரே (திபா 92:7) என்றும், அவர்கள் எவ்வளவு விரைவில் ஒழிந்து போகிறார்கள்! அவர்கள் திகில் பிடித்தவர்களாய் அடியோடு அழிந்து போகிறார்கள்! (திபா 73:19) என்றும், பொல்லாரின் பேரழிவுக் குறித்து வேறுசில திருப்பாடல்களிலும் எடுத்துரைக்கின்றார் தாவீது அரசர். மேலும், பொல்லாரின் குடி வேரோடழியும்; நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும் (நீமொ 14:11) என்றும், ஆண்டவரின் வழி நல்லார்க்கு அரணாகும்; தீமை செய்வோர்க்கோ அது அழிவைத் தரும் (நீமொ 10:29:) என்றும் நீதிமொழிகள் நூலும் நமக்கு எடுத்துரைக்கின்றது

நான் குருப்பட்டம் பெற்றதும் கிளைப்பங்கு ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது ஓர் இளைஞர் என்னிடம் வந்து ஒரு நிகழ்வு பற்றி பகிர்ந்துகொண்டார். "சாமி எங்கள் ஊரில் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர். அவர் செய்யாத தீமையே கிடையாது. அதனால் இந்த ஊரில் பலர் அவர்மீது வெறுப்புக்கொண்டிருந்தனர். ஒருமுறை ஊர்த் திருவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது அலங்காரம் செய்யப்பட்ட தேர் ஊரின் வீதிகளைச் சுற்றி வலம்வந்த பிறகு முக்கிய சாலையில் வந்துகொண்டிருந்தது. அப்போது அந்தப் பொல்லார் வந்து தனது வலதுகாலை உயர்த்தி அந்தத் தேரை உதைத்து நிறுத்தினார். “நான் சொல்லும் வரை இந்தத் தேர் இந்தவிடத்தைவிட்டு நகரக்கூடாது” என்று அராஜகம் செய்தார். இதனால் அங்குச் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் தேர் அவ்விடத்தைவிட்டுச் சென்றுவிட்டது. “சாமி தேரை இப்படி உதைத்து நிறுத்திட்டானே அந்தப் பொல்லாதப் பய. அந்தக் கடவுள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்... ஒன்றும் செய்யமாட்டேன்கிறாரே” என்றெல்லாம் மக்கள் மீண்டும் புலம்பத் தொடங்கினர். இச்சம்பவம் நிகழ்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விபத்தில் அப்பொல்லார் கொடூரமாக இறந்துபோனார். இந்நிகழ்வை என்னிடம் கூறியவர், “சாமி எங்க ஊருல இதேமாதிரி தலைகால் புரியாம ஆட்டம் போட்டவர்களை எல்லாம் கடவுள் உரு தெரியாம அப்படியே அடக்கிவிட்டார்” என்றார். ஆம், அவரவர் செய்யும் செயலுக்கேற்ற பலனைப் பெறுவர் என்பது எவ்வளவு உண்மை என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

இதன் காரணமாகவே, தீமை செய்வோரைக் குறித்து மனவருத்தம் அடையாதே, அவர்கள்மீது பொறாமை கொள்ளாதே, காரணம் அவர்கள் புல்லையும் பூண்டையும்போல வாடிவிடுவர் என்று எடுத்துக்காட்டும் தாவீது அரசர், ஆண்டவரை நம்பு, நலமான காரியங்களைச் செய் என்றும் நம்மை அறிவுறுத்துகின்றார். ஆகவே, நமது அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி நிகழும் பொல்லாரின் அட்டூழியச் செயல்களை நினைத்து வருத்தமடையாமல், பதற்றமடையாமல், பொறாமை கொள்ளாமல், அவற்றை கடவுளிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். ஆண்டவரை நம்புவோம், நம்மைச் சுற்றியுள்ளோருக்கு நம்பத்தக்கவராக வாழ்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக ஆண்டவர் இயேசுவிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2023, 12:55