தேடுதல்

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு  திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு  

திருவருகைக் காலம் 2ம் ஞாயிறு : 'சமத்துவக் குரல்களாய் ஒலிப்போம்!

சமத்துவமற்ற நிலைக்கு அடிப்படைக் காரணம் மனிதர்தாம் என்பதை உணர்ந்து வேற்றுமைகளை வேரறுத்து சமத்துவத்தை நிலைநாட்டுவோம்.
ஞாயிறு சிந்தனை 03122022

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்    I.     எசா 11: 1-10       II.   உரோ 15: 4-9      III.  மத்  3: 1-12)

கடந்த நவம்பர் மாதம் 27-ஆம் தேதி நமது மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வி.பி.சிங். என்று அழைக்கபடும் விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி இணையத்தில் சிறிய செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. சீமான் வீட்டுப் பிள்ளை... மன்னர் பரம்பரை. ஆனால் இவருடைய பிறப்புக்கும், வாழ்க்கைக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை. பல ஆண்டுகள் முடங்கிக் கிடந்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமலாக்கி, விளிம்பு நிலை மக்களை நிமிரச் செய்தவர். அதற்காகவே தன் பிரதமர் பதவியையும் இழந்தவர். "உடலில் வலிமையிருந்திருந்தால் இந்நேரம் நான் ஒரு மாவோ போராளியாக இருந்திருப்பேன்" என்று துணிந்து சொன்ன இளவரசர். “சொந்த சகோதரனையே கொள்ளையனிடமிருந்து காப்பாற்ற முடியாத நான், உத்திரப்பிரதேச மக்களை எப்படி காப்பாற்றுவேன்” என்று மனம்புழுகி முதல்வர் பதவியையே ராஜினாமா செய்த நேர்மையாளர். ஊழல் புகாரில் சிக்கிய அம்பானி மீதும் அமிதாப் பச்சன் மீதும், நடவடிக்கை எடுத்த துணிச்சல்காரர். அவ்வளவு ஏன், "நாட்டுக்காக மிக முக்கிய பணிகள் செய்த அம்பேத்கருக்குப் பாரத இரத்னா விருது தராதபோது, எம்.ஜி.ஆருக்கு எதுக்கு இத்தனை அவசரமாகப் பாரத இரத்னா விருது தர வேண்டும்?" என்று அன்றைய பலம் பொருந்திய காங்கிரஸ் அரசை விமர்சித்தவர். அத்துடன் தன்னுடைய ஆட்சியில், அம்பேத்கருக்குப் பாரத இரத்னா விருது வழங்கியதுடன், நாடாளுமன்றத்திலும் அம்பேத்கரின் படத்தை கம்பீரமாக இடம்பெறச் செய்தவர். "அடுத்த பிறப்பில் நம்பிக்கை இல்லை, அப்படியிருந்தால் தமிழ்நாட்டில் தமிழனாகப் பிறக்க ஆசை" என்றவர். தந்தை பெரியாரைப் பற்றி பேசும்போதெல்லாம் உணர்வுபூர்வமாகப் பேசுவார் வி.பி.சிங். 'சமூகநீதியின் தலைநகரம் பெரியாரின் தமிழ்நாடு' என்பதை வடமாநிலங்களில் மறக்காமல் பதிவு செய்துகொண்டே இருந்தார்.  இவருக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை வந்தபோது, மாற்று சிறுநீரகம் கொடுப்பதற்குத் திராவிடர் கழக இளைஞர்கள் பலர் முன்வந்தனர். ஆனால், வாழவேண்டிய இளைஞர்களின் சிறுநீரகத்தைப் பெற்று, என் ஆயுளை நீட்டிக்க விருப்பமில்லை என்று நிராகரித்துவிட்டார். ஒரு இராஜ பரம்பரையில் பிறந்திருந்தும், சாதியை ஒழிப்பதிலும், சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் அவர் காட்டிய அக்கறை யாரும் மறக்கமுடியாது. ஒடுக்கப்படாத ஒரு சாதியில் பிறந்து, ஓடுக்கப்பட்டவர்களுக்காகவே இப்படி வாழ்வது என்பது மிகவும் அபூர்வம்..! ஆனால், இட ஒதுக்கீடு என்ற வரையறைக்குள் சுருக்கி, ஒரு சாரார் இவரைப் புறக்கணித்தனர். மதச்சார்பின்மை மட்டுமே வகுப்புவாதத்தை ஒழித்துவிடாது, அத்துடன் சமத்துவத்தைப் பேணும் சமூக நீதியும் இணைந்தாக வேண்டும் என்பதே இவரது ஆழமான நம்பிக்கையாக இருந்தது. அதற்காகவே இறுதிவரை யாருக்காகவும் தன்னை சமரசம் செய்து கொள்ளாமலும், வெறுப்பரசியலை வெறி கொண்டும் வெறுத்தவர் வி.பி.சிங். வெறும் 11 மாதங்களே அவர் இந்திய நாட்டை ஆட்சி செய்தபோதிலும், ஒரு நல்ல தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். இந்தியாவில் நிலவிய பாகுபாடுகளையும் வேறுபாடுகளையும் தவிடுபொடியாக்கியவர். சமமற்றுக்கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்தியவர். இந்தியத் தேசத்தின் அரசியலையே புரட்டிப் போட்ட வி.பி.சிங் செய்த சீர்திருத்தத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறைத்துவிட முடியாது. மறந்துவிடவும் கூடாது.

இன்று நாம் திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்திற்குள் நுழைகின்றோம். மனிதரிடையே நிலவும் பாகுபாடுகளை அகற்றி சமத்துவத்தைப் பேணவேண்டும் என்று இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுகின்றன. முதல் வாசகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதி ஒரு நீதியுள்ள அரசரின் செயல்படுகள் எப்படி இருக்கும் என்பதையும், இரண்டாவது பகுதி உண்மையான சமத்துவம் எது என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றதன. இப்போது முதல் பகுதியை வாசிப்போம். அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக் கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்; பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும் (வசனம் 6-8). இப்பகுதியை நாம் வாசிக்கும்போதே, 'இதெல்லாம் உண்மையிலேயே சாத்தியமா' என்ற கேள்வி நம் உள்ளத்தில் கட்டாயம் எழும். இவையெல்லாம் சமத்துவத்தை அதிகம் வலியுறுத்துவதற்காக சொல்லப்பட்ட உருவகங்கள் அவ்வளவுதான். ஆனாலும் இவற்றில் ஒரு சில நடந்தும் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு மான் குட்டியை கொன்று தின்ன துரத்திச் சென்ற புலியிடமிருந்து இன்னொரு புலி அதனைக் காப்பாற்றியதை காணொளியில் பார்த்திருக்கின்றோம். விலங்குகளிடத்திலேயே கூட இந்தச் சமத்துவம் சாத்தியம் என்றால், கடவுளின் சாயலாகவும் உருவாகவும் படைக்கப்பட்ட மனிதரிடத்தில் இது அதிகம் சாத்தியப்படும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

இன்றும் மானுடம் சந்திக்கும் பாகுபாடுகளும், வேற்றுமைகளும், ஏற்றத்தாழ்வுகளும் எத்தனை எத்தனை? மொழி, இனம், நாடு, கலாச்சாரம், பண்பாடு, சாதி, மதம், நிறம், பாலினம் என அதன் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகின்றது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகம் அமைகின்றன. நாம் காணும் இந்த வேற்றுமைகளில் சாதி, மதம், நிறம் இவை மூன்றும் பெருமளவில் மனிதத்தைச் சிதைத்தழித்து வருகின்றன. ஆனால், அதேவேளையில் இந்த வேற்றுமைகளை வேரறுத்து சமத்துவத்தை நிலைநாட்டிட நல்லுள்ளம் கொண்ட பலர் போராடியது மட்டுமன்றி, தங்கள் வாழ்வையே முழுவதுமாக இநோக்கத்திற்காகக் கையளித்துள்ளனர். நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், ஆபிரகாம் லிங்கன், காந்தியடிகள், அம்பேத்கர், பெரியார், ஸ்டான் சுவாமி போன்றோர் அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.  

பாகுபாடும் பகைமையும் கொண்டிருக்கும் இரண்டு இனத்தவர்கிடையே சமத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில், அவர்களில் நல்மனம் கொண்டோர் இதில் பெரிதும் அக்கறைக் காட்டவேண்டும். எடுத்துக்காட்டாக கருப்பின மக்களின் உரிமைகளுக்காகவும் இன சமத்துவத்துக்காவும் போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் 1968-ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நிகழ்ந்த போராட்டத்தைக் காட்டிலும், தற்பொழுது நடைபெற்றுவரும் அனைத்துப் போராட்டங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்குக் காரணம், இப்போராட்டம் நடுத்தர வர்க்க வெள்ளையினத்தவரையும் கருப்பின மக்களுக்கு ஆதரவாகத் தெருவிற்குக் கொண்டு வந்திருப்பதுதான். அதாவது, ஒடுக்கப்படுவபவர்களுக்கு ஆதரவாக ஒடுக்கும் இனத்தைச் சார்ந்தவர்களே போராடினால்தான் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும். கடந்த  2020-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதியன்று  அன்று, அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில் 44 வயதான வெள்ளையின காவல்துறை அதிகாரியான டெரெக் சௌவின் என்பவரால் 46 வயதான ஜார்ஜ் ஃபிலாய்ட் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூரச் செயலுக்கு எதிராகக் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல வெள்ளையினத்தைச் சேர்ந்த பலரும் குரல் கொடுத்தனர் என்பதை நாம் அறிவோம். இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்படும் தலித் மக்களுக்கு ஆதரவாக, தலித் அல்லாதோரும் சமத்துவத்துக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பதையும் நாம் காண முடிகிறது.

மெசியாவாகிய இயேசுவின் வாழ்வும் அப்படிதான் அமைகிறது. யூத மதத்திற்கு வெளியே காணப்பட்ட அநீதிகளைவிட, அதன் உள்ளே நிலவிய அநீதிகள்தாம் மிகவும் அதிகம். ஒடுக்குமுறைகளும், அடக்குமுறைகளும், பொருளாதாரச் சுரண்டலும், சமத்துவமற்ற நிலையும் யூத மதத்தில் புரையோடிப்போயிருந்ததை இயேசு நன்றாகவே அறிந்திருந்தார். ஒருபுறம் உரோமையரின் ஆட்சியை எதிர்த்த நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த யூதர்கள், மறுபுறம் தங்களைக் காட்டிலும் கீழ்நிலையிலிருந்த ஏழைகளையும், எளியோரையும், நோயாளர்களையும், பெண்களையும் வதைத்தொழித்தார்கள். மேலும் உரோமையர்கள் ஆதிக்கத்தின்கீழ் காணப்பட்ட துன்ப துயரங்களையும் காட்டிலும் மறைநூல் அறிஞர், பரிசேயர், சதுசேயர், மூப்பர்கள், மத அடிப்படைவாதிகள் போன்ற யூதர்களின் கொடூரச் செயல்கள் காரணமாக ஏழை எளிய மக்கள் அதிகம் துன்புற்றனர். ஆக, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த யூதர்கள் உரோமையரை எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் செயல்கள் அனைத்தும் வெறும் வெளிவேடம் என்பதை இயேசு தெளிவாக கண்டுணர்ந்தார். அதனால்தான் வேறுபாடுகளும், மாறுபாடுகளும், அநீதிகளும் யூதச் சமூகத்தில் ஏற்படுத்தியிருந்த சமத்துவமற்ற நிலையை களைந்து எல்லோரும் ஒன்றிணைந்து உடன்பிறந்த உறவில் வாழும் சமத்துவமான நிலையை ஏற்படுத்த விரும்பினார் இயேசு. இதன் காரணமாகவே, இன்றைய முதல் வாசகத்தின் முதல் பகுதி உண்மையான மெசியாவின் பண்புநலன்களை நமக்கு விவரிக்கின்றது

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு — இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை;  உண்மை அவருக்கு இடைக்கச்சை (வசனம் 2-5)

இன்றைய இரண்டாம் வாசகத்தில், "கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறுகிறார் புனித பவுலடியார். எவ்விதத்திலும் தகுதி இல்லாத பாவிகளாகிய நம்மை இயேசு ஏற்றுக்கொண்டார் என்ற சிந்தனை நம் உள்ளத்தில் நிரந்தரமாக இடம்பெறுமேயானால் நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் நாம் சமத்துவத்தை ஏற்படுத்த முயல்வோம் என்பதையும் இக்கணம் நாம் உணர்வோம். இதனைத்தான் எசாயா புத்தகத்தில் 'நம்பிக்கை தரும் நல்வாக்கு' என்ற தலைப்பில் அமைந்த வார்த்தைகள் புனித திருமுழுக்கு யோவானைக் குறித்து கூறப்பட்டதாக மத்தேயு நற்செய்தியாளர் கூறுகின்றார். குரலொலி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர் (எசா 40:3,4). இதன் அடிப்படையில்தான் 1963-ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள லிங்கன் சதுக்கத்தில் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் ‘I have a dream’ அதாவது, ‘எனக்கொரு கனவுண்டு’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய உரையில், “இன்று நான் ஒரு கனவு காண்கிறேன்... ஒருநாள் இந்தச் சமவெளி உயர்த்தப்படும்; மலைகளும் குன்றுகளும் சமப்படுத்தப்படும்; கடினமான இடங்கள் சமமாக்கப்படும்; குறுகலான பாதைகள் நேராக்கப்படும்; கடவுளின் செல்வாக்கு வெளிப்படுத்தப்படும்; எல்லா மனித உடல்களும் ஒன்றாகவும் சமமாகவும் பார்க்கப்படும். இது என் நம்பிக்கை!" என்று சமத்துவத்துக்கான குரலாக ஒலித்தார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்  (குறள்-972) என்ற திருக்குறளில், எல்லா மக்களும் பிறப்பால் சமமே. அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும் என்கின்றார் திருவள்ளுவர். நமது அன்றாட வாழ்வில் பேருந்து பயணம், உணவகம், திரையரங்கம், பட்டிமன்ற அரங்கம், பொழுதுபோக்கு இடங்கள் என இந்த இடங்களில் எல்லாம் நாம் எவ்வித வேறுபாடும் பார்ப்பதில்லை. ஆனால், நமது ஊர்களிலும், நாம் பணியாற்றும் இடங்களிலும் பல்வேறு வேறுபாடுகளால் சமத்துவமற்ற நிலையை உருவாக்கி வருகின்றோம்.  

யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா (192) என்ற புறநானூற்றுப் பாடலில்  உலகத்திலுள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதரர் சகோதரிகளே.! அதே போன்று, உலகிலுள்ள அனைத்து ஊர்களும் நமக்குச் சொந்தமானதே என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவ வாழ்வுப் பற்றி தெளிவாக உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார் கணியன் பூங்குன்றனார். மேலும் நன்மை தீமை என்பது, அடுத்தவரால் வருவது அல்ல. நாம் செய்யும் செயலே நம் இன்பத்திற்கும் துன்பத்தற்கும் காரணமாக அமைகின்றது என்கின்றார். ஆக, உலகிலும், உள்ளத்திலும், நம்மைச் சுற்றிலும், ஊற்றெடுக்கும் சமத்துவமற்ற நிலைக்கு அடிப்படைக் காரணம் மனிதர்கள்தாம் என்பதை உணர்தவர்களாய், வேற்றுமைகளை வேரறுத்து சமத்துவத்தை நிலைநாட்டுவோம். இதுதான் நாம் கொண்டாடவிருக்கும் கிறிஸ்து பிறப்பு விழாவுக்குக்கான உண்மையான தயாரிப்பாக இருக்க முடியும். இவ்வருளுக்காக இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2022, 13:11