தேடுதல்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது போராடும் மக்கள் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது போராடும் மக்கள்  

கிறிஸ்மஸ் தயாரிப்புக்களில் துன்புறுவோரை நினைக்க அழைப்பு

திருவருகைக் காலம் தொடங்கியிருக்கும் இவ்வேளையில் பொருளாதாரத்தில் அதிகமாகப் பின்தங்கிய மக்களை நினைத்துப் பார்க்கவேண்டும் - அருள்பணி பேசில் ரோஹன்

மேரி தெரேசா: வத்திக்கான்

கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு ஆடம்பரப் பொருள்கள் வாங்குவதற்குச் செலவழிக்கும் பணத்தைச் சேமித்து, கடும் வறுமையில் வாடும் குடும்பங்களோடு அதைப் பகிர்ந்து விழாவைக் கொண்டாடுமாறு இலங்கை கத்தோலிக்கத் திருஅவை, நம்பிக்கையாளர் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.

திருவருகைக் காலம் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், இலங்கையில் வாழ்கின்ற கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழ்கின்ற அந்நாட்டினருக்கும் இவ்வாறு அழைப்புவிடுப்பதாக, பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் தேசிய இயக்குனர் அருள்பணி பேசில் ரோஹன் அவர்கள் கூறியுள்ளார்.

பொதுவாக, திருவருகைக் காலத்தில் பலர், தேவையற்ற அலங்காரங்களால் வீடுகளை அலங்கரித்து, கிறிஸ்மஸ்க்கு வர்த்தகரீதியான மதிப்பைக் கொடுத்து, அதன் உண்மையான அர்த்தத்திலிருந்து திசை மாறுகின்றனர் என்று, நவம்பர் 27, இஞ்ஞாயிறு திருப்பலியில் கூறியுள்ளார், அருள்பணி ரோஹன்.

நம் ஆலயங்களில்கூட சிலநேரங்களில் அலங்காரங்களுக்குத் தேவையற்ற மின்விளக்குகளை அதிகமாகப் பயன்படுத்தி, மக்களைப் போன்று அதே வழி பயன்படுத்தப்படுகிறது என்றுரைத்த அருள்பணி ரோஹன் அவர்கள், இத்தகைய தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்க்குமாறு கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய சூழலைச் சுட்டிக்காட்டி வெளிநாடு வாழ் அந்நாட்டினருக்குச் செய்தி அனுப்பியுள்ள அருள்பணி ரோஹன் அவர்கள், தற்போது இலங்கைவாழ் மக்கள் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர் என்றும், பொருள்களை வீணாக்காமல் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.(AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2022, 14:55