தேடுதல்

திருத்தந்தை 4ஆம் பவுல் திருத்தந்தை 4ஆம் பவுல் 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தையர் 4ஆம் பவுல், 4ஆம் பயஸ்

திருத்தந்தை 4ம் பயஸ் 1565ஆம் ஆண்டு இறுதியில் நச்சுக் காய்ச்சலால் உயிரிழந்தபோது இவர் தலைமாட்டில் புனிதர்கள் பிலிப் நேரியும் சார்ல்ஸ் பொரோமியோவும் அமர்ந்திருந்தனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை இரண்டாம் மர்செல்லோ 1555ம் ஆண்டு மே 6ஆம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து தலைமைப் பொறுப்பேற்றவர் திருத்தந்தை 4ஆம் பவுல். இவரின் இயற்பெயர் Giovanni Pietro Carafa.  ஆங்கிலத்தில்  சொல்ல வேண்டுமானால் John Peter Carafa. இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரைச் சேர்ந்த பிரபுத்துவக் குடும்பத்தில் 1476 ஜூன் 28ல் பிறந்த 4ஆம் பவுல், இவரின் நெருங்கிய உறவினரான கர்தினால் Oliviero Caraffaவின் உதவியுடன் 1494ஆம் ஆண்டு அதாவது, தனது 18ம் வயதிலேயே திருப்பீடத்துக்குள் நுழைந்து பதவி பெற்றார். திருத்தந்தை பத்தாம் லியோ, இளைஞர் 4ஆம் பவுலை இங்கிலாந்திற்கு தன் தூதராக அனுப்பினார். பின்னர் சில ஆண்டுகள் இஸ்பெயினுக்கான திருப்பீடத் தூதராகவும் நியமித்தார். ஆனால் இளம் வயதிலிருந்தே, அப்பழுக்கற்ற ஒரு வாழ்வை மேற்கொண்ட 4ஆம் பவுலின் எண்ணமெல்லாம் துறவு வாழ்வைச் சுற்றியே இருந்தது. இதனால் திருத்தந்தை 7ஆம் கிளமென்டின் சிறப்பு அனுமதியுடன், திருப்பீடப் பதவிகளைத் துறந்து, துறவு சபையில் இணைந்தார். 1524ம் ஆண்டு துறவு சபையில் இணைந்து எளிய வாழ்வை மேற்கொண்ட இவர், 1536ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பின்னர் தன் சொந்த இடமான நேப்பிள்ஸின் பேராயராகவும் நியமிக்கப்பட்டார். திருஅவை சட்டங்களிலும் ஆன்மிக விடயங்களிலும் அதிக கெடுபிடிகளை இவர் காண்பித்ததால் மன்னருக்கு இவரைப் பிடிக்காமல் போனது. இவர் திருத்தந்தையாவதற்குப் பெருந்தடையாக இருந்தார் மன்னர் சார்ல்ஸ். மன்னரின் எதிர்ப்பையும் தாண்டி, கர்தினால்கள் அவை 1555ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி இவரையே திருத்தந்தையாத்க தேர்ந்தெடுத்தது. 

   திருத்தந்தை 4ஆம் பவுல் மிகுந்த தேசப்பற்று உடையவராக இருந்த அதேவேளை, ஆன்மிக விடயங்களிலும் அதிக அக்கறை உடையவராக இருந்தார். எவ்வளவு உயரிய மனிதராக இருந்தபோதிலும் அவரிடமும் ஒரு குறை இருந்தது. அதாவது, தன் உறவினர்களுக்கு அதிக சலுகை காட்டினார். திருஅவைச் சொத்துக்களை அவர்கள் அனுபவிக்க அனுமதித்தார். அதைவிடவும் மேலாக, தன் நெருங்கிய உறவினர் Carlo Caraffa என்பவரை, எவ்வித தகுதியுமற்றவராக இருந்தும், கர்தினாலாக உயர்த்தினார். ஒரு காலத்தில் அவ்வுறவினர்களின் தீயவழிகளைக் கண்டு கோபமுற்று, அவர்களை திருப்பீடத்திலிருந்து முற்றிலுமாக விரட்டியடித்தார். இங்கிலாந்திலும் இவர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் தோல்வியையே சந்தித்தன. 79 வயதில் திருத்தந்தையான இவர், தன் முதிர்வயதிலும் திருஅவை சீர்திருத்தங்களில் அதிகக் கவனம் செலுத்தினார். இவருடைய பாப்பிறை பதவிக்காலம், மக்களுக்கு மிகவும் ஏமாற்றம் நிறைந்ததாக இருந்தது எனக் கூறுகின்றனர். ஏனெனில், துவக்க காலத்தில் மக்களின் பேராதரவு இவருக்கு இருந்தது. மிகவும் பக்திமானாகவும், திருஅவை சீர்திருத்தங்களில் ஆர்வமுடையவராகவும் இருந்தாலும், உறவினர்களுக்கான சலுகைகள், அரசியல் தோல்விகள் போன்றவைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தார். 1559ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ல், தன் 83ஆம் வயதில் காலமானார் திருத்தந்தை 4ஆம் பவுல். திருத்தந்தை 4ஆம் பவுலின் 4 ஆண்டுக்கால தலைமைப் பொறுப்பிற்குப்பின் பொறுப்பேற்றுக் கொண்டவர் திருத்தந்தை 4ஆம் பயஸ். இவர் இத்தாலியின் மிலான் நகரில் வாழ்ந்த மெடிச்சி உயர் குடும்பத்தில் 1499ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி பிறந்தார்.

திருத்தந்தை 4ஆம் பயஸ்

 மிலான் நகரின் Bernardino Medici என்பவருக்கு இருமகன்கள். மூத்தவர் பெயர் Giangiacomo. இளைய மகன் பெயர் Giovanni Angelo. இந்த இளைய மகன்தான் பின்னாளில் திருத்தந்தை 4ஆம் பயஸானார். மூத்த மகன் பேரரசர் 5ஆம் சார்லஸின் படையில் தளபதியாக இருந்தார். இளையவரோ படிப்பில் அதிக ஆர்வம் கொண்டு புத்தகப் புழுவாக இருந்தார். மெய்யியல், மருத்துவம், மற்றும் சட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு பயின்ற இவர், சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். சட்டத்துறையில் பணியாற்றியுள்ள இவர், தன் 28ஆம் வயதில் திருஅவைப் பணியில் இணைய விரும்பி, உரோம் நகர் சென்றார். திருத்தந்தை 7ஆம் கிளமென்டினால் நீதிமன்ற தலைமை எழுத்தராக நியமிக்கப்பட்ட இவர், திருத்தந்தை மூன்றாம் பவுலின் நம்பிக்கையைப் பெற்று, திருப்பீட சொத்துக்களின் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். திருத்தந்தை மூன்றாம் பவுலின் உறவினரை(திருத்தந்தையின் மகனின் மனைவியின் தங்கையை) Giovanni Angeloவின்  அண்ணன் Giangiacomo திருமணம் புரிந்தார். அதேகாலக்கட்டத்தில் Giovanni Angelo கர்தினாலாக உயர்த்தப்பட்டார். திருத்தந்தை மூன்றாம் ஜூலியஸ் இவரை Romagna நகருக்கான தன் பிரதிநிதியாகவும், பாப்பிறைப் படைகளுக்கான தலைவராகவும் நியமித்தார். ஆனால், திருத்தந்தை 4ம் பவுல் இவரை சரியான முறையில் நடத்தவில்லை. கர்தினால் ஜொவான்னி ஆஞ்சலோவை எதிரியாகவே பாவித்தார். இது கர்தினாலுக்கு நல்லபெயரையே சம்பாதித்துக் கோடுத்தது. ஏனெனில், கடைசிக் காலத்தில் திருத்தந்தை 4ம் பவுலை பிடிக்காமல் போன கர்தினால்களும், ஏனைய திருஅவை அதிகாரிகளும் மக்களும் கர்தினால் ஜொவான்னி ஆஞ்சலோவே அடுத்த திருத்தந்தையாக வரவேண்டுமென விரும்பினர். இருப்பினும் கர்தினால்கள் அவையில் பிரெஞ்ச், ஸ்பெயின், ஆஸ்திரியன் பிரிவகள் தனித்து நின்று தங்கள் ஆட்களையே திருத்தந்தையாகத் தேர்வுசெய்ய விரும்பியதால், திருத்தந்தை தேர்வு என்பது 3 மாதங்கள் இழுத்தடித்தது. இறுதியில் கர்தினால் Farneseயின் முயற்சியுடன், கர்தினால் ஜொவான்னி ஆஞ்சலோவைத் தேர்வு செய்தனர். அவரும் 4ம் பயஸ் என்ற பெயரை எடுத்துக்கொண்டு 1560ம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி திருத்தந்தையாக முடிசூட்டப்பட்டார். இதற்கு முந்தைய திருத்தந்தை 4ம் பவுலின் காலத்தில் தவறு செய்தவர்கள் பலரை இவர் மன்னித்தாலும், பெருங்குற்றங்களில் ஈடுபட்டவர்களை மன்னிக்க மறுத்தார். அவர்களின் குற்றங்கள் குறித்து விசாரணை அவை ஒன்று உருவாக்கப்பட்டு, இறுதியில் திருத்தந்தை 4ம் பவுலின் உறவினர் கர்தினால் Carlo Caraffaவுக்கும் அவரின் சகோதரருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. 

   திருத்தந்தை 4ம் பயஸும் தன் சகோதரி மகனை கர்தினால் ஆக்கினார். அவர் தன் உறவினர் என்பதற்காக அல்ல, மாறாக அவரின் புனித வாழ்வுக்காக. ஆம், திருஅவையில் இன்றும் சிறப்பிக்கப்படும் புனித சார்ல்ஸ் பொரோமியோ, திருத்தந்தை 4ம் பயஸின் சகோதரி மகனே. திரிதெந்து பொதுச்சங்கத்தைத் தொடர்ந்தது மட்டுமல்ல, அதனை நிறைவுக்கு கொண்டுவந்தவரும் இத்திருத்தந்தைதான். பல மொழிகளில் புத்தகங்களை வெளியிடவேண்டும் என்ற நோக்கத்துடன் திருப்பீட அச்சு அலுவலகத்தை உருவாக்கியவரும் திருத்தந்தை 4ம் பயஸ்தான். இவர் 1565ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி நச்சுக் காய்ச்சலால் உயிரிழந்தபோது இவர் தலைமாட்டில் புனிதர்கள் பிலிப் நேரியும் சார்ல்ஸ் பொரோமியோவும் அமர்ந்திருந்தனர். 

    பல திறமைவாய்ந்த கர்தினல்களை திருஅவையில் நியமித்தது, தன் உறவினர்களுக்கு சிறப்புச்சலுகை காட்டாதது, உரோம் நகரில் நல்ல பல அழகு நிறைந்த கட்டடங்களை எழுப்பியது, திருஅவை சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தி திரிதெந்து பொதுச்சங்கத்தில் ஆர்வம் காட்டியது ஆகியவைகளுக்காக திருத்தந்தை 4ம் பயஸ் வரலாற்றில் புகழப்படுகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2022, 14:57