தேடுதல்

திருத்தந்தை இரண்டாம் மர்ச்செல்லோ திருத்தந்தை இரண்டாம் மர்ச்செல்லோ 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 2ஆம் மர்ச்செல்லோ (MARCELLO)

கர்தினால் மர்ச்செல்லோவின் காலத்தில் வத்திக்கான் நூலகத்தில் மேலும் 500 இலத்தீன், கிரேக்க, மற்றும் எபிரேய பிரதிகள் இணைக்கப்பட்டன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை 3ம் ஜூலியஸ் க்குப்பின் பதவிக்கு வந்தார் இரண்டாம் மர்ச்செல்லோ. இவரின் இயற்பெயரும் இதுதான். ஆனால் அதனுடன் இணைந்து வேறு இருபெயர்களும் இருந்தன. MARCELLO CERVINI DEGLI SPANNOCHI என்ற இவரின் நீண்ட பெயரை தற்காலிகமாக மறந்துவிட்டு மர்ச்செல்லோ என்றே வைத்துக் கொள்வோம். இத்தாலியின் Montepulciano எனுமிடத்தில் 1501ஆம் ஆண்டு மேமாதம் 6ந்தேதி பிறந்தார் மர்ச்செல்லோ. இவர் திருத்தந்தை 3ம் பவுலின் கீழ் பாப்பிறைச் செயலராக  நியமிக்கப்பட்டார். திருத்தந்தை 3ஆம் பவுல் தன் நெருங்கிய உறவினரான அலெசாந்த்ரோ பர்னேசே என்பவரை கர்தினாலாக உயர்த்தியபோது, முன் அனுபவமற்ற அந்த கர்தினாலின் அந்தரங்க ஆலொசகரானார் மர்ச்செல்லோ. இதனால் பாப்பிறை இல்லத்தில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.  1539ஆம் ஆண்டில், அதாவது 38ஆம் வயதில் இவரும் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 1545ஆம் ஆண்டு திரிதெந்து பொதுச்சங்கத்தின் மூன்று தலைவர்களுள் இவரும் ஒருவராக நியமிக்கப்பட்டார். 1548ஆம் ஆண்டு திருப்பீட நூலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். கர்தினால் மர்ச்செல்லோவின் காலத்தில் வத்திக்கான் நூலகத்தில் மேலும் 500 இலத்தீன், கிரேக்க, மற்றும் எபிரேய பிரதிகள் இணைக்கப்பட்டன. 1555ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி திருத்தந்தை 3ஆம் ஜூலியஸ் இறந்தவுடன் கூடிய கர்தினால்கள், நான்கே நாட்களில் கர்தினால் மர்ச்செல்லோவை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர்.

   ஏற்கனவே மூன்று மறைமாவட்டங்களை இவர் நிர்வகித்து வந்துள்ளபோதிலும், இவர் ஒருபோதும் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. 1555ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு, அதே நாளில் திருத்தந்தையாகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தலைமைப் பொறுப்பெற்ற காலம் தவக்காலமாக இருந்ததால், பெரிய அளவில் கொண்டாட்டங்கள் எதுவும் இடம் பெறவில்லை. இவர் தன் இயற்பெயரான மர்ச்செல்லோ என்ற பெயரையே எடுத்துக் கொண்டார். இவர் கர்தினாலாக இருந்தபோதே திருஅவைக்குள் பல சீர்திருத்தங்களைக் கொணர விரும்பியவர். ஆகவே திருத்தந்தையானவுடன் அப்பணியைத் துவக்கினார். ஆனால், திருத்தந்தையாக சில நாட்களே இவரால் பணியாற்ற முடிந்தது. ஆம், 1555ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி காலமானார் திருத்தந்தை இரண்டாம் மர்ச்செல்லோ. ஏப்ரல் 10ந்தேதி பதவியேற்பு, மே 6ந்தேதி மரணம். ஒரு மாதம் கூட முழுமையாக பதவியில் அமராத இத்திருத்தந்தைக்குப்பின் பொறுப்பேற்றார் திருத்தந்தை 4ஆம் பவுல்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2022, 13:21