திருத்தந்தை 3ஆம் ஜூலியஸ் திருத்தந்தை 3ஆம் ஜூலியஸ் 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 3ஆம் ஜூலியஸ்

புனித இஞ்ஞாசியார் கேட்டுக்கொண்டதற்கிணங்க “Collegium Germanicum” என்ற பாப்பிறை கல்லூரிக்கு அங்கீகாரமும் நிதியுதவியும் செய்தவர் திருத்தந்தை 3ஆம் ஜூலியஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை 3ம் பவுலின் 15 ஆண்டுகால பாப்பிறை பணிக்குப்பின் திருஅவையின் தலைமைப் பொறுப்பேற்றவர் Giammaria Ciocchi Del monte என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை 3ம் ஜூலியஸ். இவர் 1487ஆம் ஆண்டு உரோம் நகரில் பிறந்தார். உரோமையின் புகழ்பெற்ற சட்ட அறிஞரின் மகனாகப் பிறந்த இவரும் சட்டக்கல்வியை இத்தாலியின் பெரூஜியா மற்றும் சியென்னாவிலும், இறையியல் கல்வியை தொமினிக்கன் துறவி Ambrosius Catharinus கீழும் பயின்றார். 1512ஆம் ஆண்டில், அதாவது 25ஆம் வயதிலேயே இவரின் நெருங்கிய உறவினர் Antonio del Monteவுக்குப்பின் Siponto நகரின் பேராயராக நியமிக்கப்பட்டார். 1520ஆம் ஆண்டில் பவியா நகர் ஆயராக பொறுப்பேற்ற பின்னரும், Siponto உயர்மறைமாவட்ட நிர்வாகத்தை விட்டுக்கொடுக்கவில்லை. திருத்தந்தை ஏழாம் கிளமெண்டால் இருமுறை உரோம் நகர உயர்அதிகாரியாக நியமிக்கப்பாட்டார். 1527ஆம் ஆண்டில் ஐந்தாம் சார்லஸின் புரட்சிப் படைகள், உரோம் நகரைக் கைப்பற்றி சூறையாடியபோது, பின்னாள் திருத்தந்தையான Giammaria Ciocchi Del monte கைது செய்யப்பட்டார். கொல்லப்படுவதற்கு கொண்டு செல்லப்படும் வழியில் கர்தினால் Pompio Colonna என்பவரால் இரகசியமாக விடுதலை செய்யப்பட்டார். 1536ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி இவர் திருத்தந்தை 3ம் பவுலால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

1542ஆம் ஆண்டிலேயே திரிதெந்தின் பொதுச்சங்கத்திற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு இவரிடம்தான் பொறுப்பை ஒப்படைத்தார் திருத்தந்தை 3ம் பவுல். அப்பொதுச்சங்கத்தின் முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவரும் இவர்தான். 1549ஆம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி திருத்தந்தை 3ஆம் பவுல் உயிரிழந்தவுடன் உரோம் நகரில் கூடிய 48 கர்தினால்களும் நவம்பர் 29ம் தேதி புதுத்திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் அறைக்குள் நுழைந்தனர். 10 வாரங்கள் தொடர்ந்து கர்தினால்கள்கூடி விவாதித்ததில் சரியான முடிவு கிட்டவில்லை. ஏனெனில் கர்தினால்கள் அவை மூன்று பிரிவுகளாக பிரிந்து நின்றது. ஒரு பிரிவினர் பேரரசருக்குச் சார்பாகவும், இன்னொரு பிரிவினர் பிரான்ஸ்க்கு சார்பாகவும், மூன்றாவது பிரிவினர் உரோம் நகரின் புகழ்வாய்ந்த Farnese குடும்பத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டனர். பேரரசருக்கு ஆதரவான கர்தினால்களும் Farnese குடும்பமும் இணைந்துகொண்டு, Reginald Pole, Juan de Toledo என்ற இருவரின் பெயர்களை முன்மொழிந்தனர். ப்ரெஞ்ச் ஆதரவு கர்தினால்களோ இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். கடைசியில் பிரெஞ்ச் ஆதரவு கர்தினால்களுடன் Farnese குடும்ப ஆதரவு கர்தினால்கள் இணைந்துகொண்டு, பேரரசரின் பலத்த எதிர்ப்பு இருந்தபோதிலும், எல்லாருக்கும் பொதுவான ஒரு நபராக கர்தினால் Del Monte, அதாவது திருத்தந்தை 3ம் ஜூலியஸ் அவர்களை 1550ஆம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி தேர்வு செய்தனர்.

திருத்தந்தை 3ஆம் ஜூலியஸ், தன் பாப்பிறை பதவியின் துவக்க காலத்தில் அரசியல் விவகாரங்களில் தலையிட்டார். ஆனால் மன்னர் 5ஆம் சார்லஸுடன் இணைந்து பணியாற்றியதில் சில தோல்விகளைச் சந்தித்ததால், அரசியலில் இருந்தே ஒதுங்கிக் கொண்டார். Porta del Popolo என்னுமிடத்தில் தான் கட்டிய சொகுசு மாளிகையில் குடியேறி, அங்கேயே ஆடம்பர வாழ்வை மேற்கொண்டார். அவ்வப்போது திருஅவை சீர்திருத்தங்களிலும் ஆர்வம் காட்டி, அதற்கென கர்தினால்கள் அவைகளையும் உருவாக்கினார். இத்திருத்தந்தை 3ம் ஜூலியஸ் இயேசு சபையினரின் துவக்ககால வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளார். புனித இஞ்ஞாசியார் கேட்டுக்கொண்டதற்கிணங்க “Collegium Germanicum” என்ற பாப்பிறை கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கியதோடு, ஆண்டுதோறும் அக்கல்லூரிக்கு நிதியுதவி வழங்கப்படவும் ஏற்பாடு செய்தார் இந்த பாப்பிறை. 1552ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி இக்கல்லூரிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

திருத்தந்தை 3ஆம் ஜூலியசின் காலத்தில்தான் அரசி மேரியால் இங்கிலாந்தில் கத்தோலிக்க மதம் மீண்டும் புத்துயிர் பெற்றது. 1553ஆம் ஆண்டில் மன்னர் 6ஆம் எட்வர்ட்டுக்குப்பின் இங்கிலாந்தில் அரசி மேரி பதவியேற்றபின் கர்தினால் Reginald Poleஐ இங்கிலாந்திற்கு அனுப்பினார் இத்திருத்தந்தை. 1555ஆம் ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்து பாராளுமன்றக் குழு ஒன்று, திருத்தந்தைக்கு இங்கிலாந்து முற்றிலும் கீழ்ப்படிவதாக அறிவிக்க புறப்பட்டு வந்தது. ஆனால் அக்குழு உரோம் நகர் வந்தடையும் முன்னரே திருத்தந்தை காலமானார். திருத்தந்தை 3ம் ஜூலியஸின் இறுதி மூன்றாண்டு பதவிக் காலத்தில் மூட்டுவாத நோயால் மிகவும் துன்புற்றார். இவர் தன் திருத்தந்தை பொறுப்பை தவறாகப் பயன்படுத்தி உறவினர்களுக்கு சலுகை காட்டினார் என்ற பரவலான குற்றச்சாட்டும் இருந்தது. தன் சகோதரனால் தத்து மகனாக வளர்க்கப்பட்ட Innocenzo del Monte என்ற 17 வயது இளைஞனுக்கு ஆயர் பட்டம் வழங்கியதும் இதில் ஒன்று. திருத்தந்தை 3ம் ஜூலியஸ் 1555ஆம் ஆண்டு மார்ச் 23ம் தேதி உரோம் நகரில் காலமானார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2022, 13:56