தேடுதல்

பிலிப்பீன்ஸ் நாட்டுப் பெண்கள் பிலிப்பீன்ஸ் நாட்டுப் பெண்கள்  

பிலிப்பீன்ஸ் சட்டப்பேரவையில் பெண்களை ஆதரிக்கும் புதிய சட்டம்

பிலிப்பீன்ஸ் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உடனடி தண்டனையைப் பெற்றுத் தருகிறது : Lina Jeresano

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வரவும், பணியிடத்தில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தவும் பிலிப்பீன்ஸ் சட்டப்பேரவை புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

பேரவை விதி எண். 4470 என்பது, பெண்கள் பணியாற்றும் இடங்களில் நிலவும் பாகுபாடுகளுக்கு எதிரான மசோதா என்றும், இது நவம்பர் 29, இச்செவ்வாயன்று, சட்டப்பேரவையின் 248 உறுப்பினர்களின் வாக்குகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பழைய சட்டத்தின்படி பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இப்புதியச் சட்டமானது குற்றவாளிகளுக்குத் தண்டனையை உடனடியாக உறுதிசெய்கிறது என்று Gabriela என்ற மகளிர் அமைப்பின் உறுப்பினரும் வழக்கறிஞருமான Lina Jeresano,  யூக்கா செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

மேலும் இந்த மசோதாவின் கீழ், எந்தவொரு முதலாளியும் சம மதிப்புள்ள பணிக்காக ஒரு ஆண் ஊழியருடன் ஒப்பிடும்போது ஒரு பெண் ஊழியருக்கு  ஊதியம், சம்பளம் மற்றும் பிற வகையான சலுகைகள் உட்பட குறைவான இழப்பீடு வழங்குவது சட்டவிரோதமானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் Jeresano.

ஒரு பெண் பணியாளரை விட ஆண் பணியாளருக்குப் பணி நியமனம், பதவி உயர்வு, வேலை வாய்ப்புகள், பயிற்சி வாய்ப்புகள், படிப்பு மற்றும் உதவித்தொகை மானியங்கள் ஆகியவை அவர்களின் பாலினத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தாலும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார் Jeresano.

பிலிப்பீன்ஸ் நாட்டின் பல்வேறு பெருநிறுவனங்களின் பதவிகளில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும், பல்வேறு நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளாகப் பெண்கள் பணியாற்றுகின்றனர்  என்றும் இந்தப் புதிய மசோதா குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார் மணிலாவின் தொழிலதிபர் Lorenz Francia.

ஆண் பெண் ஆகிய இருபாலினத்தவரும் 60 வயதில் ஓய்வு பெறும்போது, ​​பிலிப்பீன்ஸ் பெண்களில், 79 விழுக்காட்டினர் மட்டுமே ஆண்கள் கொண்டிருக்கும் செல்வதைப் பெறும் வாய்ப்புப் பெறுகின்றனர் என்று அந்நாட்டில் வெளியான ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2022, 14:47