மங்கோலியாவில் டிசம்பர் 8லிருந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
1,400 கத்தோலிக்கரையே கொண்டிருக்கும் மங்கோலியா நாட்டில், குப்பைகளுக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்ட அமல அன்னை மரியா திருவுருவத்தின் முன்பாக இம்மாதம் 8ம் தேதி அனைவரும்கூடி, மங்கோலியாவை அவ்வன்னையிடம் அர்ப்பணித்து அன்றிலிருந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைத் தொடங்கினோம் என்று அந்நாட்டு கர்தினால் Giorgio Marengo அவர்கள் ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்.
இத்தாலிய கொன்சலாத்தா மறைப்பணியாளர் சபையைச் சார்ந்தவரும், மங்கோலியாவின் Ulan Bator திருத்தூது நிர்வாகியுமான 48 வயது நிரம்பிய கர்தினால் Marengo அவர்கள், முப்பது ஆண்டுகளுக்குமுன்புதான் மங்கோலியாவில் திருஅவை உருவானது என்பதையும் குறிப்பிட்டார்.
மைனஸ் 20 செல்சியுஸ் டிகிரி குளிர் காலநிலையைக் கொண்டிருக்கும் Ulan Bator நகரிலிருந்து ஆசியச் செய்தியிடம், அந்நாட்டில் இடம்பெறும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் பற்றி பேசிய கர்தினால் Marengo அவர்கள், வட மங்கோலியாவில் பத்து ஆண்டுகளுக்குமுன் குப்பைகளுக்கு மத்தியில் இந்த அமல அன்னை மரியா திருவுருவத்தைக் கண்டுபிடித்தோம் என்று தெரிவித்தார்.
அமல அன்னை திருவுருவம்
11 பிள்ளைகளுக்குத் தாயான கிறிஸ்தவரல்லாத பெண் ஒருவர், லாரியிலிருந்து கொட்டப்பட்ட குப்பையில் துணியால் சுத்தப்பட்ட ஓர் உருவத்தைக் கண்டெடுத்து அதைப் பிரித்துப் பார்க்கையில் மரத்தாலான 62 செ.மீ. உயரமுடைய இவ்வன்னை மரியா உருவத்தைப் பார்த்தார் என்றும், அது பற்றி எதுவும் அறியாதவராக அதனை தன் வீட்டில் வைத்திருந்தார் என்றும் கர்தினால் கூறினார்.
புனித அன்னை தெரேசா சபையினர் அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றபோது அவ்வுருவத்தைப் பார்த்து எடுத்துவந்தனர் என்று கூறிய கர்தினால், அதனை Ulan Bator பேராலயத்தில் வைத்தபின் அனைத்து மக்களும் அவ்வன்னையிடம் செபித்து வருகின்றனர் என்று எடுத்துரைத்தார். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்