தேடுதல்

ஜப்பானில் இராணுவத்தைப் பலப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு ஜப்பானில் இராணுவத்தைப் பலப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு 

ஜப்பானில் இராணுவத்தைப் பலப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஜப்பான் பிரதமர் Kishida அவர்கள், நாட்டின் பாதுகாப்பு யுக்திகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதற்காக 2027ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக 2% செலவழிக்கத் திட்டமிட்டருப்பதாகக் கூறப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜப்பானில் இராணுவத்தைப் பலப்படுத்துவது, பாதுகாப்பு யுக்திகளைச் சீரமைப்பது  உட்பட அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்துள்ள புதிய மூன்று திட்டங்களை இரத்து செய்யுமாறு கத்தோலிக்க ஆயர்கள் அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இம்மாதம் 16ம் தேதி ஜப்பான் பிரதமர் Fumio Kishida அவர்கள், நாட்டின் பாதுகாப்பு யுக்திகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பாதுகாப்புக்கென்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக இரண்டு விழுக்காட்டை, அதாவது 320 பில்லியனுக்கு அதிகமான டாலரைச் செலவழிக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

மேலும், ஜப்பானின் ஆயுதபலத்தை நவீனமயமாக்குவது தவிர, நீண்டதூரம் செல்லும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் குறைந்தது 400 Tomahawk ஏவுகணைகளை வாங்குவதற்கும் இத்திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் அரசு அனுமதியளித்திருக்கும் இப்புதிய திட்டம், நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும், ஆபத்தானது என்றுகூறி, அதற்கு ஆயர்களின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு, பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஜப்பானின் இராணுவத்தை மிகஅதிக வல்லமைகொண்டதாக அமைக்கும் இத்திட்டம், அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்றும், இதனை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவராமல் அரசே இதற்கு இசைவு தெரிவித்திருப்பது மக்களாட்சிக்கு முரணானது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானின் தேசிய பாதுகாப்பு குறித்து அரசு அனுமதியளித்துள்ள மேலும் இரு ஆவணங்களின்படி, குறிப்பிட்ட சூழல்களில் எதிரிகளைத் தாக்குவதற்குரிய வல்லமையை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, இரஷ்யா உக்ரைனை ஆக்ரமித்து தாக்கிவருவதை எடுத்துக்காட்டாக ஜப்பான் அரசு முன்வைத்துள்ளது என செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2022, 12:33