தேடுதல்

தாக்கப்படும் பூர்வீக இனமக்களின் வீடு தாக்கப்படும் பூர்வீக இனமக்களின் வீடு  

சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

பொதுவெளியில் கிறிஸ்தவர்களைத் தாக்குவது, வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை அழிப்பது எனக் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த சில மாதங்களாக சத்தீஸ்கரில் அதிகரித்து வருகிறது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்தவர்களின் அடிப்படை உரிமைகள், வாழும் உரிமை, மனித உரிமைகள் ஆகியவைப் பறிக்கப்படுகின்றன என்று சத்தீஸ்கர் மாநிலக் கிறிஸ்தவ நல அமைப்பு கூறியுள்ளது.

ஆர் எஸ் எஸ்  மற்றும் பிற இந்து தேசியவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள வேளை, உள்ளூர் அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏறத்தாழ 1,000 கிறிஸ்தவர்கள் நாராயண்பூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே டிசம்பர் 18 அன்று முகாமிட்டிருந்த நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளது அவ்வமைப்பு.

கடந்த இரண்டு மாதங்களில் பஸ்தார் பகுதியில் உள்ள நாராயண்பூர் மற்றும் கொண்டேகான் மாவட்டங்களில் இருந்து ஏறத்தாழ 300 கிறித்தவக் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்று கூறியுள்ள அம்மாநிலக் கிறிஸ்தவ நல அமைப்பின் தலைவர் போதகர் மோசஸ் லோகன் அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கிறித்துவ மதத்தை கைவிட மறுத்தபோது கிராமங்களில் பொது மக்கள் தாக்கியதில்  காயமுற்றுள்ளனர் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

பொதுவெளியில் கிறிஸ்தவர்களைத் தாக்குவது, வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை அழிப்பது எனக் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த சில மாதங்களாக சத்தீஸ்கரில் அதிகரித்து வருகிறது என்றும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அவர்கள் அதை பதிவுசெய்ய மறுக்கிறார்கள் எனவும் கவலை தெரிவித்துள்ளார் போதகர் மோசஸ் லோகன்.

பல பூர்வீக இனமக்கள் தங்கள் சக கிராமவாசிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து கிறிஸ்தவ மதத்தை கைவிட்டுள்ளனர் என்றும், அதேவேளையில் கைவிட மறுத்தவர்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் போதகர் மோசஸ் லோகன்

சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் ஏறத்தாழ மூன்று கோடி மக்களில் 1.92 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (UCA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2022, 14:01