ஸ்டான் சுவாமி மரணம் குறித்த உண்மையான அறிக்கை அவசியம்
மேரி தெரேசா: வத்திக்கான்
இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் கணணியில் இணையதள சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து தவறான சான்றுகளைப் பதிவுசெய்திருப்பதை அமெரிக்க ஐக்கிய நாட்டு டிஜிட்டல் தொடர்புடைய சட்ட நிபுணர்கள் கண்டுபிடித்திருப்பதன் பின்புலத்தில், அவரின் தடுப்புக்காவல் இறப்புக்கு இந்திய ஒன்றிய அரசு முழு பொறுப்பை ஏற்கவேண்டும் என்று கத்தோலிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பீமா-கோரேகான் வழக்கில் மனித உரிமை ஆர்வலரான அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் கைதுசெய்யப்பட்டதற்குப் பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் சான்றுகள், அவரது கணணியின் Hard Disk அதாவது நிலைவட்டுவில், அவரைக் குற்றவாளியாகச் சித்தரிக்கும் பதிவுகள் திணிக்கப்பட்டுள்ளன என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாஸ்டன் நகரை மையமாகக் கொண்ட டிஜிட்டல் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
ஸ்டான் சுவாமிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சான்றுகளான "மாவோயிஸ்டுகளுக்கு கடிதங்கள்" எனப்படும் ஆவணங்கள் உட்பட 44 ஆவணங்கள், 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளில் malware எனப்படும் NetWire வழியாக அவரது கண்ணியில் புகுத்தப்பட்டுள்ளன என்று அந்த அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது.
இது குறித்து செய்தி நிறுவனங்களிடம் கருத்து தெரிவித்த இயேசு சபை வழக்கறிஞர் அருள்பணி ஜோசப் சேவியர் அவர்கள், குற்றவாளிகள் இக்குற்றத்தை Netwire வழியாக 2014ஆம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தொடங்கியுள்ளனர் என்றும், அவர்களால் சுவாமியின் கடவுச்சொல்லைத் திருட முடிந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
எனவே, சுவாமியின் இறப்பு குறித்த உண்மையான அறிக்கையை இந்திய அரசு வெளியிடவேண்டும் எனத் தாங்கள் விரும்புவதாக அருள்பணி சேவியர் உட்பட பல கத்தோலிக்க உரிமை ஆர்வலர்களும், அருள்பணியாளர்களும் ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பூர்வீகக்குடிகள் மற்றும், தலித் மக்கள் மத்தியில் பணியாற்றிய மனித உரிமைகள் ஆர்வலரான 84 வயது நிரம்பிய இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளோடு தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், 2020ஆம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி பயங்கரவாதத்திற்கெதிரான இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் (NIA) கைதுசெய்யப்பட்டார்.
மும்பை சிறையில் அவர் பல்வேறு உடல்சார்ந்த பிரச்சனைகளால் துன்புற்றபோது மருத்துவரீதியிலும் பிணையல் மறுக்கப்பட்டநிலையில் 2021ஆம் ஆண்டு ஜூலை 5ம் தேதி இறைபதம் சேர்ந்தார். (UCAN/Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்