தேடுதல்

இந்தியக் கத்தோலிக்க இளையோர் இந்தியக் கத்தோலிக்க இளையோர்  

நண்பருக்கு உணவூட்டு: இந்தியக் கத்தோலிக்க இளையோரின் புதிய திட்டம்

இந்தியக் கத்தோலிக்கர்கள் பண்பாடு, நம்பிக்கை, சாதி போன்ற வேறுபாடுகளைக் கடந்து, தங்களுக்கு அடுத்திருப்போருக்குப் பணியாற்றும் மக்களாக வாழ்கின்றனர்: Antony Judy.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியக் கத்தோலிக்க இளையோர் அமைப்புத் தொடங்கியுள்ள, ‘ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம்’ தனக்கு நிறைந்த மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ளார் தமிழகத்திலுள்ள கோட்டார் மறைமாவட்டத்தின் ஆயர் நசரேன் சூசை.

இந்தியாவின் மேகாலயாவில் தொடங்கப்பட்டுள்ள "Feed a friend", அதாவது, 'நண்பருக்கு உணவூட்டு' என்ற பெயரில் இந்தியக் கத்தோலிக்க இளையோர் இயக்கம் தொடங்கியுள்ள இத்திட்டத்தின் விழாவின்போது இவ்வாறு கூறியுள்ள இந்திய ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழுவின் தலைவர் ஆயர் நசரேன் சூசை அவர்கள், இம்முயற்சியானது, இந்தியாவில் உள்ள இளம் கத்தோலிக்கர்களின் நம்பிக்கையால் விளைந்த பயனாகும் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இயேசு என்னும் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பதைத் தங்களின் அடுத்திருப்போருக்கு காட்டவிரும்பும் புதிய வழிமுறை இது என்றும், கிறிஸ்துப் பிறப்பு விழாவைக் கொண்டாடுவதற்கும், பிறர் நலப்பணிகள் மீதான நம்பிக்கைக்கு சான்றாக இருப்பதற்கும் கடவுள் தமது அருளை தொடர்ந்து வாரி வழங்குகின்றார் என்றும் கூறியுள்ளார் ஆயர் நசரேன் சூசை.

இந்தியாவில் பலருக்குக் கவனிப்பும் அன்பும் தேவைபடுகிறது. ஆகவே, உணவின்றி தவிப்போருக்கு உணவளித்து உதவுவோம் என்று கூறியுள்ள இந்திய கத்தோலிக்க இளையோர் இயக்கத்தின் தேசியத் தலைவர் Antony Judy அவர்கள், கடவுள் நமக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளை நாமே வைத்துக்கொள்ளாமல் அவற்றைப் பிறருக்கும் பகிர்ந்தளிப்போம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் 50,000 பேருக்கு உணவளிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும், இதில் ஆர்வமுடன் ஈடுபட்டுவரும் இளையோரின் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தை கிறிஸ்துமஸ் காலத்திற்குப் பிறகும் நீட்டிக்க நாங்கள் பரிசீலனை செய்து வருகின்றோம் என்றும் கூறியுள்ள Antony Judy அவர்கள், இத்திட்டம் இந்தியாவின் அனைத்து மறைமாவட்டங்களிலும் பங்குத் தளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2022, 14:15