உரையாடல்வழி நீடித்த அமைதி உருவாகட்டும்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரைனில் நிகழ்ந்துகொண்டிருக்கும் போர் மனிதகுலத்திற்கு ஒரு மாபெரும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஐரோப்பாவிலுள்ள பிரிந்த சபைகள் மற்றும் தலத் திருஅவைகள் கூறியுள்ளன.
ஐரோப்பாவிலுள்ள பிரிந்த சபைகள் மற்றும் கத்தோலிக்கத் தலத் திருஅவைகள் கூட்டாக வெளியிட்டுள்ள இவ்வாண்டு கிறிஸ்துமஸ் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளதுடன், கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக உக்ரைன்மீது இரஷ்யா நிகழ்ந்தி வரும் போரினால் பல்வேறு இடங்களுக்குப் புலம்பெயர்ந்து சென்று துயருற்று வரும் மக்கள்மீது தங்களின் கவனத்தைச் செலுத்துவதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இன்று நாம் எதிர்கொண்டுவரும் இந்தப் போர் இருள் சூழ்ந்த நிலையை உருவாகியுள்ளபோதிலும், கிறிஸ்துமஸ் இன்னும் நம்பிக்கையின் வாக்குறுதியைத் தருகிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் Jean-Claude Hollerich அவர்களும், பிரிந்த சபைகளின் தலைவர் Christian Krieger அவர்களும் கையெழுத்திடப்பட்டுள்ள இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுங்குளிராலும், பசியாலும் துயருற்றுவரும் உக்ரேனிய மக்கள் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறும், இதன் வழியாக ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் பகைமை உணர்வை விடுத்து அனைத்துலக சமூகத்தின் உதவியுடன் உரையாடலுக்குத் திறந்த மனதுடன் முன்வருவதற்கான சூழல் உருவாகட்டும் என்றும் அச்செய்தியில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அர்த்தம் தரும் இந்தக் கிறிஸ்துமஸ் விழா நாட்களில், ‘பூவுலகினிலே நன்மனத்தவர்க்கு அமைதி ஆகுக’! என்ற வானதூதரின் வாழ்த்துரையை அன்புடனும் நம்பிக்கையுடன் வரவேற்கவும், மற்றும் நீதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான பாதையில் ஒரு திருப்பயணியாக வாழ்வதற்கு நம்பிக்கையாளர்கள் அனைவரையும் அழைப்பதாக WCC எனப்படும் உலகத் திருஅவைகளின் அமைப்பும் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் விண்ணப்பித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்