இந்தியாவில் குப்பைத்தொட்டிகளில் வீசப்படும் பச்சிளங்குழந்தைகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பொது நலனுக்காக ஒரு பங்களிப்பாளராக விரும்பப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் திருப்பீட வாழ்வுக் கழகத்தின் உறுப்பினர் Dr. Pascoal Carvalho.
இந்தியாவின் நகரங்களிலும், கிராமங்களிலும், இன்னும் பிற பகுதிகளிலும் பச்சிளங்குழந்தைகள் குப்பைத்தொட்டிகளிலும் ஆளரவமற்ற இடங்களிலும் தூக்கிவீசப்படும் அவலநிலைக் குறித்து கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் Dr. Pascoal Carvalho.
ஒரு வளர்ந்த சமூகம் என்பது, அதன் தனிநபர் வருமானத்தால் அல்ல, மாறாக உணர்வு மற்றும் பொருள் தேவைகளுடன் போராடுபவர்களுக்கான ஆதரவு அமைப்புகள் நம்மிடம் உள்ளதா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் Dr. Carvalho.
பச்சிளங்குழந்தைகளைக் குப்பைத் தொட்டிகளில் வீசியெறியும் செயல் கிராமப்புற நகரங்களில் மட்டுமல்ல, மாறாக, இது வளர்ச்சியடைந்த பெருநகரங்களிலும் காணப்படுகின்றது என்று கூறியுள்ள Dr. Carvalho அவர்கள், நமது வளர்ச்சி மேலும் மேலும் உயரும்போது நாம் தனிமனிதராக மாறுக்கின்றோம் என்றும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மீது அக்கறை இல்லாது செயல்திறனற்று வாழ்கின்றோம் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
இளம் பெற்றோர்கள் வேலையில் இருக்கும்போது அவர்களின் குழந்தைகளை வளர்ப்பதில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு நம்மைச் சுற்றிப் போதுமான அளவிற்கு நிறுவனங்கள் இல்லை. அன்னை தெரேசாவின் பிறரன்பு சபை சகோதரிகளால் மட்டுமே எல்லாவிடங்களிலும் இக்காரியத்தில் உதவ முடியாது என்றும், எதிர்கால தலைமுறையினருக்கு உதவும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே உள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார் Dr. Carvalho.
பயணமாகும் திருஅவை நம் அனைவரின் வலுவின்மையைத் தழுவி இரக்கத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும், ஏங்கும் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கு நாம் திறந்த மனதுள்ளவர்களாய் இருப்பதற்கு நமக்கு அழைப்பு விடுக்கிறது என்றும், இவ்வாறு திருஅவை மற்றும் சமூகத்தில் ஒரு புதிய எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் கொண்டுவருகிறது என்றும் விளக்கியுள்ளார் Dr. Carvalho.
மும்பை, டெல்லி, கோவா என எந்த நகரமாக இருந்தாலும், கைவிடப்பட்ட பச்சிளங்குழந்தைகள், அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகள், குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டு, விலங்குகளுக்கு இரையாகி வருகின்றன. இவ்வாறு வீசப்படும் ஏறத்தாழ முப்பது இலட்சக் குழந்தைகளில், இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே மீட்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றனர். (ASIAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்