மியான்மார் புலம்பெயர்ந்தோர் மியான்மார் புலம்பெயர்ந்தோர் 

கர்தினால் போ: மியான்மார் திருஅவை காயமுற்றுள்ளது

மியான்மாரில் இவ்வாண்டு மே, ஜூன் ஆகிய மாதங்களில் வரலாற்று சிறப்புமிக்க இரு கத்தோலிக்க கிராமங்களில் குறைந்தது 800 வீடுகள் இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான்

போரினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மியான்மாருக்காக இறைவேண்டல் செய்யவும், தேவையில் இருப்போருக்கு உதவவும் வேண்டும் என்று அந்நாட்டு யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

டிசம்பர் 08, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட தூய கன்னி மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவன்று Anesakahanலுள்ள சகாய அன்னை திருத்தலத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் போ அவர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ளவேளை, மியான்மார் திருஅவை காயமுற்றுள்ளது மற்றும், புலம்பெயர்ந்துள்ளது என்று கூறினார். 

இத்திருப்பலியில் சலேசிய சபையின் இரு திருத்தொண்டர்களுக்கு அருள்பணித்துவ திருப்பொழிவை வழங்கிய, சலேசிய சபை கர்தினாலாகிய போ அவர்கள், மியான்மாரில் கடந்த ஆண்டில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்புலத்தில் தொடங்கிய வன்முறையால் கிராமங்கள் எரிக்கப்பட்டுள்ளன, மற்றும், ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதனால் 11 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்களின் வீடுகளைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ளனர் என்றுரைத்த கர்தினால் போ அவர்கள், இருள், மற்றும், துன்பங்களுக்கு மத்தியில் தலத்திருஅவை காயமடைந்துள்ளது மற்றும், புலம்பெயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மியான்மாரில் அமைதி, உரையாடல், மற்றும், ஒப்புரவுக்கு அழைப்புவிடுத்துள்ள, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவருமாகிய கர்தினால் போ அவர்கள், அன்பும் ஒப்புரவும் மட்டுமே அந்நாட்டிற்குத் தேவைப்படுகின்றன என்றும், இனம், மதம் என்ற வேறுபாடின்றி தேவையில் இருப்போருக்கு உதவுமாறும் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

2021ஆம் ஆண்டில் மியான்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து புலம்பெயர்ந்துள்ள 11 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உட்பட, அந்நாட்டில் 14 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்று, இம்மாதம் 3ம் தேதி ஐ.நா.வின் மனிதாபிமான அலுவலகம் அறிவித்துள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2022, 14:35