தேடுதல்

எருசலேமிலுள்ள முதுபெரும் தந்தையர் எருசலேமிலுள்ள முதுபெரும் தந்தையர் 

மனுவுரு எடுத்தல் வழியாக கிறிஸ்து இவ்வுலகின் துன்பங்களை ஏற்றார்

கிறிஸ்து பிறந்த இந்தப் புனிதப் பூமியில் எங்களின் மேய்ப்புப் பணியின் கீழ் வரும் அனைத்துக் கிறிஸ்தவர்களையும் அக்கறையுடன் கவனித்துக்கொள்கின்றோம் : எருசலேம் முதுபெரும் தந்தையர்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

முழு மனிதத்தன்மையையும் முழு கடவுள் தன்மையையும் வெளிப்படுத்தும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அனைத்து மக்கள் மீதும் கடவுளின் ஆழமான மற்றும் நிலையான அன்பை மனுகுலத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது என்று, எருசலேமிலுள்ள இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையர்களும் கிறிஸ்தவச் சபைகளின் தலைவர்களும் கூறியுள்ளனர்.

கிறிஸ்து பிறப்பு குறித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள முதுபெரும் தந்தையர்கள், இந்த இரக்கச் செயலின் வழியாக, கிறிஸ்து உலகின் துன்பங்களைத் தானே ஏற்றுக்கொண்டார் என்றும், வாழ்க்கையின் பல போராட்டங்களைத் திருக்குடும்பத்துடன் சகித்துக்கொண்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.

நம் காலத்திலும் இதேபோன்ற துன்ப துயரங்கள் உலகத்தைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன என்றும் உக்ரைன், ஆர்மீனியா, சிரியா, புனித பூமி போன்றவை அதற்கு எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன என்றும் கூறியுள்ள முதுபெரும் தந்தையர், கிறிஸ்து பிறந்த இந்தப் புனிதப் பூமியில் எங்களின் மேய்ப்புப் பணியின் கீழ் வரும் அனைத்துக் கிறிஸ்தவர்களையும் அக்கறையுடன் கவனித்துக்கொள்கின்றோம் என்றும் எடுத்துரைத்துள்ளனர்.

இன்றைய இளையோருக்குக் கிறிஸ்து மனுவுரு எடுத்த நம்பிக்கையின் செய்தியை கலங்கரை விளக்கமாக வழங்குவதோடு, நம் இறைவன் நம்மோடும், நமக்காகவும் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்து வருகிறார் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறோம் என்றும் அவருடைய உயிர்ப்பின் ஒளியில் புதிய வாழ்வுக்கு நாம் அனைவரும் வழிநடத்தப்படுகிறோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அனைத்திற்கும் மேலாக, கிறிஸ்துவின் கரங்களாகவும், கைகளாகவும், கால்களாகவும்  உருவாக்க்கப்பட்டுள்ள நமது தலத் திருஅவைகள் தங்கள் வழிபாட்டுப்  பணிகள், கல்வி மற்றும் நலப்பணிகள், திருப்பயண மையங்கள் மற்றும் இன்னும் வழிகளில் மனித குலத்திற்கு ஆறுதல், வலிமை மற்றும் ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன என்றும் கூறியுள்ளனர். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2022, 15:17