கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்  

இயேசுவின் பிறப்பு மனிதர் மீதுள்ள கடவுளின் அன்பை அறிவிக்கிறது

பயம் மற்றும், நிச்சயமற்ற தன்மையின் நிழலால் இருளடைந்துள்ள ஓர் உலகில் இயேசுவின் பிறப்பு, நம்பிக்கையின் வல்லமைமிக்க அடையாளம் - கர்தினால் நிக்கோல்ஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

பயம் மற்றும், நிச்சயமற்ற தன்மையின் நிழலால் இருளடைந்துள்ள ஓர் உலகில் இயேசுவின் பிறப்பு, நம்பிக்கையின் வல்லமைமிக்க அடையாளம் மற்றும் செய்தி என்று, இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டர் பேராயரும், இங்கிலாந்து மற்றும், வேல்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவருமான கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், என்றென்றுமுள்ள வார்த்தையின் மனுஉரு எடுத்தலில், கடவுள் ஒவ்வொரு மனிதர் மீதுள்ள தம் அன்பை தெளிவான முறையில் பொதுப்படையாக அறிவிக்கிறார் என்று கூறியுள்ளார்.

கடவுள் நம்மீது வைத்துள்ள எல்லையற்ற அன்பு என்னும் கொடைக்கு நம் தாராளமான பதில் என்ன என்பது குறித்து தன் செய்தியில் விளக்கியுள்ள கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், மாபெரும் கிறிஸ்மஸ் பெருவிழாவில் நுழைந்துள்ள இவ்வேளையில், நமக்காக கடவுள் வைத்துள்ள அன்பு பற்றியே சிந்திக்கத் தூண்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

என்றென்றுமுள்ள கடவுள் தம் அன்புக்குள் நம்மை ஈர்க்க விரும்புகிறார் எனவும், இந்த அன்பு அவரிலிருந்து பிறந்து அவரிடமே திரும்புகிறது என்றும் குறிப்பிட்டுள்ள கர்தினால், நம் இதயங்கள் அனைத்தும் இறையன்பால் நிரம்பவேண்டும் என்ற தன் ஆவலைத் தெரிவித்து செய்தியை நிறைவுசெய்துள்ளார். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2022, 14:14