தேடுதல்

இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்  

ஒடிசாவில் புதுப்பொலிவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கிறிஸ்தவர்கள்

பிற மதத்தைச் சேர்ந்த பூர்வீக இனமக்கள் பலரும் குடிலில் புதிதாகப் பிறந்த கிறிஸ்து அரசருக்கு வணக்கம் செலுத்தும் பொருட்டு கரங்களில் மெழுகுவர்த்திகளை ஏந்தி வந்தனர் : அருள்பணியாளர் Singh.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளுக்குப் பிறகு ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் இவ்வாண்டு கிறிஸ்தவர்கள் புதுப்பொலிவுடன் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடியுள்ளதாக ஆசிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Madan Singh.

கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் கந்தமால் மற்றும் சுந்தர்கர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களில், நள்ளிரவுத் திருப்பலி மற்றும் ஆராதனை வழிபாடுகள் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டன என்றும், அத்துடன் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Madan Singh.

கிறிஸ்துமஸ் அன்று மாலையில், ஒவ்வொரு பங்குத் தளமும் கிறிஸ்து பிறப்புக் குறித்த கலைநிகழ்ச்சிகளை நடத்தியது என்றும், கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி, பிற மதத்தைச் சேர்ந்த பூர்வீக இனமக்கள் பலரும்  குடிலில்  புதிதாகப் பிறந்த கிறிஸ்து அரசருக்கு வணக்கம் செலுத்தும் பொருட்டு கரங்களில் மெழுகுவர்த்திகளை ஏந்தி வந்தனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்பணியாளர் Madan Singh.

கிறிஸ்துமஸ் விழாவை மீண்டும் ஒன்றிணைந்துக் கொண்டாட மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர் என்றும், வழிபாடுகளின்போது எவ்விதமான அசம்பாவிதனங்களும் நிகழ்ந்துவிடாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் அமைதி குழுவினருடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தது என்றும், அதேவேளையில் காவல் துறையும் மிகவும் விழிப்புடன் செயல்பட்டது என்றும் கூறியுள்ளார் அருள்பணியாளர் Madan Singh.

புவனேஸ்வரிலுள்ள புனித வின்சென்ட் பேராலயத்தில் பல்வேறு மதத்தைச் சேர்த்த எண்ணற்ற மக்கள் குழந்தை இயேசுவைக் காண நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என்றும், மணல் சிற்பக்கலைஞர் Sudarshan Patnaik அவர்களால் உலகிலேயே அதிக உயரமான, அதாவது, 18 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் Gopalpur கடற்கரையில் வடிவமைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார் அருள்பணியாளர் Madan Singh. (ASIAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2022, 14:55