தேடுதல்

திருச்சிலுவை  திருச்சிலுவை  

உலகளவில் கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகள் தொடர்ந்து அதிகரிப்பு

2021ஆம் ஆண்டில் உலகளவில் 36 கோடிக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகில், குறிப்பாக ஆசிய மற்றும், ஆப்ரிக்க நாடுகளில் கிறிஸ்தவர்க்கெதிரான சித்ரவதைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று, ஓர் உலகளாவிய அமைப்பு வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக உலகில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்ற Open Doors International என்ற உலகளாவிய அமைப்பு, உலகளவில் இடம்பெறும் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் குறித்து வெளியிட்டுள்ள  அறிக்கையில் கோவிட்- 19 பெருந்தொற்று, கிறிஸ்தவர்க்கெதிரான பாகுபாட்டை அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

நெதர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும், எக்கிறிஸ்தவ சபையையும் சார்ந்திராத இவ்வமைப்பு, 2022ஆம் ஆண்டின் உலகளாவிய பட்டியல் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், வரலாற்றில் 2021ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மிக மோசமாக இடம்பெற்றுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக அதிகமாகத் துன்பங்களை அனுபவித்த ஐம்பது நாடுகளைப் பட்டியலிட்டுள்ள அவ்வமைப்பு, 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த ஆய்வை நடத்தியது.

உலகில் 36 கோடிக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள், அதாவது உலகளவில் ஏழு பேருக்கு ஒருவர் சித்ரவதை மற்றும் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர் என்றும், மொத்தத்தில்  5,898 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 5,110 ஆலயங்கள் தாக்கப்பட்டன அல்லது மூடப்பட்டன, 6,175 கிறிஸ்தவர்கள் எவ்வித விசாரணையுமின்றி கைதுசெய்யப்பட்டனர் மற்றும், 3,829 பேர் கடத்தப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப்பின் அந்நாடு உலகில் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது எனவும், வட கொரியாவில் Kim Jong-Unன் ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நிலைமை மோசமடைந்து வருவதாகவும், நைஜீரியாவிலும், நிஜர், புர்க்கினா ஃபாசோ, மாலி ஆகிய சஹாராவையடுத்த நாடுகளிலும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதாகவும், அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் 4650 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலகில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது எனவும், இந்தியாவிலும் இவ்வன்முறை அதிகரித்து வருகிறது எனவும் அவ்வமைப்பு கூறியுள்ளது (Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2022, 14:17