காங்கோவில் வன்முறைக்கு எதிராக கத்தோலிக்கர் போராட்டம்
மேரி தெரேசா: வத்திக்கான்
காங்கோ சனநாயக குடியரசின் ஆயர் பேரவையின் ஆதரவோடு, டிசம்பர் 4 இஞ்ஞாயிறன்று தேசிய அளவில் அமைதியான முறையில் நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர் கலந்துகொண்டு, அந்நாட்டில் அதிகரித்துவரும் வன்முறைக்கு எதிரான தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
ஆப்ரிக்க நாடான காங்கோ சனநாயக குடியரசின் கிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பற்ற சூழல்கள் குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளதோடு, அப்பகுதிகளில் இடம்பெறும் வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவலுக்கு எதிராகவும் கத்தோலிக்கர் குரல் எழுப்பியுள்ளனர்.
இவ்வாண்டு நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை நடத்திய அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், அந்நாட்டின் North Kivu மற்றும் Ituri மாநிலங்களிலுள்ள வளமையான கனிவளங்கள் வெளிநாட்டு சக்திகளை ஈர்த்துள்ளதால், அப்பகுதிகளின் பாதுகாப்பு கேள்விக்குரியதாய் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டில் அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு எதிராகத் தங்களின் கண்டனங்களைத் தெரிவிக்கும் பேரணிகளை அமைதியான முறையில் நாடெங்கும் நடத்துமாறும் ஆயர்கள் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், இந்நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறையால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஆண்டு சனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை அந்நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தில், கோமா பகுதிக்குச் செல்லமாட்டார், அதற்குப் பதிலாக வருகிற பிப்ரவரி முதல் தேதியன்று அப்பகுதியின் வன்முறைகளில் பாதிக்கப்பட்டோரை கின்ஷாசா திருப்பீடத் தூதரகத்தில் திருத்தந்தை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்