தாய்லாந்து அரசுக்கு கத்தோலிக்க ஆயர்கள் நன்றி
மெரினா ராஜ் -வத்திக்கான்
தாய்லாந்து கத்தோலிக்கத் தலத் திருஅவையின் மனிதாபிமான மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்காக நன்றியினைத் தெரிவித்துள்ளார் கர்தினால் பிரான்சிஸ் சேவியர்.
டிசம்பர் 02, வெள்ளிக்கிழமை பாங்காகின் பேராயரான கர்தினால் Francis Xavier Kriengsak Kovitvanit அவர்கள், தாய்லாந்து நாட்டின் பிரதமர் Prayut Chan-o-cha அவர்களைச் சந்தித்து, புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் தென்கிழக்கு ஆசிய நாட்டில் கத்தோலிக்க தலத்திரு அவையின் நடவடிக்கைகளுக்கு அரசு தரும் ஆதரவிற்கு நன்றியினைத் தெரிவித்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (FABC) 50வது பொது மன்றம் உட்பட பல்வேறு உலகளாவிய தலத்திரு அவைக் கூட்டங்களின்போதும் அரசின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த கர்தினால் பிரான்சிஸ், அரசின் இன்முக வரவேற்பு, நாட்டில் உள்ள பன்முகத்தன்மை கொண்ட மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு மத்தியில் மக்கள் அமைதியாக இணைந்து வாழ்வதற்கு உதவி போன்றவற்றையும் எடுத்துக் கூறினார்.
பல்வேறு பணிகளுக்கு ஆதரவளித்தல், வசதிகளை செய்துதருதல், கத்தோலிக்க ஆலய முன்னேற்றத்தை ஊக்குவித்தல் தொடர்புடைய நபர்களை நியமித்தல் உட்பட பல நற்செயல்களை தாய்லாந்து அரசு செய்து வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து நிர்வாகம், மத நல்லிணக்கத்தை வளர்க்கும் முயற்சியில் 93 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு மூன்று கத்தோலிக்க ஆலயங்களான பாங்காக்கில் உள்ள திருத்தூதர் புனித தோமையார் ஆலயம், நான் மாநிலத்தில் உள்ள புனித மோனிக்கா ஆலயம், Phraeஇல் உள்ள தொழிலாளர் புனித யோசேப்பு ஆலயம் போன்றவற்றிற்கு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து நாடு 1929ஆம் ஆண்டு வரை 57 கத்தோலிக்க ஆலயங்களை அங்கீகரித்தது, தற்போது அதன் எண்ணிக்கை எண்ணிக்கை அறுபதாக உயர்ந்துள்ளது.
2019ஆம் ஆண்டு நிலவரப்படி, தாய்லாந்தில் சுமார் 388,000 கத்தோலிக்கர்கள் உள்ளனர், இது நாட்டில் உள்ள சுமார் 6 கோடியே 90 இலட்சம் மக்களில் 0.5 விழுக்காடாகும். தாய்லாந்தில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை இரண்டு பேராயர்களையும், ஒன்பது மறைமாவட்டங்களையும், 502 பங்குத்தளங்களையும் கொண்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்