வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காரித்தாஸ் உதவி
மெரினா ராஜ் - வத்திக்கான்
பேரழிவு தரும் மழையால் நாட்டில் மூன்றில் ஒரு பகுதி மூழ்கடிக்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மக்கள் அடிப்படை உதவித் தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் பேராயர் பென்னி மாரியோ ட்ரவாஸ் (Benny Mario Travas).
டிசம்பர் 01, வியாழன் பாகிஸ்தான் நாட்டின் கராச்சிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் கராச்சியின் பேராயரான பென்னி மாரியோ.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையின் பாதிப்பினால் பாகிஸ்தானின் கராச்சி மக்கள் இன்று வரை பெரிதும் துன்புறுகின்றனர் எனவும், மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், அடிப்படை தேவைகளான உணவு, உடை, தங்குமிடம், நீர் போன்றவையின்றி மக்கள் இன்னும் தவிக்கின்றனர் எனவும் கூறியுள்ளார் கராச்சி பேராயர்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆலயங்களில் இடமளித்தும், உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளை அளித்தும் அருள்பணியாளர்கள் செய்து வரும் பணியால் பயன்பெறும் குடும்பங்கள் நூற்றுக்கும் அதிகமானோர் எனவும் குறிப்பிட்டுள்ள பேராயர், தன்னலமின்றி, கராச்சி காரித்தாஸ் வழியாக பணியாற்றி வரும் அருள்பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கு தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
உணவு உடை மட்டுமல்லாமல் உடல் நலனைக் காக்கும் மருத்துவ உதவிகளையும், முதல் நிலைக்கருவிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வரும் காரித்தாஸ் அமைப்பு, கடினமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது கருணையையும் அக்கறையையும் காட்டுகின்றது என்றும் கூறியுள்ளார் பேராயர் பென்னி மாரியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்