நிதி உதவியே சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஐரோப்பிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் நிவர்த்தி செய்யும் திறனில் தற்போதைய வாழ்க்கைச் சூழல் ஒற்றைப் பெற்றோர், ஓய்வூதியம் பெறுவோர், இளையோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது என்று ஐரோப்பாவிற்கான காரித்தாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
ஐரோப்பாவின் காரித்தாஸ் அமைப்பு, Eurodiaconia எனப்படும் அரசுச் சாரா அமைப்பு ஒன்றுடன் இணைந்து வெளியிட்டுள்ள இப்புதியதொரு கணக்கெடுப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் பிரான்ஸ், பின்லாந்து மற்றும் ஸ்டாக்ஹோம் நாடுகளிலுள்ள காரித்தாஸ் நிறுவனங்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றனர் என்றும் இக்கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒற்றை பெற்றோர்கள், இடம்பெயர்ந்த பின்னணி கொண்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோர் உண்மையான நெருக்கடியின் கடுமையான விளைவுகளைச் சந்தித்தவர்கள் என்று இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் ஐரோப்பா காரித்தாஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் Maria Nyman.
மேலும், இம்மக்கள் ஏற்கனவே வறுமையின் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்றும், உணவு வாங்குதல், வாடகை செலுத்துதல், கடுங்குளிரின்போது தங்கள் இல்லங்களை வெப்பமாக்குதல் ஆகிய தங்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்துகொள்வதில் அதிக சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார் Nyman.
இந்தச் சமூகத் தேவைகளை நிதியுதவி பெறுவதன் வழியாகவே ஈடுசெய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறியுள்ள Nyman அவர்கள், ஒவ்வொரு நபரும் மனித மாண்புடன் வாழவும் அவர்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறவும் உரிமை உண்டு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்