உக்ரைன் போர், ஐரோப்பாவின் இதயத்தில் காயத்தை உருவாக்கியுள்ளது

உக்ரைனில் இடைக்காலப் போர் நிறுத்தம் ஏற்பட, திருஅவைகள் என்ற முறையில் ஆயர்கள் தங்களால் இயலக்கூடிய அனைத்தையும் ஆற்றவேண்டும் - கர்தினால் Hollerich

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், ஐரோப்பாவின் ஆன்மாவிலும் இதயத்திலும் ஏற்படுத்தியுள்ள காயம் என்று, EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள், டிசம்பர் 12, இத்திங்களன்று தெரிவித்துள்ளார்.

இக்கூட்டமைப்பின் ஐந்து ஆண்டுகாலத் தலைமைப்பணியை நிறைவுசெய்யவுள்ள கர்தினால் Hollerich அவர்கள், இப்பணியில் தான் எதிர்கொண்ட சவால்கள் மற்றும், இரஷ்யாவுக்கும் உக்ரைனைக்கும் இடையே இடம்பெற்றுவரும் போர் நிறுத்தப்பட்டு அமைதி நிலவ ஆயர்கள் தொடர்ந்து விடுத்துவரும் விண்ணப்பம் குறித்து வத்திக்கான் செய்திகளிடம் பகிர்ந்துகொண்டார்.

உக்ரைனில் மக்கள் தினமும் இறக்கின்றனர், காயமடைகின்றனர், குளிரால், பசியால் மற்றும், தாகத்தால் துன்புறுகின்றனர் என்றும், இதனால் இடைக்காலப் போர் நிறுத்தம் ஏற்பட, திருஅவைகள் என்ற முறையில் ஆயர்கள் தங்களால் இயலக்கூடிய அனைத்தையும் ஆற்றவேண்டும் என்றும் கர்தினால் Hollerich அவர்கள் கூறியுள்ளார்.

உக்ரைனில் அமைதி எவ்வளவு விரைவில் இடம்பெறுகிறதோ அவ்வளவுக்கு அது மக்களுக்கு நல்லது என்றும், உக்ரைனில் போர் நடந்துகொண்டிருக்கும்போது ஐரோப்பா, அமைதியை ஊக்குவிப்பதில் முதன்மை வகிக்கிறது என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார், கர்தினால் Hollerich.

உக்ரைன் போர், அந்நாட்டு மக்களை மட்டும் காயப்படுத்தவில்லை, மாறாக, ஐரோப்பாவின் இதயத்திலும் ஆன்மாவிலும் ஒரு காயத்தை உருவாக்கியுள்ளது என்றும் உரைத்துள்ள கர்தினால், ஐரோப்பாவில் பல கத்தோலிக்கர் புலம்பெயர்ந்தோரை வரவேற்றுள்ளது மகிழ்ச்சி தருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

COMECE எனப்படும் அக்கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் Hollerich அவர்கள், அதன் நிர்வாகக் குழுவினரோடு இத்திங்களன்று திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடியபின்னர் வத்திக்கான் வானொலிக்கு வருகை வந்து உக்ரைன் போர் குறித்துப் பேசினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2022, 14:23